( ஐ. ஏ. காதிர் கான் )

   இலங்கை கிரிக்கெட் விளையாட்டில்  ஏற்பட்டுள்ள ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பி்க்குமாறு,  சர்வதேச கிரிக்கெட் சபையினால் இலங்கைக்கு இரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான நடவடிக்கைகளை அவதானிப்பதற்கு, சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதிநிதி ஸ்டீவ் ரிசட்ஸன் தற்போது இலங்கை வந்துள்ளார்.

   இது தொடர்பிலான கலந்துரையாடலொன்றும், விளையாட்டுத்துறை அமைச்சில், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தலைமையில் (08) புதன்கிழமை  இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டுடன்  சமபந்தப்பட்ட  வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பிலான பணிகளைப் புரியும் பலர் கலந்துகொண்டனர். 
   இங்கு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கும்போது, 
   இலங்கையின் கிரிக்கெட் யாருக்கும் சொந்தமில்லை. கிரிக்கெட்டில் விளையாட்டை,  அமைச்சருக்கோ, விளையாட்டு அதிகாரிகளுக்கோ அல்லது அஷ்லித சில்வாவுக்கோ உரிமை கொண்டாட முடியாது. 
இலங்கையின் கிரிக்கெட் உங்கள் எல்லோருக்கும் சொந்தம். 

   இலங்கையின் கிரிக்கெட் சுத்தம் செய்யப்படவேண்டுமென்றால், அதனை ஒரு நபரினால் மாத்திரம் மேற்கொள்ள முடியாது. நான், நீங்கள் என, எல்லோரும் ஒன்றிணைந்தே,  கிரிக்கெட்டில் உள்ள ஊழல் மோசடிகளைச் சுத்தம் செய்யவேண்டும்.

   இன்று, இலங்கையின் கிரிக்கெட் தொடர்பில், உயர்மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை பரவலாகப் பேசப்படுகிறது. கடந்த காலங்களில் கிரிக்கெட் பிரசித்திபெற்ற ஒரு பேசும் பொருளாக மாறியுள்ளது. நிறையவே பிரச்சினைகள் கிரிக்கெட் விளையாட்டுக்குள் நுழைந்துள்ளது. இதனை, நாம் கண்கூடாகக் காண்கின்றோம்.இதனையிட்டு, நான் மன வேதனை அடைகின்றேன். 

   எமக்கு, சர்வதேச கிரிக்கெட் சபையிலிருந்து மிகப்பெறும் முறைப்பாடொன்று வந்துள்ளது. நான் இவ்வமைச்சைப் பொறுப்பேற்றவுடன், குறித்த சபையின்  அதிகாரிகளைச் சந்தித்தேன். கிரிக்கெட் சம்பந்தமாக ஊழல்கள் அதிகம் நிறைந்த நாடாக, இலங்கையைக் கருத முடியும் என, என்னிடம் சொன்னார்கள். சிம்பாப்வே நாட்டை விட, இலங்கை நாடு மிகவும் மோசம் என்றும்  கூறினார்கள். கிரிக்கெட் விளையாட்டுக்கு அன்பு செலுத்தும் எனக்கு, இது மிகவும் மன வேதனையைத் தந்தது. 

   எமக்கு, சர்வதேச கிரிக்கெட் சபையில் இரு வார கால அவகாசத்தை வழங்கியுள்ளது. இந்த இரு வார கால எல்லைக்குள், சர்வதேச கிரிக்கெட் சபையின் அலுவலகமொன்றை எமது நாட்டில் நடத்திச் செல்வர். 

   கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட ஊழல், மோசடிகள்  தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்திருந்தால், இக்காரியாலயத்திற்கு வந்து, இத்தகவல்கள் பற்றி, எவ்வித அச்சமுமின்றித் தெரிவிக்க முடியும். இவ்விவகாரம் தொடர்பில், உங்களைக் காப்பாற்ற வேண்டிய  பொறுப்பும் கடப்பாடுமாகும் எனக்குள்ளது. 

   கிரிக்கெட் ஊழல், மோசடி தொடர்பில் நான் சட்டத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளேன். இது சம்பந்தமான அறிக்கையொன்றும் மார்ச் மாதம் அளவில் பாராளுமன்றத்தில்  என்னாள் சமர்ப்பிக்கப்படும். அதன்பின்பு,  சட்டமூலமொன்று நிறைவேற்றப்படும். அந்த சட்டமூலத்தில், இலங்கையில் ஏதேனுமொரு ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களுக்காக ஒருவர் அகப்பட்டால், அவருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும். அத்துடன்,  ஆகக்கூடுதலான தண்டப்பணமும் அவருக்குச் செலுத்த வேண்டிவரும். இச்சட்டத்தின் கீழ், கிரிக்கெட் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டோரும் அகப்பட்டுக் கொள்வார்கள். 

   எனவே, நம்பிக்கையுடன் இருங்கள். ஊழல், மோசடிகள் அற்றதாக, கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் கொண்டு வருவோம். அத்துடன், கிரிக்கெட் விளையாட்டை, இலங்கையில் முதற்தர விளையாட்டாக மீளவும் முன்னெடுத்துச் செல்வோம். அதற்கான வலிமை எம்மிடமுள்ளது என்றார். 

( ஐ. ஏ. காதிர் கான் )



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.