2020.11.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

Rihmy Hakeem
By -
0

 

2020.11.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

அரசாங்க தகவல் திணைக்களத்தின் Publicity பிரிவினால் சிங்கள மொழியில் இருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது.


01. பொலிஸ் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி மிகவும் வினைத்திறனாக பொலிஸ் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் எமது நாட்டின் பொலிஸ் உத்தியோகத்தர்களின் அறிவு, திறன், மனப்பாங்கு மற்றும் நவீன பொலிஸ் கடமைகள் தொடர்பாக சர்வதேச ரீதியான பிரயோகங்கள் மற்றும் பொறிமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலம் பயங்கரவாத செயற்பாடுகள், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்கள், ஆட்கடத்தல் வியாபாரம், நிதி மோசடி, சைபர் குற்றங்கள் போன்ற 17 துறைகளின் கீழ் பொலிஸ் ஒத்துழைப்பை நிறுவுவதற்காக, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் வெளிநாட்டு பொலிஸ் நிறுவனங்களுடன் பொலிஸ் விடயதான அமைச்சின் மூலம் புரிந்துணர்வு உடன்படிக்கைகளைக் கைச்சாத்திடுவதற்கு நீர்ப்பாசன அமைச்சரும், உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


02. கரையொதுங்கும் மணல் அகழ்வுக்காக மணல் பெறக்கூடிய இடங்களை (Borrow areas) ஒதுக்குதல்

நிர்மாணத்துறை மற்றும் இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டங்களுக்காக மணலைப் பெற்றுக்கொள்வதற்காக கரையொதுங்கும் மணல் பிரதேசத்தை ஒதுக்கிக் கொள்வது நீண்டகாலமான தேவையாயிருக்கின்றது. இந்நிறுவனம் 1994 ஆம் ஆண்டு தொடக்கம் கால அடிப்படையிலான அனுமதிப்பத்திரத்தைப் பெற்று 61 சதுர கிலோமீற்றர் பிரதேசத்தில் மணல் விநியோகிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, சுற்றாடல் சாத்தியவள அறிக்கையை மேற்கொண்டு, 10 வருடங்களுக்காக குறித்த 61 சதுர கிலோமீற்றர் கரையொதுங்கும் மணல் அகழ்வுக்காக இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு அனுமதி வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


03. இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் சிறுவர் நோயாளர் அறுவைச் சிகிச்சை விடுதி அமைத்தல்

சப்பிரகமுவ மாகாணத்தில் மூன்றாம் நிலைச் சேவைகளை வழங்கும் மருத்துவமனையாக இரத்தினபுரி மாகாண பொது மருத்துவமனையாவதுடன், ஏனைய மாகாணத்தின் பல நோயாளர்களுக்கும் குறித்த மருத்துவமனை மூலம் சேவை வழங்கப்படுகின்றது. அங்குள்ள 116 கட்டில்களைக் கொண்ட சிறுவர் நோயாளர் விடுதிக்கு உரிய வசதிகளுடன் கூடிய அறுவைச் சிகிச்சை விடுதியின் தேவையுள்ளதால், குறித்த சிறுவர் நோயாளர் விடுதியின் இரண்டாம் மாடியில் சிறுவர் நோயாளர் அறுவைச் சிகிச்சை விடுதியை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குரிய செலவுகளை கொடை வள்ளல்களிடமிருந்து பெற்றுக்கொண்டு குறித்த நோயாளர் அறுவைச் சிகிச்சை விடுதியை அமைப்பதற்கும், அதற்காக சுகாதார அமைச்சுக்கும் கொடை வள்ளல்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்கும் சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


04. அம்பாந்தோட்டை ஆரபொக்க தோட்டப்பகுதியில் மருந்து உற்பத்திகளுக்கான ஒதுக்கப்பட்ட வலயமொன்றை அமைத்தல்

