ஆறு மாசத்துல தூங்கினாள்
ஆரு  ராவெலாம் முழிக்கிற
எழுந்திரி ... 
ஆறு வயசுல தூங்கினாள் 
ஆடி ஓடி விளையாடு 
எழுந்திரி... 
ஆறு படிக்கும் போது தூங்கினாள் 
ஆசையா படி 
எழுந்திரி... 
ஆளான பின்னும் தூங்கினாள் 
ஆக்கிப் பழகுர வயசு 
எழுந்திரி.. 
ஆணான கணவனுக்கு வாக்குப் பட்டு தூங்கினாள் 
ஆரு வீ்ட்டு வேலை செய்றது 
எழுந்திரி... 
ஆறு மாச மசக்கைல தூங்கினாள் 
ஆழம் எடுத்து அடி வை புள்ள நல்லா இருக்கும் 
எழுந்திரி.. 
ஆண் புள்ள பெத்த பின்னும் தூங்கினாள் 
ஆளாக்கனும் அவன 
எழுந்திரி.. 
ஆசையா மருமகள் வந்த பின்னும் தூங்கினாள் 
ஆன்ட்டி பேரன் வருகிறான் விளையாட
எழுந்திரி.. 
ஆச்சி  வயசிலும் தூங்கினாள் 
ஆள் காணா நோய் வரும் 
எழுந்திரி.. 
எப்போதும் 
எப்படியும் 
எதுக்கும் 
அசந்து தூங்க அவளால் 
முடிவதில்லை 
இசைந்து உறங்க அவளுக்கு 
அவகாசம் இல்லை... 
அனுமதிகளும் அனுமானங்களும் 
அவளது தூக்கத்துக்கு 
தடை யாக இருக்கும்.. 
ஒரு நாள் வரும் 
ஒரு நாளில் 
எல்லோரும் விழி திறந்து நிற்பர் 
அவளைத் தவிர ... 
அது வரை 
அவள் விழிகளுக்கு 
ஓய்வில்லை....
ஆனால்..
செவிகளுக்கு கேட்டுக் கொண்டே இருக்கும் 
"எப்ப பாரு தூக்கம் தான் "
01.09.2021
Humadha A Gaffar
