பியாஸ் முஹம்மத்
2010 இல் ஆட்சியை மீண்டும் தொடர்வதற்கான மக்களாணை கிடைத்ததன் பின்னர் ஊடகங்கள் வாயிலாக மக்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான பல சம்பவங்கள் நடந்தேறின. சூரியனுக்கு நிகரான மற்றுமொரு சூரியன் இலங்கையின் மத்திய பகுதியில் ஒளிர்வதாக செய்திகள் பரவின. நாட்டின் பல பாகங்களிலும் வித்தியாசமான வர்ணங்களில் அடிக்கடி மீன்மழை பொழிந்திருப்பதை ஊடகங்கள் அடிக்கடி எடுத்துக் காட்டின. விண்ணிலிருந்து வித்தியாசமான கழிவுகள் இலங்கைத் தரையில் கொட்டப்பட்டிருந்த தகவல்கள் பரவின. மக்கள் அத்தனையையும் ஆசியாவின் ஆச்சரியமாக அண்ணாந்து பார்த்துப் பரவசப்பட்டுப் போனார்கள். ஈற்றில் 2015 தேர்தலில் தான் அவர்கள் விழித்துக் கொண்டார்கள்.
பொதுவாக இலங்கை மக்கள் குழந்தைகளாக இருக்கும் போதே, தமது தேவைக்காக அழுதபோதெல்லாம் வாயில் சூப்பியை மாட்டிப் பழக்கப்பட்டவர்கள். தமது தேவைகள் பற்றிக் குரலெழுப்ப முன்னரே பராக்குகளை நோக்கிக் கவனத்தைத் திசை திருப்பும் வித்தையை ஆளும்வர்க்கத்தினர் கச்சிதமாகக் கையாண்டு வருவது இன்றைய அரசியலிலும் நடக்கிறது. மக்களது தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் இருக்கும் என்ற நம்பிக்கை பாடசாலையில் படிக்கும் போது விளங்காவிட்டாலும், அரசியல் பாடம் அதனை விளக்கமாகக் கற்றுத் தருவது இப்போது புரிகிறது. இலங்கை அணி கிரிக்கட் போட்டிகளில் வெற்றி பெறும் போதெல்லாம் மக்களின் கவனத்தை மறைத்து விலைவாசி உயர்த்தப்படுவது மக்களுக்குத் தெரியாததல்ல. துரதிர்ஷ்டவசமாகவோ அல்லது மக்களின் அதிர்ஷ்டவசமாகவோ இப்பொழுதெல்லாம் இலங்கை அணி வெல்வதில்லை.
இதற்கு அடுத்தபடியாக இலங்கை மக்களின் கவனம் ஊன்றியிருப்பது தொலைக்காட்சி நாடகங்களில். அந்த வகையில் கானியாவும் சுவிஸ் தூதரகமும், சம்பிக்கவின் கோர விபத்து, வெள்ளைவான் மர்மம், ஷானியும் ஷாபியும் என்ற தொடர்கள் ஓடி முடிய தற்போது ரஞ்சனும் வஞ்சனையும் எனும் தொடர் ஆரம்பமாகியிருக்கிறது. பழம் நழுவி பழக்கலவையிலேயே விழுந்த கதையாக பொதுத் தேர்தலுக்கு முந்திய களத்தில் பல விடயங்களைச் சாதித்துக் கொள்வதற்கு இது சாதகமாகியிருக்கிறது.