பொருளாதார மறுமலர்;ச்சி மற்றும் வறுமையொழிப்பு ஜனாதிபதி செயலணியால் நேரடியாக வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்திழுக்கக் கூடியதும் அந்நிய செலாவணியை ஈட்டக் கூடிய வாய்ப்புக்கள் கொண்ட கைத்தொழில் துறையாக மருந்தாக்கல் கைத்தொழில் துறை அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, அம்பாந்தோட்டை ஆரபொக்க தோட்டப்பகுதியில் 400 ஏக்கர் காணிப் பகுதியில், உலகிலுள்ள பிரதான மருந்தாக்கல் கம்பனிகளைக் கவர்ந்திழுக்கக் கூடிய வகையில் நவீன வசதிகளுடன் கூடிய விசேட மருந்தாக்கல் வலயத்தை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மூலோபாய அபிவிருத்தித் திட்டமாக, பிரகடனப்படுத்தி இம்மருந்தாக்கல் முதலீட்டு வலயத்தில் முதலிடுவதற்கு முன்வரும் முதலீட்டாளர்களுக்குரிய மானியங்கள் மற்றும் ஊக்குவிப்புக்களை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த கருத்திட்டத்தின் முதற்கட்டமாக 200 ஏக்கர்களில் 20 மருந்தாக்கல் கம்பனிகளை நிறுவுவதற்கும், இலங்கை முதலீட்டுச் சபையால் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கும், சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


05. கொவிட் 19 தொற்றால் மாகாணங்களுக்கிடையிலான பேரூந்து சேவையை தொடர்ந்து மேற்கொள்வதற்காக பேரூந்து போக்குவரத்தாளர்களுக்கான மானியம் வழங்கல்

கொவிட் 19 தொற்றால் மாகாணங்களுக்கிடையிலான பேரூந்து சேவையை தொடர்ந்து மேற்கொள்வதற்காக பேரூந்து போக்குவரத்தாளர்களிடமிருந்து அறவிடப்படும் கீழ்வரும் கட்டணங்கள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

• அனுமதிப்பத்திரம் புதுப்பித்தலுக்கான கட்டணம்

• தாமதக் கட்டணம்

• விலைமனுக் கோரல் கட்டணம்

• லொக் பத்திரக் கட்டணம்

• உள்நுழைதல் கட்டணம்

• அதிவேக நெடுஞ்சாலையின் தற்காலிக அனுமதிப்பத்திரக் கட்டணம்

எவ்வாறாயினும், இத்தொற்று மீண்டும் பரவுவதால் பேரூந்துப் போக்குவரத்தாளர்கள் மேலும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதால், பயணிகள் போக்குவரத்துச் சேவையை தரமாகவும் வினைத்திறனுடனும் வழங்குமுகமாக அவர்களுக்கு மானியங்கள் வழங்க வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய, போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனையை கருத்தில் கொண்டு, இவ்வருட இறுதி வரைக்கும் தொடர்ந்து இம்மானியங்களை பேரூந்துப் போக்குவரத்தாளர்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


06. இலங்கை அரச வர்த்தக (பலநோக்கு) கூட்டுத்தாபனத்தின் விற்பனைக் கூடத்தில் அரச நிறுவனங்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான செய்வதற்கான வாய்ப்பு வழங்கல்

கீழ்க்காணும் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் விற்பனை செய்யப்படும் உற்பத்திகள், இலகு விலையில் பாவனையாளர்களுக்குப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்புடைய வகையில் தற்போது நாராஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் அமைந்துள்ள இலங்கை அரச வர்த்தக (பலநோக்கு) கூட்டுத்தாபனத்தின் விற்பனைக் கூடத்தை விரிவுபடுத்தி 'ரஜவாச' எனும் விற்பனை நிலையத்தை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

