ரிஹ்மி ஹக்கீம்

அத்தனகல்ல பிரதேச சபைக்கு உட்பட்ட கஹட்டோவிட்ட கிராம மக்களிடமிருந்து கடந்த 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மொத்தமாக ரூபா 1,528,770.18 வரிப்பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அத்தனகல்ல பிரதேச சபை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் நாம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் அண்மையில் அத்தனகல்ல பிரதேச சபைக்கு அனுப்பிய விண்ணப்பத்திற்கு அனுப்பிய பதிலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மெகொடபொத உப காரியாலயம் (ஊராபொல) வழங்கிய தகவல்களின் அடிப்படையில் அத்தனகல்ல பிரதேச சபை குறித்த விடயத்தை தெரிவித்துள்ளது.

2017 முதல் 2022 வரை ஆண்டு ரீதியில் நாம் தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுத்தமைக்கு அமைவாக அத்தனகல்ல பிரதேச சபை இவ்வாறு தரவுகளை ஆவணப்படுத்தி அனுப்பியுள்ளது.

மேலும் அத்தனகல்ல பிரதேச சபைக்கு கிடைத்த மொத்த வரிப்பண வருமானம் தொடர்பிலும் நாம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அத்தனகல்ல பிரதேச சபைக்கு ஒவ்வொரு ஆண்டிலும் (2017 - 2022) ஒவ்வொரு உப காரியாலயம் ஊடாகவும் கிடைத்த வரிப்பண வருமானம் தொடர்பிலான தரவுகளை எமக்கு வழங்கியிருந்தது.

எமது RTI விண்ணப்பத்திற்கு அத்தனகல்ல பிரதேச சபை அனுப்பியுள்ள தகவல்களின் அடிப்படையில், 2017 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் அத்தனகல்ல பிரதேச சபைக்கு கிடைத்த மொத்த வரிப்பண வருமானம் ரூபா 120,060,502.37 ஆகும். 

இதில் கஹட்டோவிட்ட கிராம மக்களிடமிருந்து (கஹட்டோவிட்ட 369 மற்றும் கஹட்டோவிட்ட 369 ஏ கிராம சேவகர் பிரிவுகள்) வசூலிக்கப்பட்ட ரூபா 1,528,770.18 வரிப்பணம் வருமானமும் உள்ளடங்கும். 

எமது RTI விண்ணப்பத்திற்கு உரிய காலத்திற்குள் (14 நாட்கள்) துரிதமாக ஆவணங்கள் ஊடாக பதில் வழங்கிய அத்தனகல்ல பிரதேச சபை அதிகாரிகளின் பணியை பாராட்ட வேண்டும்.

பல அரச நிறுவனங்களின் தலைவர்களிடத்தில் கூட RTI தொடர்பில் போதிய தெளிவின்மை காணப்படுகிறது. முக்கியமாக சில கல்வி சார் அரச நிறுவன தலைவர்களிடத்தில் இந்நிலையை கண்டுள்ளோம். 

மேலும் நாட்டிலுள்ள முக்கிய ஆணைக்குழு ஒன்று கூட நாம் அனுப்பிய விண்ணப்பம் ஒன்றிற்கு பதில் வழங்காது பல மாதங்கள் இழுத்தடித்து வருகின்றமையை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 

இவர்கள் அத்தனகல்ல பிரதேச சபையிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.