இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை நியமனத்தின் போது தமிழ் பேசும் சமூகத்தில் இருந்து டக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்றி ஆகியோர் மாத்திரமே அமைச்சரவை அந்தஸ்துள்ள கபினற் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ராஜபக்ஸ அரசாங்கத்தின் தீவிர ஆதரவாளருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாவிற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவி வழங்கப்படவில்லை என்பது மட்டுமன்றி இராஜாங்க அமைச்சராகவும் அவர் நியமிக்கப்படாமை பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.
இதனைத்தவிர யாழ் மாவட்டத்தில் எந்தக்கட்சியின் சார்பாகவும் அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்ற அங்கஜன் ராமநாதனுக்கு இராஜாங்க அமைச்சுக்கூட வழங்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது
இராஜாங்க அமைச்சர்கள் பட்டியலில் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தில் இருந்து எவரும் இடம்பெறவில்லை என்பதுடன் தமிழர்களில் ஜீவன் தொண்டமான் மற்றும் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இந்த அமைச்சரவை நியமனம் தொடர்பாக முஸ்லிம் மீடியா போரம் அமைப்பின் தலைவரும் நவமணி பத்திரிகையின் ஆசிரியருமான எம்.என். அமீனிடம் வினவியபோது ' சிறுபான்மையினரை இன்னமும் அதிகமாக உள்ளவாங்கியிருப்பின் நன்றாக இருந்திருக்கும் ' எனக்குறிப்பிட்டதுடன் அபிவிருத்திப்பாதையை இலக்காகக்கொண்டு அமைச்சரவையை வடிவமைத்துள்ளது போன்று தெரிவதாக சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை தொடர்பாக அரசியல் விமர்சகர் எஸ்.யோதிலிங்கத்திடம் வினவியபோது ' இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் தமக்குமுன்பை விடவும் அதிக ஆதரவை வழங்கியதாக உணர்ந்திருந்தால் தேசிய அரசியலை தமிழ் மக்கள் விரும்புவதாக எண்ணியிருப்பின் ஒரு நல்லெண்ண அடையாளமாக அங்கஜன் ராமநாதன் வியாழேந்திரன் அன்றேல் பிள்ளையானுக்கு கபினற் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை வழங்கியிருக்க வேண்டும் . என்னதான் தமிழ் மக்கள் வாக்களித்தாலும் நாம் இனவாத அரசாங்கமாகவே இருப்போம் என்பதனையே இந்த நியமனங்கள் மூலம் தற்போதைய ஆட்சியாளர்கள் உணர்த்தியுள்ளதாக தெரிவித்தார்.