மரண தண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்ற முடியாது - சட்டமா அதிபர்

Rihmy Hakeem
By -
0

 


(எம்.மனோசித்ரா)

மரண தண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிப்புக்களில் கலந்து கொள்ளவும் முடியாது என்று சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

நடைபெற்ற பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்காக அழைத்து வருமாறு சபாநாயகரினால் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வது குறித்தும் வாக்களிப்புக்களில் பங்குபற்றுவது குறித்தும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் நீதி அமைச்சினால் கோரப்பட்டிருந்த ஆலோசனைக்கமையவே இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பிரமேலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் ஜூலை 31 ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசார கூட்டத்தில் நபரொருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏனைய நபர்கள் கஹவத்தை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்ஷன சில்வா மற்றும் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் நிலந்த ஜயகொடி ஆகியோராவர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)