• இலங்கை அரச வர்த்தக (பலநோக்கு) கூட்டுத்தாபனம்

• இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம்

• கல்வி வெளியீட்டுத் திணைக்களம்

• இலங்கை தேயிலை சபை

• அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம்

• பீ.பீ.சீ. இலங்கை கம்பனி

• கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம்

• இலங்கை சதொச நிறுவனம்

• இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம்

• மாந்தை உப்புக் கம்பனி

• லிட்ரோ எரிவாயு நிறுவனம்

• இலங்கை மரக் கூட்டுத்தாபனம்

• வஃப கொழும்பு கொமர்ஷல் உரக் கம்பனி

• இலங்கை உரக் கம்பனி

• மில்கோ நிறுவனம்

• தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை

• அரச அச்சக திணைக்களம்

அதற்கமைய, இலங்கை அரச வர்த்தக (பலநோக்கு) கூட்டுத்தாபனத்தின் விற்பனைக் கூடத்தை நவீனமயப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள 'ரஜவாச' விற்பனை நிலையத்தை அமைப்பதற்கு நிறுவுவதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


07. உள்ளுர் சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான துண்டு உலோகங்கள் வழங்கல்

'கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் தொடர்பான அமைச்சின் செயலணி' மற்றும் 'பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமையொழிப்பு தொடர்பான செயலணி' இடம்பெற்ற கூட்டங்களில் உலோகக் கைத்தொழில் துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன, குறித்த கலந்துரையாடல்களில் தீர்மானிக்கப்பட்டதற்கமைய உள்ளுர் உலோகக் கைத்தொழிலாளர்களுக்கு போதியளவு மூலப்பொருட்களை வழங்கும் நோக்கில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் செப்பு, அலுமினியம், வெள்ளி, அதிக காபன் அடங்கிய இரும்பு, பித்தளை, சீனச்சட்டி, துண்டு அலுமினியம் உருளை மற்றும் சிங்க் உருளைகளை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இலங்கைக் கைத்தொழில் அபிவிருத்தி சபை மற்றும் மொரட்டுவைப் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொண்டுள்ள ஆய்வுக்கமைய, இரும்பு, சீனச்சட்டி, அலுமினியம், செப்பு மற்றும் பித்தளைக்கு உள்ளுர் கைத்தொழிலாளர்களிடம் அதிக கேள்வி இருப்பதாகவும், சிங்க் மங்கனீஸ், அதிக காபன் கொண்ட இரும்பு மற்றும் வெள்ளிக்கான கேள்வி அதிகரித்து வருவதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளுர் கைத்தொழில்களை ஊக்குவிக்கும் அரச கொள்கைக்கமைய துண்டு உலோகங்களுக்கான கேள்வி மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது செப்புக்கம்பி ஏற்றுமதிக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பாக மீள் பரிசீலனை செய்து மேலும் பெறுமதிசேர் உற்பத்திகளுக்காக செப்புக்கம்பி ஏற்றுமதியை இடைநிறுத்துவது சிறப்பானது என கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, இரும்பு, செப்பு, அலுமினியம், வெள்ளி, அதிக காபன் கொண்ட இரும்பு, பித்தளை, சீனச்சட்டி போன்ற உலோகங்களின் துண்டு உலோகங்களும் அலுமிமினியம் உருளை, சிங்க் உருளை மற்றும் செப்புக் கம்பி உள்ளுர் கைத்தொழில்களுக்காக மட்டும் பயன்படுத்துவதற்கும், அவ்வாறு பயன்பாட்டுக்கு உதவாத உலோகத் துண்டுகள் இலங்கைக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் ஏனைய ஏற்புடைய நிறுவனங்களின் சிபார்சுக்களுக்கமைய மாத்திரம் ஏற்றுமதிக்கான அனுமதி வழங்கவும் கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


08. காணிகள் இல்லாத இராணுவ வீரர்களின் வதிவிடத்திற்கான காணி வழங்கல்.

