எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பதற்றநிலை அதிகரித்து வருவது குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் காணப்படும் நிலவரம் குறித்து ஆழ்ந்த கரிசனை வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பொதுமக்களிற்கும் படையினர் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்ற பல சம்பவங்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆயுதப்படையினர் மற்றும் பொலிஸாரினால் பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தாக்கப்படும் சம்பவங்கள் குறித்து வீடியோக்கள் வெளியாகியுள்ளன, இறுதியாக சமீபத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவர் மீது இராணுவ அதிகாரி காலால் உதைந்துள்ளார், பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரும் படையினரும் எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்த சம்பவங்களும் உள்ளன என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எப்படியாவது எரிபொருளை பெற்றுக் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் காத்திருக்கின்றனர் அவர்களிற்கான தீர்வுகள் கண்ணிற்கு தென்படாததால் ஆற்றவொணா நிலைமை காரணமாக பதற்ற நிலைமை உருவாகியுள்ளது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக உருவாகக்கூடிய உடனடி ஆபத்துக்கள் குறித்து ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்ட விரும்புவதாக தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தற்போதைய அமைதியின்மை பொதுமக்களிற்கும் படையினர் பொலிஸாருக்கும் இடையில் மோதலாக வெடிக்கும் ஆபத்துள்ளது.
சில வருடங்களின் முன்னர் இவ்வாறான மோதல் பொதுமக்களின் உயிரிழப்பிற்கு வழிவகுத்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளதுடன் அவ்வாறான சம்பவம் மீண்டும் இடம்பெற்றால் படையினருக்கும் இராணுவத்தினருக்கும் அது அவப்பெயரை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.