கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கில் ஏற்பாட்டில் இடம்பெற்ற முப்பெரும் விழா!
கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிள் (MLSC) ஏற்பாடு செய்த முப்பெரும் விழா, அதன் தலைவரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ் M.Z. அஹ்மட் முனவ்வர் (J.P.) அவர்களின் வழிகாட்டலில் நேற்றைய தினம் (20) மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிள் மண்டபத்தில் மூன்று வெவ்வேறு அமர்வுகளாக இந்நிகழ்வு இடம்பெற்றது:
இரண்டாவது அமர்வு: கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 'A' சித்திகளைப் பெற்று சாதனை படைத்த கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். எம்.ஆர்.முஹம்மத் ஆசிரியர் (அரபு மாஸ்டர்) நினைவரங்கில் நடைபெற்ற இவ்வமர்வில் மாணவர்களுக்குப் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தப்பட்டனர்.
முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.மொஹமட் அவர்கள் மர்ஹூம் எம்.ஆர்.மொஹமட் ஆசிரியர் நினைவு உரையொன்றை நிகழ்த்தினார்.
மூன்றாவது அமர்வு: மௌலவி எம்.நயீம் ஆலிம் ஸாஹிப் நினைவரங்கில், மௌலவி எம்.என்.எம். இஜ்லான் (காஸிமி) நிகழ்த்திய வானொலி உரைகளின் தொகுப்பான ‘ஹுப்புல் றஸூல்’ நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொருளாளர் கலாநிதி A. அஸ்வர் அஸாஹீம் (அல்-அஸ்ஹரி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அல்ஹாஜ் M.M. அப்துல் கபூர் பிரதம அதிதியாகவும், பிரதமர் அலுவலக மேலதிக செயலாளர் அல்ஹாஜ் A.B.M. அஷ்ரஃப் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷைக் H. உமர்தீன் (ரஹ்மானி) சிறப்புச் சொற்பொழிவாற்றியதுடன், கேகாலை மாவட்ட அஹதிய்யா சம்மேளனத் தலைவர் அஷ்ஷெய்க் M.J.M. அக்ரம் ஜுனைத் நூல் விமர்சன உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தி ஆசிரியர் பஸ்ஹான் நவாஸ் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.
மேலும் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், தரீக்காக்களின் முக்கியஸ்தர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் இதில் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் நிறைவில் MLSC தலைவரின் நன்றியுரையுடன், வருகை தந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு உபசரிக்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.



























