நல்லாட்சிக்காக ஒன்றிணைந்த ஐக்கிய தேசிய முன்னணியுடனான தேசிய அரசாங்கத்தை நிறுவுவதற்கான யோசனை, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம், நேற்றைய தினம் (31) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியுடன், அதன் கொள்கைகளோடு இணங்கும் கட்சி அல்லது கட்சிகளை ஒன்றிணைந்து, இந்தத் தேசிய அரசாங்கம் உருவாக்கப்படுமென, நாடாளுமன்றப் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட பாரிய கடன்களைச் செலுத்தி, நாட்டு மக்களுக்கு, உயர்ந்தபட்ச நிவாரணங்களை வழங்குவதற்கும் நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கும் விரும்பும் அனைத்துக் கட்சிகளும், இந்தத் தேசிய அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள முடியுமென, அவை முதல்வரும் அரச தொழில் முயற்சி, கண்டி மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, அழைப்பு விடுத்துள்ளார். நல்லாட்சிக்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணியோடு இணைந்து, தேசிய அரசாங்கத்தில் இணையும் கட்சிகள் என்னவென, அந்த அரசாங்கத்தை உருவாக்குவற்கான யோசனை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படும் போது கூறுவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
(TamilMirror)