அரசியல்வாதிகளினதும் பிரபலங்களினதும் முகத்திரையைக் கிழிக்கும் விதமாக பல விடயங்கள் அடிக்கடி அவிழ்த்து விடப்படுவது அண்மைக்காலங்களில் நடந்து வருகிறது. விகிலீக்ஸ் புரளி கிளப்பிவிடப்பட்ட போது அமளி துமளியாக இருந்த களநிலவரங்கள் அடங்கிப் போவதற்குள் பனாமா பேப்பர்ஸ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இவை எதுவுமே உள்நாட்டில் பாரிய தாக்கத்தைச் செலுத்தாதிருந்த நிலையில் ரஞ்சனின் குரல் பதிவுகள் தற்போது அந்த அனுபவத்தை நாட்டுக்கு வழங்கியிருக்கின்றன. 125,000 க்கும் மேற்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளில் ஒரு சிலவே தற்போது வரை வெளியிடப்பட்டிருக்கின்றன. ஏனையவை தொடர்பில் அவருடன் தொலைபேசியில் கதைத்தவர்கள் எல்லாம் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தனிப்பட்டவர்களின் அந்தரங்க லீலைகளையெல்லாம் அலசுவது நாகரிகமல்ல என்ற வகையில் ரஞ்சனின் செயல் நாகரிகமானதொன்றல்ல. நாகரிகம் என்பது ஒரு சமூகம் அல்லது இடம் சமூக, கலாச்சார வளர்ச்சியின் மேம்பட்ட கட்டத்தை அடையும் செயல்முறையாகும். இருக்கின்ற நிலையை விட கீழே செல்வது நாகரிக வீழ்ச்சியாகும். அந்த வகையில் தனிப்பட்டவர்களின் அந்தரங்கங்களை வெளியிடுவது அநாகரிகமானதாகும். பிக்பொஸ் பிரியர்களைப் போல அடுத்தவர்களின் அந்தரங்கங்களை ரசிக்கத் துடிப்பவர்களுக்கு இது சுவையானதாக இருக்கலாம். ஆனாலும் மனித நாகரித்தின் அளவுகோலில் இது மட்டமானதாகும்.
அந்த வகையில் ரஞ்சன் ராமநாயக்கவின் அநாகரிகமான செயற்பாடு நாட்டில் பரவாமல் சீர்படுத்துவது பற்றி நாடு, குறிப்பாக நாட்டின் பண்பட்ட மக்கள், சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஒருவருடைய குரலைப் பதிவு செய்வது அதனை எழுத்து வடிவில் கொண்டு வருவதற்காக மட்டுமே இருக்க வேண்டும், அதை விடுத்து ஒருவரது குரலைப் பதிவு செய்வதென்றால் அவரிடம் அது தொடர்பில் அனுமதி பெற வேண்டும் என்பது உலகம் ஏற்றுக் கொண்ட பண்பாடு. ஆனால் இலங்கையில் அனுமதியின்றி தொலைபேசி அழைப்புக்களைப் பதிவு செய்வது தொடர்பான சட்டங்கள் ஏதும் இல்லை என தகவல் தொடர்பு நிபுணர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவிக்கிறார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இதற்கான சட்டம் இருக்கிறது. அங்கு ஒருவருடைய தொலைபேசி உரையாடலை அடுத்தவருடைய அனுமதி இன்றி பதிவு செய்வது தடுக்கப்பட்டுள்ளது என்கிறார் அவர்.
இதற்கென ஒரு நெறிமுறை வகுக்கப்படாவிட்டால் மனிதர்கள் மீதான அடுத்த மனிதனின் நம்பிக்கை முறிந்து போகிறது. அடுத்தவருடன் பேசும் போது கவனமாகப் பேசுவதற்கும் அல்லது பேசாமல் விட்டு விடுவதற்குமே மனிதர்கள் முனைவார்கள். இது மனிதர்களுக்கு இடையிலான தொடர்புகளைக் குறைத்து விடுகிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதனின் அந்தரங்க வாழ்க்கையை தொலைத்து விட்டிருக்கிறது. யாரும் விரும்பாமலேயே சிசிடிவி கமராக்களுடாக அனைவரும் பின்தொடரப்படுகிறார்கள். தொலைபேசி உரையாடல்கள் தானியங்கி பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொருவருடைய கையிலிருக்கும் போனும், எந்த வடிவிலான கம்பியூட்டரும் அவரை அறியாமலேயே ஒருவரது நடத்தையை படம் பிடித்து விடுகின்றன. ஹோட்டல் அறைகளிலும் கழிவறைகள் குளியலறைகளிலும் பல்வேறு வடிவங்களில் உள்ள கமராக்கள் ஏதாவது தம்மைப் படம் பிடித்து விடுமோ என்ற பயம் அனைவரிடமும் தான் அப்பிக் கிடக்கிறது.
