நிட்டம்புவ - அத்தனகல்ல வீதியின் வத்துபிட்டிவலை சந்தியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி செயலகம் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.பி.ஜி.பிர்தௌஸ் அவர்களினால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட விசேட கோரிக்கை கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் பதில்
ஜனாதிபதி உதவிச் செயலாளர் (பொதுமக்கள் தொடர்பு) பி.எம். அபேசேகரவினால் அனுப்பப்பட்டுள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன:
மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி செயலகம் பணிப்புரை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக எடுக்கப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, கோரிக்கையை முன்வைத்த அல்ஹாஜ் பிர்தௌஸ் அவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறும், தமக்கு அதன் பிரதியை அனுப்பி வைக்குமாறும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் எதிர்பார்ப்பு
நிட்டம்புவ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வத்துபிட்டிவலை சந்தி மிக முக்கியமான ஒரு போக்குவரத்து மையமாக காணப்படுகிறது. இங்கு நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நீண்டகாலமாக பயணிகள் மற்றும் வாகன சாரதிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
பிரதேச சபை உறுப்பினர் பிர்தௌஸ் அவர்களின் இந்த முயற்சியின் மூலம், ஜனாதிபதி செயலகம் நேரடியாகத் தலையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த வீதிப் பிரச்சினைகளுக்கு ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


.jpg)