இராணுவ வீரர்களுக்கு அரச காணிகளைப் பெற்றுக் கொடுத்தல் தொடர்பாக முன்னிருந்த கொள்கை 2016 ஆம் ஆண்டு யூலை மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் திருத்தப்பட்டு புதிய பொறிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளமையால் அதற்கு முன்னிருந்த கொள்கைக்கமைய காணிகளைப் பெற்றுக்கொண்ட சில இராணுவ வீரர்கள் சிரமங்களை எதிர்;கொள்வதாகத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனால், ஒரே இராணுவ வீரர்; குழுவுக்கு நிவாரணம் வழங்கும் போது ஏற்பட்டுள்ள சமத்துவமின்மைகளை நீக்குவதற்காக புதிய பொறிமுறையொன்றை அறிமுகம் செய்வதற்காக காணி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


09. அதிக வெப்பநிலை மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட தேயிலைத் தோட்டப் பயிர்ச்செய்கைக்காக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு மானியம் வழங்கல்

அதிக வெப்பநிலை மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட தேயிலைத் தோட்டப் பயிர்ச்செய்கையை மீள்நிலைக்குக் கொண்டு வருவதற்காக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு இலவசமாக தேயிலைக் கன்றுகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2020 யூன் மாதம் 03 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இதுவரை சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை மூலம் 105 மில்லியன் ரூபாய்கள் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 3.5 மில்லியன் தேயிலைக் கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வருடத்தின் எதிர்வரும் காலப்பகுதியில் 75 மில்லியன் ரூபாய்கள் செலவில் 2.5 மில்லியன் தேயிலைக் கன்றுகள் விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த தகவல்கள் அமைச்சரவையால் கருத்தில் எடுக்கப்பட்டது.


10. 1978 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க நீதிமன்ற ஒழுங்கமைப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

குற்றவியல் வழக்கு ஏற்பாட்டுச் சட்டம் மற்றும் தண்டனைச் கோவைச் சட்டங்களைத் திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழு மேல் நீதிமன்றங்களுக்கு 'பதிவு அதிகார நீதிபதிகள்' நியமிப்பதற்கும், மேல்நீதிமன்றங்களில் வழக்குக்கு முன்னரான விசாரணைகள் தொடர்பான சம்மேளனத்தை' நடாத்துதல் தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, வழக்குக்கு முன்னரானகள் விசாரணைகள் சம்மேளனத்திற்கான நடபடிமுறைகளை அறிமுகம் செய்வதற்காக 1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் வழக்கு ஏற்பாட்டு சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது.

1978 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க நீதிமன்ற ஒழுங்கமைப்புக்கள் சட்டத்தின் பிரகாரம் அனைத்து வழக்குக்கு முன்னரான விசாரணை மற்றும் வழக்குக்குப் பின்னரான விசாரணை நடவடிக்கைகள் தொடர்பாகச் செயற்படுவதற்கு நீதிமன்ற பதிவு அதிகார நீதிபதியொருவரை நியமிப்பதற்காக ஏற்பாடுகள் காணப்பட்டாலும், நிலவுகின்ற சில தொழிநுட்பச் சிக்கல்களால் அப்பதவிக்கான நியமனம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. வழக்குக்கு முன்னரான விசாரணை மற்றும் வழக்குக்குப் பின்னரான விசாரணை நடவடிக்கைகளாவன நீதிமன்றச் செயற்பாடுகள் என்பதால் குறித்த நியமனங்கள் நீதிச் சேவை ஆணைக்குழு மூலம் தற்போது சேவையிலுள்ள நீதிபதிகளில் நியமிக்க வேண்டியுள்ளது. அதேபோல் நீதிமன்ற ஒழுங்கமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'நீதிமன்ற பதிவாளர் பதவி' 'பதிவு அதிகார- நீதிபதி' என மாற்றுதல் உகந்ததென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த சட்ட ஏற்பாடுகளை உள்வாங்கி 1978 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க நீதிமன்ற ஒழுங்கமைப்புச் சட்டத்தை திருத்துவதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


11. றாகம பேரலந்த ஈரநிலப் பிரதேசத்தை அண்டிய பகுதியில் பொழுதுபோக்குப் பூங்கா அமைத்தல்

றாகம பேரலந்த வதிவிட வலயத்தில் அமைந்துள்ள பேரலந்த ஈரலிப்பு நிலத்தை அண்டிய பகுதியில் பொழுதுபோக்குப் பூங்கா அமைக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்திற்கான ஒப்பந்தம், நேரடி ஒப்பந்தமாக இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்கும், அதற்குத் தேவையான ஆலோசனைச் சேவையை நகர அபிவிருத்தி அதிகாரசபை மூலம் வழங்குவதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


