EPF பெற்றுக் கொள்வதற்கு இனி வரிசையில் நிற்க தேவையில்லை

  Fayasa Fasil
By -
0


ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக் கொள்வதற்காக தற்போது காணப்படும் நீண்ட வரிசைக்கு எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழில் அமைச்சர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக் கொள்வதற்கு மற்றும் பதிவினை மேற்கொள்வதற்கான தினம் மற்றும் நேரத்தை 1958 எனும் இலக்கத்திற்கு அழைத்தோ அல்லது appointment.labourdept.gov.lk இணையத்தளமூடாகவோ மேற்கொள்ள முடியும்.

அதன் மூலம் வரிசையில் நிற்காமல் தொழில் திணைக்களத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள கூடிய சேவைகளை பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டி காட்டினார் .

அதன்படி சாதாரண நன்மையை பெறுவதற்கான விண்ணப்பம், 30% நன்மைக்காக விண்ணப்பித்தல், மரணமடைந்த அங்கத்துவ உரிமையாளர்கள் நன்மையை பெறுவதற்கான மற்றும் சேவை பெறுபவர்களை பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளை இதன் ஊடாக மேற்கொள்ள முடியும்.

இதுவரை காலமும் நாரஹேன்பிட்டிய தொழில் திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஒன்லைன் வசதிகள் எதிர்வரும் முதலாம் திகதியின் பின்னர் 40 மாவட்ட காரியாலயங்கள், 17 உபகாரியாலயங்கள் மற்றும் 11 வலய காரியாலயங்கள் மூலமும் பெற்றுக் கொள்ள முடியும் என தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

இதுவரை காலமும் காரியாலத்துக்கு வந்து இலக்கங்களை பெற்றுக் கொண்டு சேவைகளை பெற்றுக் கொண்டதற்கு பதிலாக ஒன்லைன் மூலம் நேரத்தை ஒதுக்கி கொள்ள முடியும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் சேவையாளர்கள் சிரமத்துக்கு உள்ளாக நேரிடும் எனவும் ஆணையாளர் தெரிவித்தார்.

கண்காணிப்பு கால எல்லைக்குப் பின்னர் ஒன்லைன் நடவடிக்கை கட்டாயமாக்கப்படும் எனவும் தொழிலாளர் திணைக்களத்தின் சேவைகளை திறம்பட மற்றும் விரைவாக மேற்கொண்டு பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை இதன் மூலம் குறைக்க எதிர்பார்ப்பதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)