யாழ் பல்கலைக் கழகத்தில் பகிடிவதை என்ற பேரில் பாலியல் கொடுமை - தற்கொலைக்கு முயன்ற மாணவி

Rihmy Hakeem
By -
0
இலங்கையில் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுவரும் பகிடிவதைகள் இன்று கட்டுக்கடங்காமல் செல்கின்றன.

பகிடிவதைகள் தொடர்பில் பல்வேறு சட்டதிட்டங்கள் அமுல்ப்படுத்தப்பட்டுவருகின்ற போதிலும் அவற்றையெல்லாம் தாண்டி தொழில்நுட்பத்தினை சாதகமாகப் பயன்படுத்தி எல்லைமீறல்கள் தொடர்ந்துவருகின்றன.

இதற்கு சான்றாக யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுவரும் பகிடிவதைகள் மாறிவருகின்றன.
யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீடத்திற்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்ட மாணவிகள் மீது மிகக் கொடூரமான முறையில் பகிடிவதை மேற்கொள்ள முற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் கசிந்துள்ளன.

புதுமுக மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களை வாங்கும் மாணவர்கள் அநாகரிகமான முறையில் அவர்களுடன் உரையாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் இவர்களின் தொல்லை காணரமாக மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த மாணவியின் தந்தை அவரிடம் விசாரித்த போது பல அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.

அதாவது மாணவியின் தொலைபேசி இலக்கத்திற்கு ஏராளமான தொலைபேசி இலக்கங்களில் இருந்து தொடர்ச்சியாக அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் வாட்ஸ் குழு ஒன்றினை உருவாக்கிய அவர்கள் மாணவியிடம் நிர்வாணப் படங்களை அனுப்புமாறும் மிரட்டியுள்ளனர்.

இவ்வாறான அழைப்புக்கள் குறித்த மாணவி உட்பட்ட ஏனைய மாணவிகளுக்கும் வந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிநுட்பத்தின் அசுர வளர்ச்சி இவ்வாறு பல்கலைக் கழக மாணவர்களிடையே அநாகரிகமாக செயற்பட்டு வருவதனை ஏன் பல்கலைக் கழக நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்பது கேள்விக்குறியே.

பல்கலைக்கழகங்களிற்குள் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான ஒழுங்குகள் செய்யப்பட்டு வருவதாக அண்மையில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

இதற்கேற்ப இவ்வாறு யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை என்ற போர்வையில் நிர்வாணப்படம் கேட்டு மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துவரும் மாணவர்களை எவ்வாறு எப்போது தண்டிக்கப்போகின்றீர்கள்.

நாட்டின் நாளைய கல்விமான்களாக திகழவிருக்கும் மாணவச் செல்வங்களை பகிடிவதை என்ற பெயரில் ஏன் இவ்வாறு அசிங்கப்படுத்துகின்றார்கள் சக மாணவர்கள்.

அதற்கு இடம்கொடுப்பது யார்? யாழ் பல்கலைக் கழக நிர்வாகமோ , யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் தலைவரோ இதனைக் கண்டுகொள்வதில்லை போலும்.

தயவுசெய்து இவ்வாறான இழிசெயல்கள் இனிமேலும் நடக்காதவாறு யாரால் தட்டிக்கேட்க முடியுமோ அவர்கள் தாமதமின்றி இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழ் வின்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)