கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு முரணாக இந்த நோய் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை மறைத்த இரத்தினக்கல் வர்த்தகருக்கும் அவரது மனைவிக்கும் எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் கேட்போர் கூடத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (Covid - 19) செய்தியாளர் சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் இந்த இரத்தினக்கல் வர்த்தகருக்கும் அவரின் மனைவிக்கும் எதிராக கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இரத்தினக்கல் வியாபாரி தற்பொழுது அங்கொட தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வைத்தியர் மேலும் தெரிவித்தார்.
இதில் கலந்து கொண்ட சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன நோயை மறைப்பவர்களுக்கும் அதற்கு உதவுவோருக்கும் எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த டொக்டர் அனில் ஜாசிங்க, ஜெர்மனியில் இருந்து வந்த நபரொருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது கடந்த 12 ஆம் திகதி கண்டறியப்பட்டது.
இவருடன் இருந்த மற்றொரு நபருக்கும் கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்குமாறு அறிவிக்கப்பட்டது.
ஆனால் மாணிக்கக் கல் வர்த்தகரான அவர் தனது குடும்ப மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளதோடு தனியார் ஆஸ்பத்திரிகளிலும் பரிசோதனைகள் செய்துள்ளார். தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரின் மனைவியே பதில் வழங்கியுள்ளார். மூன்று தினங்கள் இவ்வாறு பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ள இவர், இறுதியாக களுபோவில ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதியாகியுள்ள நிலையில் அவர் அங்கொட தொற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். இவர்கள் இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொறுப்பின்றி செயற்படுவோர் இந்த நிலைமை குறித்து உணர வேண்டும்.
தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று பரிசோதனை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தும் சிலர் அவற்றில் பரிசோதனை செய்துள்ளனர். எமது அறிவிப்பை மீறி ஆஸ்பத்திரிகள் செயற்பட்டிருப்பது தொடர்பில் மீண்டும் அறிவுறுத்தல் வழங்க இருக்கிறோம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