12. இலங்கை சப்பிரகமுவ பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட நிர்மாணம் மற்றும் பொறியியல் ஆலோசனைச் சேவை நிறுவனத்தைத் தெரிவு செய்வதற்கான ஒப்பந்தம் வழங்கல்

இலங்கை சப்பிரகமுவ பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தை அமைப்பதற்காக 187.5 சவூதி றியால் மில்லியன்கள் கடனைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் சவூதி அபிவிருத்தி நிதியத்துடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த மருத்துவ பீடத்தை அமைக்கும் பணிகளுக்காக பொருத்தமான ஆலோசனை சேவை நிறுவனத்தைத் தெரிவு செய்வதற்காக போட்டி விலைமனு கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஆலோசனைச் சேவை ஒப்பந்தம் சவூதி அரேபியா இராஜ்ஜியத்தின் டா இன்ஜினியரிங்க் கம்பனிக்கு 5.37 சவூதி றியால் மில்லியன்களுக்கு வழங்குவதற்கு கல்வி அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


13. உருகுணைப் பல்கலைக்கழகத்தின் இணை-சுகாதார பீட கட்டிடம், முதலாம் கட்டம் மற்றும் நிர்மாணத்திற்கான ஒப்பந்தம் வழங்கல்

உருகுணைப் பல்கலைக்கழகத்தின் இணை-சுகாதார பீட கட்டிடம், முதலாம் கட்டம் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2018 செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய பொருத்தமான ஒப்பந்தக்காரர்களைத் தெரிவு செய்வதற்காக தேசிய போட்டி விலைமனுக் கோரல் முறைக்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட ஆலோசனை பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஒப்பந்தம் சதுட பில்டேர்ஸ் தனியார் கம்பனிக்கு 1501.73 மில்லியன் ரூபாய்களுக்கு வழங்குவதற்கு கல்வி அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


14. இலங்கை சப்பிரகமுவ பல்கலைக் கழகத்தின் தொழிநுட்ப பீட கட்டிட நிர்மாணத்திற்கான ஒப்பந்தம் வழங்கல்

ஆசிய அபிவிருத்தி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் இலங்கை சப்பிரகமுவ பல்கலைக் கழகத்தின் தொழிநுட்ப பீட கட்டிட நிர்மாணத்திற்கான பொருத்தமான ஒப்பந்தக்காரர்களைத் தெரிவு செய்வதற்காக தேசிய போட்டி விலைமனுக் கோரல் முறைக்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஒப்பந்தம் இன்டர்நஷனல் கொன்ஸ்ரக்ஷன் கொன்சோடியம் (தனியார்) கம்பனிக்கு 3.01 மில்லியன் அமெரிக்கன் டொலர்களுக்கு மற்றும் 1,507.04 மில்லியன் ரூபாய்களுக்கு (VAT நீங்கலாக) வழங்குவதற்கு கல்வி அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


15. கந்தர மீன்பிடித் துறைமுகம் நிர்மாணிப்புக்கான ஒப்பந்தம் வழங்கல்

மாத்தறை மாவட்டம் தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவில் கந்தர மீன்பிடித் துறைமுகம் நிர்மாணிப்புக் கருத்திட்டத்திற்காக 2019 ஆம் ஆண்டு யூலை மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கமை, தேசிய போட்டி விலைமனுக் கோரல் முறைக்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஒப்பந்தம் RR SENOK JV கம்பனிக்கு 5,367.69 மில்லியன் ரூபாய்களுக்கு (VAT நீங்கலாக) வழங்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


16. அத்துல்கோட்டை அங்கம்பிட்டி வீதியையும் இராஜகிரிய பாடசாலை வீதியை இணைத்து, இராஜகிரிய கால்வாயக்குக் குறுக்கே பாலம் அமைத்தல்