அந்த வகையில் இது ரஞ்சன் ராமநாயக்க மட்டும் செய்த ஒரு விபரீதமல்ல. கொல்லப்பட்ட ஊடகவியலாளர் லஸந்த விக்கிரமதுங்கவுக்கும் இந்தப் பழக்கம் இருந்திருக்கிறது. இன்னும் பலருக்கு இந்தப் பழக்கம் இன்றும் இருக்கிறது. 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க தொலைத் தொடர்புகள் சட்டம் (1996 இல் திருத்தப்பட்டது), 2007 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க கணினிக் குற்றங்கள் சட்டம் ஆகியன அனுமதியின்றி குரல்களைப் பதிவு செய்வதையும் இலத்திரனியல் கண்காணிப்புக்களையும் குற்றம் என்கிறது. தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அரசாங்கங்கள் இந்தக் குரல் பதிவு வேலையைச் செய்கின்றன. ஆனால் அரசாங்கத்தின் சார்பில் யார் இதனைச் செய்யக் கூடும் என்ற வரையறை இல்லை.தேசிய பாதுகாப்புக்கென பதியப்படும் குரல்களை அரசியலுக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற சட்டமும் இங்கு இல்லை. இந்த வகையில் தனிமனிதனது அந்தரங்கத்துக்கு எந்தப் பாதுகாப்பும் இந்த நாட்டில் இல்லை என்பது ரஞ்சனின் குரல்பதிவு நிகழ்வு மூலமாகத் தெளிவாகிறது.
ஒவ்வொருவரும் தமது அந்தரங்கத்தைப் பாதுகாத்துக் கொள்கின்ற உரிமை (Right to Privacy) இல்லாத வரையில் ஒருவரது அந்தரங்கத்தை இன்னொருவர் வெளிப்படுத்தினால் அதற்கெதிராக இங்கு யாரும் வழக்குத் தொடர முடியாது. சைபர் வெளியில் நுழைந்ததன் பின்னர் யாருக்கும் தமது அந்தரங்கம் வெளிப்படுத்தப்படுவதைத் தடுக்கவும் முடியாது. தத்தமது அந்தரங்கங்களை அவரவரே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை தான் இருக்கிறது. இந்த நிலையில், உரையாடல் துண்டிக்கப்பட்ட உடனேயே அந்த உரையாடல் இருவருக்கும் அமானிதமாகிவிடுகிறது என்ற உலகப் பொது விதியை மக்களிடம் பயிற்றுவிப்பது தான் இதற்குத் தீர்வாக முடியும்.
