இலங்கை மாணவர்களுக்கு அமெரிக்கா வழங்கிய கடலை பருப்பு

  Fayasa Fasil
By -
0




இலங்கை முழுவதும் உள்ள பாடசாலைச் சிறார்களுக்குப் போசாக்கினை வழங்குவதற்காக அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் (USDA) ஊடாக Save the Children அமைப்பின் பங்காண்மையுடன் 320 மெட்ரிக் தொன் கடலை பருப்பை அமெரிக்கா இன்று (26) நன்கொடையாக வழங்கியது.

இந்த நன்கொடையானது ஒரு மிகப்பெரிய 3,000 மெட்ரிக் தொன் உணவு நன்கொடையின் ஒரு பகுதியாகும். அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த மற்றும் சுகாதார அமைச்சு, தேசிய திட்டமிடல் திணைக்களம் மற்றும் Save the Children ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்நன்கொடையினைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

“அமெரிக்க மக்கள் வழங்கும் இந்த நன்கொடையானது மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய இலங்கையர்களை – அதாவது குழந்தைகளை – இலக்காகக் கொண்டுள்ளதுடன் அவர்களின் பசியை விடவும் அவர்களின் பாடசாலைக்கல்வியில் அவர்கள் கவனம் செலுத்துவதற்கு அவர்களுக்கு உதவுகிறது. போசாக்கினை வழங்கும் ஒவ்வொரு வேளை உணவும், இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மிகமோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு அனைத்து இலங்கையர்களுக்கும் உதவுவதற்கு அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாக அமையும்” என தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார்.


இந்த உணவுத் தொகுதியானது USDA McGoven-Dole சர்வதேச சிறார்களின் போசாக்கு மற்றும் கல்விக்கான உணவு நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது பசியைக் குறைப்பதன் மூலம் கல்வியறிவு மற்றும் பாடசாலைக்கான வருகையை மேம்படுத்துவதற்காக உணவுப் பாதுகாப்பற்ற சிறுவர்களுக்கு உடனடி அவசர உதவிகளை வழங்குவதை இலக்காகக் கொண்ட ஒரு ஐந்தாண்டு கால 26 மில்லியன் டொலர் செயற்திட்டமாகும். அதிக தேவையுடையவர்களை இந்த உணவு சென்றடைவதை உறுதி செய்வதற்காக USDA மற்றும் அதன் பங்காளரான Save the Children என்பன இலங்கை அரசாங்கம் மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுகின்றன.

2021ஜூன் மற்றும் 2022 ஜனவரி ஆகிய காலப்பகுதிக்கிடையில் மாத்திரம், சந்தைக் கூட்டணிகள் ஊடாக கல்வியறிவு மற்றும் கவனிக்கும் தன்மைக்கான தன்னாட்சியை மேம்படுத்துதல் (PALAM/A) எனும் செயற்திட்டமானது, கொவிட்-19 முடக்கநிலைகளின் போது 105,000 இற்கும் மேற்பட்ட சிறார்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு – மொத்தமாக 460,000 இற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு – கடலை பருப்பு மற்றும் அலாஸ்காவைச் சேர்ந்த இளஞ்சிவப்பு தகரத்தில் அடைத்த மீன் ஆகியவற்றின் மூலம் புரதச் சத்துக்கான தேவைகளை இரண்டு முறை வழங்கியது. ஓகஸ்ட் மாத நடுப்பகுதி வரை, PALAMA செயற்திட்டமானது அண்ணளவாக 50,000 பாடசாலை மாணவர்களுக்கு குறைநிரப்பு ஊட்டச்சத்துக்களை வழங்கியுள்ளது.

உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவும் கஷ்டங்களை ஒழிப்பதற்காகவும் மிகப்பாரியளவில் உடனடி உதவிகளை வழங்கும் நோக்குடன் உலகளாவிய ரீதியில் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் பாரிய முயற்சிகளை இந்த நன்கொடை பிரதிபலிக்கிறது. இவ்வாறான உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களானது இலங்கையின் அபிவிருத்திப் பயணத்திற்கு உதவி செய்வதற்காகவும் பொருளாதாரத்தின் நிலைபேறான தன்மையினை மேம்படுத்துவதற்காகவும் அமெரிக்கா மற்றும் இலங்கை மக்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலைத்திருக்கும் பங்காண்மையின் ஒரு அங்கமாகும். PALAMA செயற்திட்டங்களுக்கு மேலதிகமாக, ஜூன் மாதத்தில் இருந்து மட்டும் வழங்கப்பட்ட கிட்டத்தட்ட 32 மில்லியன் டொலர் பெறுமதியான புதிய மனிதாபிமான மற்றும் தொழில்நுட்ப உதவிகள் உட்பட இலங்கைக்கு 179 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான புதிய உதவிகளை இந்த ஆண்டு அமெரிக்கா அறிவித்துள்ளது. 


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)