நம்ப முடியாமல் ஒன்றுக்கு இரண்டுக்கு மூன்று முறை திரும்பத் திரும்ப வாசித்தேன். அந்த மனிதனின் உடமைகளை எரித்தார்களா, உடலை எரித்தார்களா என்று. உடலைத்தான் எரித்திருக்கிறார்கள்.
கவலையும், கோபமும், விரக்தியும் ஒருசேர மனதை ஆக்கிரமித்திருக்கின்றன.
நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி, அவர்களுக்குத் தெரியாமல் களவாகக்கொண்டுபோய் எரித்திருக்கிறார்கள்.
இதைவிட ஒரு துக்ககரமான செய்தியை இன்றைய நாள் எப்படிக் கொண்டுவரப்போகிறது.
சுகாதார அமைச்சு உத்தியோக பூர்வமாக அறிவித்து அதற்கான வழிகாட்டல் வழங்கி இருந்தும், அரசு புதைப்பதற்கான அனுமதியை வழங்கியிருந்தும் , குடும்பம் எரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தும் இருட்டில் கொண்டுபோய் அப்படியே எரித்திருக்கிறார்கள்.
பாம்போ, பல்லியோ எது இறந்துபோனாலும் நெருப்பினால் எரிக்காத ஒரு இனத்தின் மரணித்த ஒரு மனிதனை நெருப்பிலிட்டு வேண்டுமென்றே எரித்து ஒரு பெரும் அநீதியைச் செய்திருக்கிறார்கள்.
புதைப்பதற்காகத் தோண்டப்பட்ட மண்ணறை அப்படியே ஈரம் காயாமல் இருக்கிறது. தொழுகை நடப்பதற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில் சாம்பலைக் கூட மிச்சம் தராமல் அப்படியே எரித்திருக்கிறார்கள்.
இறப்பதற்கு முன் அந்த மனிதரிடம் "கடைசி ஆசை" என்ன என்று கேட்டிருந்தாலும் "தயவு செய்து என்னை பொதுமையவாடியில் புதைத்துவிடுங்கள்" என்பதைத்தான் கெஞ்சிக்கேட்டிருப்பார்.
இறந்துபோன உடல்களுக்கும் வலியிருக்கும் என்று நம்புகிற ஒரு மனிதனை இறந்தபின் எரிப்பதும், உயிருடன் எரிப்பதும் ஒன்றுதான். அந்த உடலும், ஆன்மாவும் எப்படியெல்லாம் கதறி இருக்கும்.
அடிப்படை மனித உரிமை மீறல், அப்பட்டமான அநீதி, அரசியல் சுயலாபம், அறிவீனத்தின் உச்சம், மனிதாபிமானமற்ற செயல் என்று எந்த வகைக்குள்ளும் இதை அடக்கலாம்.
இரவு பன்னிரெண்டு மணிக்கு அவசர அவசரமாக எரித்துவிட்டு, இரண்டு மணிக்கு அதை நீர்கொழும்பு மேயர் முகநூலில் படம்பிடித்துப் போடுகிறார். அரசியல் இலாபம் தேடுவதைத் தவிர வேறு ஒன்றையும் இதில் என்னால் காணமுடியவில்லை.
அரசு பகிரங்கமாக அறிவித்திருந்தும், குடும்பம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தும் இந்த செயலைச் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கவேண்டும். முளையிலேயே கிள்ளி எரியாவிட்டால் இந்தத் தீ இன்னும் பரவும்.
நீதிகேட்டு அந்தக் குடும்பம் துணிந்து முன்வரவேண்டும். அவர்களோடு கைககோர்க மனிதாபிமானிகள் எல்லோரும் ஒன்றுசேர வேண்டும்.
அப்படியே அதிர்ந்துபோய் இருக்கிறேன்.
மரணித்துப்போனதை நினைத்து முஸ்லிம்கள் மூன்று நாளைக்கு மேல் அழமாட்டார்கள். ஆனால் இப்படி அநியாயமாக எரித்துப்போட்டதை அந்தக் குடும்பம் எப்படித் தாங்கப்போகிறது. எப்படி மறக்கப்போகிறது. எப்படி ஆறுதல் சொல்வதென்று வார்த்தைகள் தொலைத்து நிற்கிறேன்.
اللهم اغفر له وارحمه
😢 😢
Zinthah Nawaz