அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் பிர்தௌஸ் ஹாஜியார் முயற்சியில் கஹட்டோவிட்ட சந்தி வயல்வெளிப் பாதைக்கு ‘ஊருக்கு வெளிச்சம்’ திட்டத்தின் கீழ் சூரியசக்தி மின்விளக்குகள் பொருத்தம்!

Rihmy Hakeem
By -
0


அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் அல் ஹாஜ் பிர்தௌஸ் முயற்சியில், "ஊருக்கு வெளிச்சம்" (கமட எளிய) வேலைத்திட்டத்தின் கீழ் கஹட்டோவிட்ட பிரதான சந்தி வயல்வெளிப் பாதையோரமாக மின்கம்பங்களுடன் கூடிய சூரியசக்தி மின்விளக்குகள் (Solar Lights) நேற்று (28) பொருத்தப்பட்டன.


அத்தனகல்ல பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் (தராசு சின்னம்) சார்பில் தெரிவான அல் ஹாஜ் பிர்தௌஸ் அவர்கள், தனது வட்டாரத்திலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பல்வேறு சமூக நல மற்றும் அபிவிருத்திப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.


பிரதேச சபையினூடாக உடனடியாக நிறைவேற்ற முடியாத அவசரத் தேவைகளைக் கண்டறிந்து, மின்விளக்குகளைப் பெற்றுக்கொடுத்தல், மின்கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கம்பங்களை நட்டு மின்விளக்குகளைப் பொருத்திக் கொடுத்தல் போன்ற பணிகளை அவர் முன்னெடுத்து வருகின்றார்.


அந்த வகையில், கஹட்டோவிட்ட பிரதான சந்தி வயல்வெளி ஊடாகச் செல்லும் பாதை இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இது ஊருக்குள் நுழையும் போது ஒரு அச்சமான சூழலை ஏற்படுத்தியதுடன், போதைப்பொருள் பரிமாற்றம் மற்றும் சமூக விரோதச் செயல்களுக்கும் வாய்ப்பாக அமைந்திருந்தது.


இதனைக் கருத்திற் கொண்டு, உறுப்பினர் அல் ஹாஜ் பிர்தௌஸ் தனது சொந்த நிதியிலிருந்து முழுச் செலவையும் ஏற்று, மூன்று சூரியசக்தி மின்விளக்குகளை அதற்கான கம்பங்களுடன் பொருத்திக் கொடுத்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் (NPP) அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் இன்சாப் உடனிருந்து ஒத்துழைப்பு வழங்கியமை விசேட அம்சமாகும்.


சபையில் நிதி ஒதுக்கீடுகள் இல்லாத போதும், மாற்றுத் திட்டங்கள் மூலமாகவும், சொந்த நிதி மற்றும் ஊர் மக்களின் பங்களிப்புடனும் இவ்வாறான சமூகப் பணிகளை பிர்தௌஸ் ஹாஜியார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source - Kahatowita News Page Official











கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)