தொல்பொருள் பிரதேசங்கள் எந்த இன, மதத்திற்குரியதாக இருந்தாலும் பாதுகாக்கப்படும் - பாதுகாப்பு செயலாளர்

Rihmy Hakeem
By -
0

தொல்பொருள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தளங்கள் தனிநபர் மற்றும் திட்டமிட்ட குழுக்களின் அத்துமீறல்களிலிருந்து பாதுகாக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன உறுதியளித்துள்ளார்.


கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள முஹூது மகா விஹாரை மற்றும் தீகவாபி தொல்பொருள் பிரதேசத்திற்கான நேற்று முன்தினம் (மே 14) இடம்பெற்ற விஜயத்தின்போது பௌத்த மத குருமார்களையும் பிரதேசவாசிகளையும் சந்தித்தபோதே அவர் இவ்வாறு உறுதியளித்தார்.
நாட்டின் பல தொல்பொருள் மற்றும் வரலாற்று தளங்கள் மீது பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் பிரதான விடயமாக அண்மைய காலமாக பேசப்பட்டு வந்ததுடன் இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகளுக்கு  பதிலளிக்கும் வகையில் இந்த விஜயம் அமைந்திருந்தது. இந்த விஜயத்தின் போது, பாதுகாப்பு செயலாளரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பொத்துவிலில் அமைந்துள்ள புராண பௌத்த விகாரையான மு{ஹது மகா விஹாரையைச் சூழவுள்ள பிரதேசங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள கடற்படை உப  பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியின் தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கமளித்த இந்த விகாரையின் தலைமை விகாராதிபதி வரகாபொல இந்திரதிஸ்ஸ தேரரிடம் விகாரைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறல்கள் அனுமதிக்கப்படமாட்டாது எனவும் விரைவில் இந்த பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
1951 ஆம் ஆண்டில் அப்போதைய தொல்பொருள் ஆணையர் நாயகமாக இருந்த சேனரத் பரணவிதான அறிவித்த 72 ஏக்கர் நிலப்பரப்பு 1965 ஆம் ஆண்டில் வெளியான வர்த்தமானி அறிவிப்பால் 32 ஏக்கராக குறைக்கப்பட்டதாக வண. இந்திரதிஸ்ஸ தேரர்,பாதுகாப்பு செயலாளரிடம் சுட்டிக்காட்டினார்
தற்பொழுது 42 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீதமுள்ள விகாரை நிலத்தை ஆக்கிரமித்து வருகின்றனர் என தேரர் பாதுகாப்பு செயலாளரிடம் கோரிக்கை விடுத்ததுடன் இதற்கான தீர்வை அவசரமாக பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், உயர் பாதுகாப்பு தூதுக்குழு முஹுது மகா விஹாரை மற்றும் தீக்கவாபி ஆகிய பகுதிகளுக்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டது 'தேசிய பாரம்பரியங்கள் மீது சேதம் ஏற்படுத்துவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவ்வாறு ஈடுபடும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்,' என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
தேசிய பொக்கிஷங்களான தொல்பொருளியல் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தளங்கள் நாட்டின் எதிர்கால தலைமுறையின் நலனுக்காக இன, மதம் என்பன கருத்தில் கொள்ளப்படாமல் எந்த மதத்தை சார்ந்ததாக இருப்பினும் அவை பாதுகாக்கப்படும் என அவர் மீண்டும் வலியுறுத்தினார். இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக சில தனிநபர்கள் மற்றும் குழுக்களால் இவ்வாறான தளங்கள் அழிக்கப்படுதல் மற்றும் ஆக்கிரமிக்கப்படுதலில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சிலரினால் இவ்வகையான தளங்களை சேதப்படுத்தப்படுவதுடன், சட்ட அமுலாக்கத்தின் முன்னிலையில் சில முக்கியமான மத தளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள செயற்பாடானது துரதிர்ஷ்டவசமான செயற்பாடாகும் என அவர் தெரிவித்தார்.
இந்த விஜயத்தில்,  கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யஹம்பத், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, கிழக்கு  பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெர்ணாண்டோ ஆகியோர்  பாதுகாப்பு செயலாளருடன் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)