கஹட்டோவிட்டவில் ஜனாஸா வாகன அங்குரார்ப்பண நிகழ்வு: நீண்டகாலத் தேவை நிவர்த்தி!

Rihmy Hakeem
By -
0



கஹட்டோவிட்ட மற்றும் அதனைச் சூழவுள்ள கிராம மக்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த ஜனாஸா போக்குவரத்து சேவை, புதிய வாகனமொன்று கொள்வனவு செய்யப்பட்டதன் மூலம் நேற்று முன்தினம் (25) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.


​கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய வளாகத்தில் நடைபெற்ற இந்த விசேட நிகழ்வில், சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய புதிய ஜனாஸா வாகனம் ஜனாஸா நலன்புரிச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டது.


மக்கள் பங்களிப்புடன் கூடிய பாரிய திட்டம்


​இந்த வாகனம் கொள்வனவு செய்யப்படுவதற்காக கஹட்டோவிட்ட, குரவலான, ஓகொடபொல மற்றும் உடுகொடை ஆகிய ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள், நலன்விரும்பிகள் மற்றும் தனவந்தர்கள் ஒன்றிணைந்து நிதிப் பங்களிப்பு செய்திருந்தனர். குறிப்பாக:


  • ​சிறுவர்கள் தமது சேமிப்பு உண்டியல்கள் மூலம் வழங்கிய பங்களிப்பு.
  • ​தனிநபர்கள் வழங்கிய 100 ரூபாய் முதற்கொண்ட சிறு நிதி உதவிகள்.
  • ​தனவந்தர்கள் மற்றும் பரோபகாரிகளின் பாரிய நிதியுதவிகள்.

​இப்பணியில் ஜனாஸா கமிட்டியின் தலைவர் மொஹம்மத் Azfer (அப்பர்) தலைமையிலான குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கலந்துகொண்ட முக்கிய விருந்தினர்கள்


​இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் அத்தனகல்ல நிலையப் பொறுப்பதிகாரி சஞ்சீவ, கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


​மேலும், பாடசாலை அதிபர்கள், அனைத்துப் பள்ளிவாசல்களின் தலைவர்கள், கதீப்மார்கள், நிர்வாகிகள், தக்கியாக்கள் மற்றும் ஸாவியாக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் எனப் பெருந்திரளான பொதுமக்கள் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.


​"நீண்டகாலமாக நிலவி வந்த இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய உழைப்பாலும், நிதியாலும், ஆலோசனைகளாலும் உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக." என நிகழ்வின் போது நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.


​நிகழ்வின் நிறைவில் வருகை தந்திருந்த அனைவருக்கும் கஞ்சு விநியோகிக்கப்பட்டதுடன், துஆ மற்றும் ஸலவாத்துடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.


செய்தி மூலம் : கஹட்டோவிட்ட நியூஸ் பேஜ் ஒபீசியல்








கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)