சஊதி – துஹா முரண்பாடு தொடர்பாக வெளியிட்ட ட்விட்டர் செய்திக்காக சமயப் போதகர் சல்மான் அவ்தா மீது மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என அவரது வழக்கறிஞர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அறிஞர் அவ்தாவின் வழக்கறிஞர்களான மார்க் போனான், ஃப்ரான்வாஸ் ஜிம்ரா, ஜெசிகா ஃபின்னெல் ஆகியோர் இணைந்து பாரிஸ் நகரில் வெளியிட்ட அறிக்கையில் ‘அவ்தா மீதான விசாரணை சஊதிய அரசு கருத்துச் சுதந்திரத்திற்காக போராடிவரும் புத்திஜீவிகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நீதித்துரைத் துன்புறுத்தல் கொள்கையின் கீழ் உள்ளடங்கும் ஒன்றாகும்’ என வலியுறுத்தியுள்ளனர்.
ஃப்ரான்வாஸ் ஜிம்ரா கூறுகையில் ‘இன்று ஞாயிற்றுக் கிழமை விசேட அமர்வொன்று ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை நாம் அறியோம். அத்துடன் சஊதி வழக்கறிஞர்கள் வெளியுலகுடன் தொடர்பு கொள்ளவும் தடைவிதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார். அவர் தொடர்கையில் ‘இது ஒரு சாதாரண அமர்வாகவும் இருக்கலாம். அதேபோல் அவ்தா மீது மரணதண்டனை விதிப்பதற்கான இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் அமர்வாகவும் அமையலாம். ஏனெனில் அவ்தா செப்தம்பர் 2017 ல் கடார் சஊதிப் பிரச்சினை முடிவுக்கு வரலாம் என தனது ட்விட்டரில் பாராட்டி எழுதியிருந்தார்.
கடார் அமீருக்கும் சஊதி முடிக்குரிய இளவரசருக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நிகழ்ந்ததாக வந்த செய்தியைத் தொடர்ந்து சல்மான் அவ்தா ‘இறiவா உள்ளங்களை இணைத்து வைப்பாயாக’ எனப்பிரார்த்தித்து வெளியிட்ட ட்விட்டர் செய்தியைத் தொடர்ந்து அவரும் அவருடன் இன்னும் முக்கியமான இருபது அறிஞர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவ்தாவின் குடும்பத்தினர் வெளியிடும் தகவலின்படி ‘சஊதி அரசு அவ்தாவிடமும் அவருடன் கைது செய்யப்பட்ட ஏனையவர்களிடமும் சஊதி கட்டார் பிரச்சினையில் சஊதிக்கு சார்பாக வெளிப்படையான உதவியை வேண்டிய போது அவர் அதை நிராகரித்துள்ளமை’ அவர் மேல் மரண தண்டனை விதிக்கப்பட காரணமாக இருக்கலாம்.
சஊதியின் பொது நீதி மன்றம், முன்வைக்கப்பட்ட 37 குற்றச் சாட்டுக்களின் அடிப்படையில் அவ்தாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்ட கடந்த செப்தம்பர் மாதம் முதல் கூறிவருகிறது. அவ்தாவின் மகன் தரும் தகவலின் படி அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்களில் பின்வருவன சிலவாகும்.
அரசருக்காகப் பிரார்த்திக்காமை, அரசரை வற்புறுத்தும் கடிதமொன்றினை தனது தொலைபேசியில் பெற்றிருந்தமை, அவரது நூலகத்தில் தடை செய்யப்பட்ட புத்தகங்கள் இருந்தமை, குலப்பத்தை ஏற்படுத்தியமை, முஸ்லிம் அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியத்தில் இணைந்திருந்தமை, நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் கேலிச் சித்திரம் வரைந்த பிரச்சினையின் பின் நபியவர்களைப் பாதுகாப்பதற்காக குவைத்தில்; அந்நுஸ்ரா அமைப்பை நிறுவுவதில் பங்கு கொண்டமை.
அண்மைக் காலமாக சஊதி அரசு மேற்கொண்டுவரும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் அதன் நீதித் துரைக்கே முரணானதாகும்.
சஊதியின் பொதுநீதி மன்றம் என்பது நாட்டின் எல்லாப் பாகங்களிலும் நீதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக ஷரீஆ மற்றும் நாகரீக விழுமியங்களுக்கமைய மனித உரிமைகளையும் கௌரவத்தையும் பாதுகாப்பதும் அல்குர்ஆன், சுன்னாவில் இருந்து பெறப்பட்ட சட்ட விதிகளுக்கமைய மனித உரிமைக்கும் கன்னியத்துக்கும் கலங்கம் ஏற்படுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற உறுதிப்பாட்டின் பேரிலும் மன்னன் பஹ்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு நீதி நிறுவனமாகும்.

இத்தகைய ஒரு நீதி நிறுவனம் மனித உரிமைக்காகக் குரல் கொடுத்த ஓர் இஸ்லாமிய அறிஞருக்கு மரண தண்டனை விதிக்குமாயின் மக்கள் யாரிடம் தான் முறையிடுவர்;
.

இறைவா! அநீதியிழைக்கப்பட்ட மக்களின் முறைப்பாட்டை செவிமடுக்க நீயன்றி வேறெவரும் இல்லை.

(Thulaa.com)