கிரிந்தவில் வாழும் மலாய் முஸ்லிம்கள் தமிழ் பேசுவது ஏன்? - சிராஜ் மஷ்ஹூர்

Rihmy Hakeem
By -
0

 

கிரிந்த அழகியதொரு கடலோரக் கிராமம். தென்னிலங்கையின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. திஸ்ஸமஹாராம நகரிலிருந்து 14 Km தூரம்.

டச்சுக்காரர்களும் ஆங்கிலேயரும் இவர்களை இங்கு குடியேற்றியுள்ளனர். உப்பளம் மற்றும் யால தேசிய சரணாலய உருவாக்கத்தில், இவர்களது பாரிய உழைப்பும் பங்களிப்பும் இருக்கின்றன. இங்குள்ள கிரிந்த மீன்பிடித் துறைமுகம், இவர்களது பிரதான வருமான மூலமாக விளங்குகிறது.

20 ஆண்டுகளுக்கு முன்னர், பல்கலைக்கழக மாணவர்களோடு சுற்றுலா சென்றபோது, கிரிந்த மீன்பிடித் துறைமுகத்திற்கும் சென்றிருந்தோம்.

தொழுவதற்காக அங்கிருந்த பள்ளிவாசலுக்குப் போயிருந்தோம். அவர்கள் எங்களோடு தமிழில் பேசினார்கள். பின்னர் தமக்கிடையே பேசும்போது வேறொரு மொழிக்கு மாறிக் கொண்டார்கள். அவர்களது தோற்றத்தைப் பார்த்ததும், மலாய் முஸ்லிம்கள் என்று புரிந்து கொண்டேன். அதுபற்றிக் கொஞ்சம் பேசினோம்.

அன்றிலிருந்து அவர்கள் பற்றித் தேடத் தொடங்கினேன். பின்னர் கொழும்பில் அலுவலகப் பணியின்போது, எனது செயலாளராக வந்தார் நண்பர் றஷீத். அவர் கிரிந்தையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவரது தாய்மொழி மலாய். நளீமிய்யா பட்டதாரி.

மிகவும் சுறுசுறுப்பானவர். அவர் மூலம் மேலும் பல விடயங்களைத் தெரிந்து கொண்டேன்.

எனக்கு செயலாளராக/ உதவியாளராக பணி புரிந்தவர்களிலேயே, எனது வேகத்தோடு மிகவும் இசைந்து வந்தவர் நண்பர் றஷீத்தான். மறக்கவே முடியாத ஒருவர். எனக்கு அதிகம் உதவியாக இருந்தவர். அதிகாலை 4.00 மணிக்கு அல்லது நள்ளிரவு 12.00 மணிக்கு- எப்போது பயணம்  போவதென்றாலும் அவர் தயார். மிகுந்த திறமைசாலி. நன்றாக வாகனம் ஓட்டுவார். 

பின்னர் ஜாமிஆ நளீமிய்யாவில் சிங்கள மொழி விரிவுரையாளராக இருந்தார். இப்போது கிரிந்த முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் பட்டதாரி ஆசிரியராக உள்ளார்.

திஸ்ஸமஹாராம போனதும், நண்பர் றஷீதைத்தான் தொடர்பு கொண்டேன். எனது ஆய்வுத் தேவைக்காக அங்கு வரவேண்டி இருப்பதை அவருக்கு முன்னமே சொல்லி வைத்திருந்தேன்.

எனது முதுதத்துவமாணிப் பட்ட ஆய்வில், கிரிந்த ஒரு முக்கியமான ஆய்வுக் களம். 

✨எனது ஆய்வுப் பிரச்சினை என்ன?

கிரிந்த, இலங்கையிலுள்ள ஒரேயொரு மலாய் முஸ்லிம் கிராமம். ஏனைய நகரங்களில் மலாய் முஸ்லிம்கள் பலதரப்பட்டோரோடு கலந்துதான் வாழ்கிறார்கள். கொழும்பு கொம்பனித் தெரு, வத்தளை ஹுனுபிட்டிய, ஹம்பாந்தோட்டை நகரம்- இங்கெல்லாம் அவர்கள் செறிந்து வாழ்ந்தாலும், ஏனையோரோடு கலந்துதான் வாழ்கின்றனர். ஆனால், கிரிந்த இதிலிருந்து வித்தியாசமான ஒரு ஊர்.

