அரச வருமானத்தை நூற்றுக்கு 15 வீதமாக அதிகரிக்க எதிர்பார்க்கின்றோம் - நிதி இராஜாங்க அமைச்சர்

TestingRikas
By -
0

மத்திய மற்றும் நீண்ட கால திட்டங்களை உள்ளடக்கியே இம்முறை வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரச வருமானத்தை நூற்றுக்கு 15 வீதமாக அதிகரித்துக் கொள்ள எதிர்பார்க்கின்றோம் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (15) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த வரவு செலவு திட்டம் மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் கடந்த காலங்களில் நிதி அமைச்சர்கள் எதிர்கொண்டிருந்த சவால்களை விட நூறுவீதம் சவாலை எதிர்கொண்டே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்திருக்கின்றார்.

சம்பிரதாய வரவு செலவு திட்டங்களில் காணப்படும் நிவாரணங்கள் இதில் இல்லாவிட்டாலும் மக்களின் வாழ்க்கைச்சுமையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அத்துடன் வரவு செலவு திட்டம் எதுவும் இல்லாத புஸ்வாணம் அல்ல. மக்களை வாழவைக்க தேவையான புதிய முயற்சிகளை ஏற்படுத்தவும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டமாகவே நாங்கள் காண்கின்றோம்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கே வரி அதிகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த வரி அதிகரிப்பினால் மக்களுக்கு கஷ்ட நிலைமை ஏற்பட்டிருப்பதை நாங்கள் உணர்கின்றோம். என்றாலும் இந்த வரிகள் நிரந்தரமானவை அல்ல.

மேலும் நாடு பொருளாதார பிரச்சினை அன்றி பொருளாதார சவாலையே எதிர்நோக்கியுள்ளது. அந்த சவால்கள் வெற்றி கொள்ளப்பட வேண்டும்.அதற்கான இலக்குகளை முன்வைத்தே இம்முறை வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட யோசனைகளை முறையாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் வரவு செலவு திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் நாட்டு மக்களின் புரிந்துணர்வு அவசியம். 

அதேவேளை எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் புரிந்துணர்வுடன் செயல்படுவது அவசியம். இது பாரிய வீழ்ச்சியடைந்துள்ள நாடு மீள எழ முயற்சிக்கும் காலகட்டம் என்பதை உணர்ந்து சரியை சரியாக ஏற்றுக் கொள்ளும் மனநிலையுடன் செயல்படுவது அவசியமாகும்.

அத்துடன் உலக பொருளாதாரம் எமது நாட்டின் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம், ரஷ்யா-உக்ரைன் யுத்தத்தினால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 


எமது நாட்டின் நூற்றுக்கு 18 விதமான தேயிலை மேற்படி இரண்டு நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே போன்று 45 வீதமான கோதுமை மா இந்த நாடுகளில் இருந்தே கொள்வனவு செய்யப்பட்டு வந்தது. அதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இலக்குகளின் படி அரச வருமானம் நூற்றுக்கு 15 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும். பண வீக்கம் தனி இலக்கத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும். இத்தகைய நிலையில் அரசாங்கத்தின் கடன் நூற்றுக்கு 110  வீதத்தை விட அதிகரித்துள்ளது.

அதேபோன்று பாராளுமன்றத்திற்கான ஜனநாயகத்தையும் நாட்டு மக்களுக்கான ஜனநாயகத்தையும் ஒருபோதும் குறைக்க முடியாது. 

நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு இணக்கப்பாடு மற்றும் புரிந்துணர்வுடன் செயல்படுவது அவசியம் என்பதுடன் துணிவுடன் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியதும் அவசியம்.

அத்துடன் வரி வருமானத்தை அதிகரித்துக்கொள்ளும் வகையில் வசதிபடைத்தவர்கள்  சுயமாக முன்வந்து வரி செலுத்தும் நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்க இருக்கின்றது.

அதனை ஒரு முன்மாதிரியாக பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்து ஆரம்பிக்கும் வகையில் அதுதொடர்பான விண்ணப்பப்படிவம் ஒன்றை வழங்க இருக்கின்றோம் என்றார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)