( மினுவாங்கொடை நிருபர் )
இம்முறை க.பொ.த. சாதாரண தர செயன்முறைப் பரீட்சைகளி
ல் தோற்றியுள்ள, இதுவரை தேசிய அடையாள அட்டைகள் கிடைக்காத மாணவர்களுக்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில்,
011 5226115
என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 26 ஆம் திகதி வௌியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம், தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்போர் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை, மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயம் அல்லது மாகாண அலுவலகத்திற்கு அனுப்புமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தமது விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்து அனுப்பியவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பல விண்ணப்பப் படிவங்கள் தாமதாகக் கிடைத்ததாகவும், சில விண்ணப்பப் படிவங்கள் உரிய காலப்பகுதிக்குள் கிடைத்தாலும் அவை முறையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்பிரகாரம், விண்ணப்பதாரிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக, தேசிய ஆட்பதிவுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர செயன்முறைப் பரீட்சைகளில் தோற்றியுள்ள, இதுவரை தேசிய அடையாள அட்டைகள் கிடைக்காத மாணவர்கள் மாத்திரம், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட தொலைபேசி இலக்கத்தினூடாகத் தொடர்பினை ஏற்படுத்தி மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.