டெல்லி சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. ஆரம்பம் முதலே அதிக இடங்களில் முன்னிலை வகிக்கத் தொடங்கியிருக்கிறது ஆளும் ஆம் ஆத்மி கட்சி.
70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை பெறுவதற்கு 36 இடங்கள் போதும் என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி இப்போதைய நிலவரப்படி 57 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் ஒரு இடத்திலும்கூட முன்னிலை பெறவில்லை.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை எட்டு மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
`24 மணி நேரமும் மின்சாரம் பெற்ற குடும்பங்களின் வெற்றி` - கேஜ்ரிவால்

"உங்களின் மகன் மீது மூன்றாவது முறையாக நம்பிக்கை வைத்த டெல்லி மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்." என டெல்லி மாநில முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவால் தனது கட்சி உறுப்பினர்களிடம் உரையாற்றுகையில் தெரிவித்தார்
தற்போது நிலவரப்படி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 63 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
தனது தொண்டர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், "இந்த வெற்றி என்னுடைய வெற்றியல்ல. இது டெல்லி மக்கள் அனைவரது வெற்றி," என்று தெரிவித்தார்.
"என்னை தங்களது மகனாக நினைத்து ஆதரவு தெரிவித்த அனைத்து குடும்பங்களின் வெற்றி,"
"இன்றைக்கு டெல்லியில் 24 மணி நேரமும் மின்சாரம் பெற்ற குடும்பங்களின் வெற்றி இது; தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி பெற்ற ஒவ்வொரு குடும்பங்களின் வெற்றி இது; அதேபோல் தங்களது குழந்தைகளுக்கு மருத்துவமனையில் நல்ல சிகிச்சை கிடைக்கப்பெற்ற அனைத்து குடும்பங்களின் வெற்றி இது; இன்றைக்கு நாட்டில் ஒரு புதிய அரசியலுக்கு டெல்லி மக்கள் வழிகாட்டியுள்ளனர். இது ஒரு நல்ல அறிகுறி," என்று கேஜ்ரிவால் தொண்டர்கள் முன் உரையாற்றினார்.
BBC.com
BBC.com