அரச அனுசரணையுடன் மிகச் சிறந்த முறையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 42 வது தேசிய மீலாதுன் நபி பிரதான நினைவு அரசு விழாவின் ஏற்பாட்டுப் பணிகளின் முன்னேற்றத்தை மறுஆய்வு செய்வதற்கான விசேட குழுக்கூட்டம், இன்றைய தினம் (ஜூலை 14) நீர்கொழும்பு அல்-ஹிலால் முஸ்லிம் வித்தியாலய வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், தொழில் பிரதி அமைச்சருமான மஹிந்த ஜயசிங்க தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
முக்கிய பிரமுகர்களின் பங்கேற்பு
இக்கூட்டத்தில் சமய மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, கம்பஹா மாவட்டச் செயலாளர் லலிந்த கமகே மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர் சுகத் கித்சிறி ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம். எஸ். எம். நவாஸ், பிரதேச செயலாளர்கள், உள்ளூர் அதிகாரிகள், காவல்துறை மற்றும் முப்படையினரின் உயர் அதிகாரிகள், முஸ்லிம் மதத் தலைவர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாக சபையினரும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
பள்ளிவாசல்களுக்கு ரூ. 10 மில்லியன் நிதி ஒதுக்கீடு
கூட்டத்தில் உரையாற்றிய கம்பஹா மாவட்டச் செயலாளர் லலிந்த கமகே, முஸ்லிம் பள்ளிவாசல்களின் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 10 மில்லியன் ரூபாய் விசேட நிதி, தற்போது அந்தந்த பிரதேச செயலகங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார். இதன் மூலம் பள்ளிவாசல்களின் நிர்வாக சபைகளுக்கு இந்த நிதி விரைவாகக் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் பிரதான விழா
இம்முறை 42 வது தேசிய மீலாதுன் நபி பிரதான நினைவு அரசு விழா, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி மாலை 3.00 மணியளவில், அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் தலைமையில் ஆரம்பிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த விழாவில் 2000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதற்கான மேடை அமைத்தல், நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு, வீதி அபிவிருத்தி, சுகாதார மற்றும் பொது வசதிகளை வழங்குதல் மற்றும் விசேட நினைவு நூல் வெளியீடு குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
சமூக நலன்புரி விசேட திட்டங்கள்
தேசிய மகாநாட்டுடன் இணையாக ஆகஸ்ட் மாதத்தில் பின்வரும் விசேட சமூக நலன்புரி வேலைத்திட்டங்களை செயல்படுத்தவும் குழு தீர்மானித்துள்ளது:
- ஆகஸ்ட் 23: காமச்சோடை பள்ளிவாசலில் விசேட மரநடுகை வேலைத்திட்டம்.
- ஆகஸ்ட் 23: போருதொட முஸ்லிம் பள்ளிவாசலில் விசேட இரத்ததான முகாம்.
- ஆகஸ்ட் 24: பிற மத சகோதரர்களிடையே கலாசார புரிந்துணர்வை மேம்படுத்த பெரியமுல்லை முஸ்லிம் பள்ளிவாசலில் "Visit my mosque" வேலைத்திட்டம்.
தகவல்:
ஊடகப் பிரிவு,
சமய மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் அலுவலகம்.