அடுத்ததாக ஊடகங்களின் விபச்சாரத்தை அழித்து விடுவதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். தனது ஆதாரத்துக்காக, தனது சொந்தத் தேவைகளுக்காக குரல் பதிவுகளை ஒருவர் சேமித்து வைப்பது தவறில்லை. ஆனால் அதனை பொதுவெளியில் பரவ விடுவது தான் தவறு. அந்தத் தவறை இங்கு ரஞ்சன் செய்யவில்லை. விபச்சார ஊடகங்கள் தான் இதனை வைத்துக் கொண்டு சுகம் அனுபவித்தன. பொலிசாரால் கைப்பற்றப்பட்ட இந்த சீடிக்கள் எப்படி ஊடகங்களிடம் போய்ச் சேர்ந்தன என்பது வேறு விடயம். ஆனால் இவற்றை ஜனரஞ்சகப்படுத்துவதில் “அடுத்த விடயங்களை எடுத்துக் கொண்டு தங்களது விடயங்களை பாதுகாத்துக் கொண்டு” செயற்படும் ஊடகங்கள் ஈஸ்டர் தாக்குதல் வேளையில் செயற்பட்ட போது போல மும்முரமாக இயங்கின. அதிலும் தமது எதிரி எனக் கண்டவர்களது குரல் பதிவுகளையே அவை முந்திக் கொண்டு வெளியிட்டன. இன்றுவரை அந்தக் குரல் பதிவுகள் யாருடையது என்பதை சோதித்தறிவதற்காக இரசாயனப் பகுப்பாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் வைத்தியர் ஷாபியின் பலோப்பியன் விவகாரத்தை உண்மைப்படுத்த எத்தனித்தது போல இங்கும் ஊடக தர்மத்தை கழற்றி வீசிவிட்டு இந்த ஊடகங்கள் ஒழுக்க நெறிகளை கற்பழிக்கின்றன. அவன்கார்ட் பிரதானி தன்னை விடுவித்துக் கொள்வதற்காக நீதித் துறையின் உயர் அதிகாரி ஒருவரின் குரல் பதிவை வெளியிட்ட போது இந்த ஊடகங்கள் இப்படி ஆர்ப்பரிக்கவில்லை என்பதிலிருந்து ஊடகங்களுடைய பத்தினித்தன்மை வெளிப்படுகிறது.
ரஞ்சனையும் இந்த இடத்தில் கழுவித் துப்புரவாக்க முடியாது. ரஞ்சனைப் பொறுத்தவரையில் தலைவன் (லீடர்) முதல் பெண் (மாயா) வரை எல்லாப் பாத்திரங்களையும் ஏற்று நடித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர். அந்த வகையில் அவரது நடிப்புத் துறையில் இதனையும் ஓர் அங்கமாகவும் பலரும் பார்க்கத் தலைப்பட்டுள்ளனர். மற்றுமொரு பிரபல நடிகரான கமல் அத்தரஆரச்சி இதுபற்றிக் குறிப்பிடுகையில், கதவைத் திறந்து வைத்துக் கொண்டு மலசலம் கழிப்பது போல என வர்ணித்திருக்கிறார். ரஞ்சனைக் கழுவி ஊற்றுவதில் பௌத்த பிக்குகள் சிலரும் வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுகின்றனர். பௌத்த விகாரைகளில் பௌத்த பிக்குகள் சிலரின் லீலைகளை வெளியே கொண்டு வந்த கோபம் அவர்களுக்கு. இதுவும் உண்மையில் பண்பாட்டுக்கு விரோதமானது தான். சார்ஜன்ட் நல்லதம்பி புகழ் நிஹால் சில்வா ரஞ்சனின் அளவுக்குப் பேர் போனவர். இந்தப் பிரபல்யத்தைப் பயன்படுத்திக் கொள்ள முனைந்த அப்போதிருந்த அரசியல்வாதிகள் அவரை அரசியலுக்குள் இழுத்து பல வரப்பிரசாதங்களையும் வழங்கினர். ஈற்றில் அதே அரசின் காலப்பிரிவிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ரஞ்சனும் தற்போது நடிக்கத் தான் துணிந்திருக்கிறார் என்றால் நிஹால் சில்வாவை இந்த விடயத்தில் அவர் குருவாக எடுத்துக் கொள்வது நல்லது.
இறுதியாக, இது ஒரு பண்பாட்டுப் பிறழ்வு என்பது அமெரிக்க நாகரிகம் தெரிந்த ஜனாதிபதி கோத்தாவுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. ஆனால் உள்நாட்டுத் தலைவரான தனது அண்ணனுக்கு சட்டியைச் சூடாக வைத்துக் கொள்வதற்கு இவ்வாறான விடயங்களை எரிய விடுவது தான் கை வந்த கலை என்பது தெரிந்திருந்தாலும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் இதன் அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்பது அண்ணனுக்குத் தான் தெரியும். ஆனால் ரஞ்சனின் குரல் பதிவு விவகாரம் அடுத்த தேர்தல் வரை ஓயப்போவதில்லை என்பது மக்களுக்குத் தெரியும்.
#Meelparvai