அத்துல்கோட்டை அங்கம்பிட்டி வீதியையும் இராஜகிரிய பாடசாலை வீதியை இணைத்து, இராஜகிரிய கால்வாயக்குக் குறுக்கே பாலம் அமைக்கும் ஒப்பந்தம் மட்டுப்படுத்தப்பட்ட போட்டி விலைமனுக் கோரல் முறைக்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஒப்பந்தம் அரச அபிவிருத்தி நிர்மாணிப்புக்கள் கூட்டுத்தாபனத்திற்கு 1,698.55 மில்லியன் ரூபாய்களுக்கு (VAT நீங்கலாக) வழங்குவதற்கு பெருந்தெருக்கள் அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


17. யாழ்ப்பாண நகரில் நீர்விநியோகத் தொகுதி மற்றும் குழாய் பொருத்தலுக்கான ஒப்பந்தம் வழங்கல்

யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புக் கருத்திட்டத்தின் ஒரு பகுதியான யாழ்ப்பாண நகரில் நீர்விநியோகத் தொகுதி மற்றும் குழாய் பொருத்தலுக்கான ஒப்பந்தம் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஒப்பந்தம் M/s NCC கம்பனிக்கு 3,160.20 மில்லியன் ரூபாய்களுக்கு (VAT நீங்கலாக) வழங்குவதற்கு நீர் வழங்கல் அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


18. 2020.11.01 தொடக்கம் 2021.06.30 வரையான எட்டு மாத காலப்பகுதிக்கான பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தம் வழங்கல்

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, 2020.11.01 தொடக்கம் 2021.06.30 வரையான எட்டு மாத காலப்பகுதிக்காக கீழ்வரும் வகையில் பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதிக்கான நீண்டகால ஒப்பந்தம் வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

• பெற்றோல் (92  Unl) 1,800,000 பெரல்கள், பெறுகை M/s ES Energy DMCC, UAE இற்று வழங்கல்

• அதிகபட்ச சல்பர் 0.05 வீதமான டீசல் 1,680,000 பெரல்கள் பெறுகை சிங்கப்பூரின் M/s Swis Singapore Overseas Enterprises Ptc. Ltd. இற்கு வழங்கல்


19. கொவிட் 19 (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம்

கோவிட் 19 தொற்று நிலைமையால் தற்போது நீதிமன்றங்களில் காணப்படும் வழக்கு நடவடிக்கைகளுக்கு ஏற்ப நீதி வழங்குவதற்காக குறித்த அனைத்து தரப்பினர்கள் மற்றும் ஆட்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கும் வகையில் குறித்தவொரு நிலையான தற்காலிக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் தேவை உருவாகியுள்ளது. குறிப்பாக நிலையான காலப்பகுதியில் நடவடிக்கையெடுப்பதற்காக ஏதேனுமொருவருக்கு கொவிட் 19 தொற்று நிலைமையால் குறித்த காலப்பகுதியைத் தவிர்த்து குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சட்ட ஏற்பாடுகளை தயாரித்தல் உகந்ததென அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, அடையாளங் காணப்பட்ட குறித்த விடயங்களை உள்ளடங்கியதாக குறித்த ஏற்பாடுகளை தயாரிப்பதற்காக கொவிட் 19 (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்திற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


20. மாவட்டச் செயலாளர்கள்/அரசாங்க அதிபர்கள் பொறுப்பிலுள்ள நெல் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையிடமுள்ள நெல் அரிசியாக்கி சதொச விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்தல்

தற்போது சந்தையில் நிலவும் அரிசித் தட்டுப்பாடு மற்றும் கட்டுப்பாட்டு விலைக்குப் போதுமானளவு அரிசியை விநியோகிப்பதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் முன்வராதமையை கருத்தில் கொண்டு, மாவட்டச் செயலாளர்கள்/அரசாங்க அதிபர்கள் பொறுப்பிலுள்ள நெல் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையிடமுள்ள நெல் அரிசியாக்கி சதொச விற்பனை நிலையங்கள் மூலம் கட்டுப்பாட்டு விலைக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)