பாதையில் நடந்து செல்லும் போது முன்னே அகப்படும் சிறிய கற்களை அல்லது அவை போன்றவற்றை கால்களால் தட்டி தள்ளிவிடப் பழகி இருக்கும் பலர் அதே பாதையில் துர்நாற்றம் தரும் ஒரு பொருளைக் கண்டதும் மூக்கைப் பொத்திக்கொண்டு கண்டும் காணாதது போல் சென்று விடுகின்றனர். மனிதருக்கு தொந்தரவாக அமையும் எதுவோ அதை அகற்றுவது அல்லது அகற்றுவதற்கு ஏற்பாடு செய்வது வணக்கத்தின் ஒரு கூறு என்பதை நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். நன்மை செய்வதற்கு இறைவன் தரும் ஒரு வாய்ப்பாகவே அதைக் கருதுகிறோம். இந்த அழகான வாய்ப்புகளை ஒரு போதும் தட்டிவிட மனதிற்கு இடமளிக்கவே கூடாது.
பாதையில் துர்நாற்றம் தரும் எதுவோ அதை கட்டாயம் அகற்ற வேண்டும் என்று ஒவ்வொருவரது உள்ளமும் உணரத்தான் செய்யும். சில உள்ளங்கள் அதை உணர்ந்த உடனேயே அடுத்து செய்ய வேண்டியதை செய்துவிடும். சில உள்ளங்கள் உணர்வோடு மட்டும் இருந்துவிடும். எமக்குத் தேவையானது உணர்வோடு உள்ள உள்ளங்களைக் காட்டிலும் உணர்ந்து செயல் மூலம் வெளிப்படுத்திக்காட்ட முட்படும் ஆக்கபூர்வமான உள்ளங்களாகும்.
எமது வீட்டுக்குள் ஒரு பிராணி இறந்து துர்நாற்றம் எடுக்க ஆரம்பித்தவுடனே அவசரமாக அதை தேடி கண்டுபிடித்து அந்த இடத்தை துப்பரவு செய்துவிடுகிறோம். அப்பொழுது சோம்பரம் பார்ப்பதோ மூக்கைப் பொத்திக்கொள்வதோ இல்லை. ஆனால் பொது இடத்தில் இப்படியான ஒன்று நடந்துவிடும் போது மட்டும் நம்மில் அநேகர் மௌனம் காக்கிறோம். பொதுவேளை என்று வருகிறபொழுது, 'அவர் செய்யட்டும்..!', 'வேறு ஒருவர் செய்வார்..!' என்று எண்ணி மற்றொருவருக்கு பாரத்தைச் சாட்டுகிறோம். மற்றவரும் இப்படியே நினைத்தால் “எல்லோருடைய வேலை ஒருவருடைய வேலையாகவும் ஆகமாட்டாது”.
பொதுப்பணி என்பது உள்ளங்களுக்கிடையில் நெருக்கத்தையும் சகோதர உணர்வையும் ஏற்படுத்தும் அழகான பணியாகும். அதன் துவக்கமும் முடிவும் வழிபாடாகும். வழிபாடு எங்கள் உள்ளங்களையும் நடத்தைகளையும் வளப்படுத்தும் ஆயுதமாகும். உள்ளங்களை இறைவனோடு நெருக்கமாக்குவதற்கான அழகான வாய்ப்புமாகும். பாதையில் இருக்கும் அசுத்தத்தை அகற்றுவது கூட ஒரு பொதுப்பணி. ஒரு வகையில் மற்றவருக்குச் செய்கின்ற உதவி. மற்றொருவகையில் சூழலுக்குச் செய்கின்ற நீதி.
பிள்ளைகளுக்கு படிப்பைக் கொடுத்து அறிவாளிகளாக ஆக்க அதிபிரயத்தனம் எடுப்பது போன்று இவ்வாறான பணிகளை செய்துகாட்டி, செய்யத்தூண்டி நல்ல பண்பாளர்காளகவும் உருவாக்க உறுதிகொள்வோம்.
…………………………………
அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்