50 தனி வீடமைப்பு திட்டத்தின் அடிக்கல் நாட்டு வைபவம்

Rihmy Hakeem
By -
0
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 10,000 தனி வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கமைய இன்று (16) காலை முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் வெளிஓயா தோட்டம் மேற்பிரிவில் அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் 50 வீடுகளை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் விநோத் கே.ஜேக்கப் கலந்து கொண்டார்.

அத்தோடு இலங்கைக்கான இந்திய உதவி தூதுவர் திரேந்திர சிங் உள்ளிட்ட பெருந்தோட்டத்துறை மற்றும் ஏற்றுமதி பயிர் செய்கை அமைச்சர் ரமேஷ் பத்திரண, ஆகியோருடன் முன்னாள் மத்திய மாகாண சபை அமைச்சர் எம்.ரமேஷ்வரன், உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பி.சக்திவேல், ஏ.பிலிப்குமார் அடங்களாக மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பரத் அருள்சாமி, அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

இவ் தனி வீடுகளில் இரண்டு அறைகள், சமையலறை, வரவேற்பறையுடன் இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

அத்துடன் வீட்டிற்கான மின்னிணைப்பு மற்றும் குடிநீர் வசதிகள், வீதி மற்றும் வடிகாலமைப்பு போன்றன சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் உதவியுடன் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.

மலையக மக்களின் 200 வருட தொடர் வீட்டு வாழ்க்கை முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் இந்தியாவில் இருந்து கடைசியாக வரவழைக்கப்பட்ட மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் இந்திய நிதி உதவியின் கீழ் இந்த புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.



-மலையக நிருபர் கிரிஷாந்தன்-

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)