இலங்கையில் தோற்றுப் போன அனர்த்த நிவாரணம் - பாதிக்கப்பட்ட ஒருவரின் நேரடி அனுபவம்

Rihmy Hakeem
By -
0

 


நான் இந்தக் கட்டுரையை எழுதுவது ஒரு செய்தியைப் பகிர்வதற்காக மட்டும் அல்ல; நான் நேரடியாக அனுபவித்த வேதனையையும், நாட்டின் நிர்வாகத்தால் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டோம் என்பதனையும் வெளிப்படுத்துவதற்கேயாகும்.

 இந்த அனர்த்தத்திலிருந்து உயிர் தப்பிய ஒருவனாக, நான் கண்டவை, அனுபவித்தவைகளையும் எவ்விதமான மெருகூட்டலுமின்றி இங்கு குறிப்பிடுகின்றேன்.


 மரணப் பீதியுடன் மூன்று நாட்கள் 


 நாங்கள் உயிருக்கும் மரணத்துக்கும் நடுவில்

சிலாபம் தெதுறு ஓயா ஆற்றைத் தாண்டி, ஹைலேண்ட் பால் சேமிப்பு நிலையத்துக்கு அருகில் நான் மற்றும் சுமார் 250 பேர் மூன்று நாட்களுக்கு மேலாக வெள்ளநீரால் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தோம்.


நாங்கள்:

வெளியே வர முடியாத நிலையில்

*குடிநீரின்றி

*உணவின்றி

*மருந்தின்றி


#குழந்தைகள் அழுகையிலும்,


 #வயோதிபர்களின் துயரத்திலும்


இரவில் குளிரிலும், பகலில் பட்டினியிலும்

உயிர் பிழைப்பதே ஒரு போராட்டமாக இருந்த தருணங்கள். எங்களில் சிலர் கண்முன்னே  நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்


இந்தச் சூழல் ஒரு கற்பனை அல்ல; நான் பார்த்ததும், நான் அனுபவித்ததுமாகும்


இலங்கையின் அனைத்து நிவாரணம் தொடர்பான, அவசர உதவிப் பிரிவு, இலங்கை போலீஸ் திணைக்களம், இலங்கை கடற்படையினர், அனர்த்த முகாமைகள் சேவை பிரிவினர்  என அனைத்து பிரிவினருக்கும்  தகவல் கொடுத்தோம்  ஆனால் பதில் மட்டும் வார்த்தைகளாகவே இருந்தது

ஒவ்வொரு முறையும் கிடைத்த பதில்கள்


"இன்னும் சற்று நேரத்தில் உதவி வருகிறது."


"சரியாக ஐந்து மணிக்கு உணவுப் பொதிகள் அனுப்புகிறோம்."


"கவலைப்பட வேண்டாம், உங்களை பாதுகாக்க நடவடிக்கை நடைபெறுகிறது."



ஆனால் எங்களிடம் வந்தது

எந்த உதவியும் அல்ல  வெறும் வெறுமையான வாக்குறுதிகள் மட்டுமே.


நேர்மையாகச் சொன்னால், இப்பதில்கள்

 உயிரச்சத்தில் இருந்த எங்களுக்கு மரணத்தை விட வேதனையாய் இருந்தன.


ஜனாதிபதியின் துரித நடவடிக்கைகள் என்ற கட்டளையானது  அதிகாரிகளால் உதாசீனம் செய்யப்பட்ட துயரமான நிலையாகக் கண்டோம்.


கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் துரிதநடவடிக்கை தொடர்பில் கட்டளைகளைப் பிறப்பித்திருந்ததை நாங்களும் கேள்விப்பட்டோம்.

ஆனால் அதிகார மட்டத்தில் இருந்த அதிகாரிகள் அந்த உத்தரவுகளை உதாசீனம் அல்லது மீறியமையினை வெளிப்படையாகக் காண முடிந்தது 


இதன் விளைவாக, நிவாரண வேலைத் திட்டம் முழுமையாக தோல்வியடைந்ததை நாங்கள் ( 250 பேரும்) நேரில் அனுபவித்தோம்.


எங்களுக்கு நேர்ந்த பாதிப்பு வெள்ளத்தால் மட்டும் அல்ல;

உதவுவோம் என்று சொல்லி உதவி செய்யாமல் விட்ட நிர்வாக அலட்சியத்தாலுமேயாகும்.


வயோதிபர்கள் நடுங்கியபடி இருந்தார்கள்.

குழந்தைகள் பட்டினியால் வாடினார்கள்.

இளைஞர்கள் உயிர் பிழைக்க முயன்று  தரமற்ற நீரை குடித்தார்கள்

நாங்கள் அனைவரும் எங்களை நாங்களே  காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.


இந்தச் சம்பவம் எனக்கு சொல்லித்தந்த பாடம்:


அனர்த்தம் இயற்கையின் செயல்;

ஆனால் அதை வேதனையாக மாற்றியது மனிதர்களின் பொறுப்பின்மை.


இதுவே அந்த மூன்று நாட்களில் நான் கண்ட வாழ்க்கையின் கொடுமையான உண்மை.


வேப்பங்குளம் - நவ்பர் ஏ கபூர்

Update : இடுப்பளவு மற்றும் நெஞ்சு அளவு வெள்ள நீர். 120 பேர் ஒருவர் கை ஒருவர் பிடித்துக்கொண்டு மூன்றரை கிலோமீட்டர் நடந்து சென்று சிலாபம் நகரை நேற்றிரவு சென்றடைந்துள்ளனர். அதன் பிறகு சிலாபம் பள்ளிவாசலுக்கு சென்று கதைத்த நிலையில் உணவு கிடைத்துள்ளது. பிறகு பெரிய லொறி ஒன்றில் குருநாகல் சென்று பின்னர் புத்தளத்தை வந்தடைந்ததாக நவ்பர் ஏ கபூர் எம்மிடம் தெரிவித்தார். 


6 மைல் நீளம் மற்றும் 05 மைல் அகலம் கொண்ட சிலாபம் நகரின் 2 ஏக்கர் நிலப்பரப்பை தவிர அனைத்து பகுதிகளும் வெள்ள நீரில் மூழ்கியிருந்ததாகவும் அவர் எம்மிடம் தெரிவித்தார். (Siyane News)





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)