கிரிந்த முஸ்லிம்களின் தாய்மொழி மலாய். அவர்களது வீட்டு மொழியும், தமக்கிடையிலான தொடர்பாடல் மொழியும் மலாய்தான். ஆனால், இது இலங்கை மலாய் (Sri Lankan Malay). பாஷா இந்தோனேசியா, மலேசியாவின் பாஷா மலாயு ஆகியவையும் ஆஸ்திரோனேசிய மொழிக் குடும்பத்தில் அடங்கும் மலாய் துணைக் குடும்ப மொழிகள்தான். ஆனாலும், இலங்கை மலாய் மொழி, அவற்றிலிருந்து வேறுபட்டிருக்கிறது. இலக்கணம், சொல்வளத்தில் கூட வேறுபாடுகள் உள்ளன.

இலங்கை மலாய் மொழியை, உலகின் அழிந்து கொண்டிருக்கும் மொழிகளின் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது. இலங்கை மலாய் மொழி, பேச்சு மொழியாக மட்டுமே நிலைத்துள்ளது. இதற்கு எழுத்து வடிவம் இல்லை.

கிரிந்த முஸ்லிம்கள் வாழ்வது, தனிச் சிங்கள மொழிப் பிராந்தியமாக அடையாளம் காணப்படும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில். இங்கு அலுவலக, வணிக மற்றும் முக்கிய தொடர்பாடல்கள் எல்லாமே சிங்களத்தில்தான் இடம்பெறுகின்றன. கிரிந்த முஸ்லிம்கள் நன்றாக சிங்களம் பேசுவார்கள்.

இப்படி மலாய் மற்றும் சிங்கள மொழிகள் இருக்கையில், இவர்களால் தமிழில் பேச முடியுமாக இருப்பது ஏன்? அதற்கான சமூக-பண்பாட்டுத் தேவை என்ன? கிரிந்த முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் கல்வி மொழியாக தமிழ் இருப்பது ஏன்? ஐந்து வயது வரை வீட்டில் மலாய் பேசிய பிள்ளை, பாடசாலையில் தமிழில் படிப்பது ஏன்? இவர்களது சமய நடவடிக்கைகளான பயான்கள், பெரும்பாலும் தமிழில் இடம்பெறுவது ஏன்? 

இவைதான் எனது ஆய்வுப் பிரச்சினைகள். இது பற்றிய Hypothesis உள்ளது. இது குறித்த கள ஆய்வுகளைத் தொடங்கியிருக்கிறேன். நிறைய சுவாரசியமான விடயங்கள் உள்ளன.

இவர்கள் மட்டுமல்ல, இலங்கை முஸ்லிம்கள், மலாய் முஸ்லிம்கள், மேமன் மற்றும் போறா எல்லோருமே வெவ்வேறு அளவில் தமிழ் தெரிந்தவர்கள். குறைந்தபட்சம், சில தமிழ்ச் சொற்கள்- குறிப்பிட்ட பேச்சுவழி உரையாடல்கள்- இன்னும் இலங்கை வாழ் முஸ்லிம்களிடையே சாத்தியமாக இருக்கிறது. 

இலங்கையிலுள்ள முஸ்லிம்களது உள்ளக சமூகப் பன்மைக்குள், தமிழ் இன்னும் இணைக்கும் கண்ணியாக இருப்பது ஏன்?

இவைதான் எனது ஆய்வுப் பிரச்சினைகள். இன்னும் இது பற்றி எவ்வளவோ எழுதலாம்.

ஆய்வு முடிவுகள் சுவாரசியமாய் அமையும் என்று நம்புகிறேன்.

சிராஜ் மஷ்ஹூர்

24.08.2022






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)