2025 ஆம் ஆண்டுக்கான கம்பஹா மாவட்டத்தின் இறுதி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அதன் இணைத் தலைவர்களான மேல் மாகாண ஆளுநர் ஹனி யூசுப் மற்றும் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோரின் தலைமையில் இன்று (16) மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இங்கு முதலில், கம்பஹா மாவட்ட செயலாளர்/ அரசாங்க அதிபர் லலிந்த கமகே அவர்கள், '| “திட்வா” சூறாவளியால் கம்பஹா மாவட்டத்தில் ஏற்பட்ட தாக்கம், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதற்குப் பிந்தைய அனர்த்த நிவாரணப் பணிகளின் முன்னேற்றம்' குறித்து குழுவிடம் விசேட விளக்கமளித்தார். வீட்டுச் சேதங்கள், விவசாயம், கைத்தொழில், கால்நடை வளர்ப்பு, சுகாதாரம், கல்வி, மீன்பிடி, அலங்கார மீன் வளர்ப்பு போன்ற துறைகளில் குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
பதிவுசெய்யப்பட்ட 465 பண்ணைகளில் பயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 2631 ஹெக்டேயர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 5427 விவசாயிகள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைகள் போன்றவற்றைத் தவிர, அனர்த்த நிவாரணங்களைப் பெறுவதற்குத் தகுதியுள்ள 596 இற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உற்பத்தித் தொழில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 19 பாடசாலைகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 20000 பாடசாலை மாணவர்களும் 400 இற்கும் மேற்பட்ட அதிகாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்தச் சேதங்கள் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள், நிவாரணம் வழங்கும் போது எழுந்த பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் 15000/- கொடுப்பனவுடன் மேலதிகமாக ஜனாதிபதி நிதியத்தின் மூலம் ரூபா 10000/- கொடுப்பனவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த மாத இறுதிக்குள் அனைத்து அனர்த்த நிவாரணங்களும் வழங்கப்படும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், உரிமை உறுதிப்படுத்தப்படாத பாலங்கள், வீதிகள் தொடர்பான தகவல்களைத் தேடுதல், அவற்றைக் கட்டுவதற்குத் தேவையான நிதியை வழங்குதல், தாழ் நிலங்களில் உள்ள அனர்த்தப் பகுதிகளை அடையாளம் காணுதல் மற்றும் புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் போது இத்தகைய வெள்ளம் மற்றும் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற் கொள்ளுதல் என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
அனர்த்த நிலைமையைத் தடுப்பதற்காக பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த கம்பஹா மாவட்ட செயலாளர், அடுத்த ஆண்டு நீர்ப்பாசனத் திணைக்களத்துக்காக 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கி, கம்பஹா மாவட்டத்தின் வெள்ள நிலைமையை குறைத்து, அனர்த்தங்களைத் தடுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அதன் பின்னர் மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், 944 திட்டங்களில் 765 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், 169 திட்டங்கள் நடைமுறையில் இருப்பதாகவும், 10 திட்டங்கள் பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்த தாமதமாகியுள்ளதாகவும், தற்போது திட்ட முன்னேற்றம் 80% ஆக இருப்பதாகவும் கம்பஹா மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சமந்தா சேனநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், கம்பஹா மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், முன்னேற்றம், பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்சினைகள், சுகாதாரப் பிரச்சினைகள், கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகள், கழிவு முகாமைத்துவம் போன்றவற்றுக்கு குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் பற்றியும், வீட்டு உதவி, தென்னைச் செய்கை போன்ற புதிய யோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது அமைச்சர்களான விஜித ஹேரத், கிரிஷாந்த அபேசேன, அனில் ஜயந்த, அனுர கருணாதிலக்க, உபாலி பன்னில ஆகிய அமைச்சர்கள் மற்றும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மேல் மாகாண பிரதம செயலாளர் கே. ஜி. பி. புஷ்பகுமார, கம்பஹா மேலதிக மாவட்ட செயலாளர்களான ஜே. டப்ள்யூ. எஸ். கித்சிறி, ஆசிரி வீரசேகர, உதவி மாவட்ட செயலாளர் நிலந்தி குமாரி ஆகியோர், பிரதேச செயலாளர்கள், கம்பஹா மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய உயர் அரச அதிகாரிகள் குழுவினர் பங்கேற்றனர்.
மாவட்ட ஊடகப் பிரிவு - கம்பஹா







