உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமைக்குரிய மறைந்த கௌரவ சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் 110 ஆவது பிறந்ததினம் நேற்று (17) ஆகும்.
இதனை முன்னிட்டு, கம்பஹா மாவட்டம் - ஹொரகொல்லையில் அமைந்துள்ள பண்டாரநாயக்க நினைவிடத்தில் (சமாதி) விசேட அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று காலை ஹொரகொல்லையில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைத்து தனது தாயாருக்கு உணர்வுப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்தினார்.
இதன்போது பண்டாரநாயக்க குடும்ப உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆற்றிய அளப்பரிய சேவைகளை நினைவுகூர்ந்தனர்.
1960 ஆம் ஆண்டு ஜூலை 21 அன்று இலங்கையின் பிரதமராகப் பதவியேற்ற சிறிமாவோ பண்டாரநாயக்க, உலக வரலாற்றிலேயே ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் பிரதமர் என்ற உலக சாதனைக்குச் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.







