மீனவர்களையும், மீன் வளத்தையும் விற்று, சாப்பிட்ட யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மீன்மீடி கைத்தொழிலின் பொற்காலத்தை மீள உருவாக்க சகல ஊழியர்களும் பங்களிக்க வேண்டும் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி தெரிவித்தார்.

1970 - 1977 காலப்பகுதியில் தேசிய வளமாக இருந்த கடற்றொழில் பிற்காலத்தில் விற்று சாப்பிடும் வளமாக மாறிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சின் கீழ் வருகின்ற நிறுவனங்களான இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனம் (CFHC), இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் (CFC), இலங்கை தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA), தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகவர் நிலையம் (NARA) மற்றும் வரையறுக்கப்பட்ட சினோர் மன்றம் (Ceynor) ஆகிய நிறுவனங்களுக்குப் புதிய தலைவர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்விலேயே இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி இவ்வாறு தெரிவித்தார். 

நேற்றைய தினம் (26) கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சின் பிரதான மண்டபத்தில் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

இங்கு இராஜாங்க அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், "நாங்கள் நல்லாட்சி அரசை கொண்டு வந்த போதிலும் வேலை செய்ய முடியவில்லை. ஆயினும் நான் பின் வாங்காமல், "நீல பொருளாதாரம்" இனை இத் துறைக்கு அறிமுகப்படுத்தி, பாரிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். அதன் பிரதிபலனை தற்போது காண்கிறோம். அதனால் கடற்றொழில் அமைச்சின் சகல நிறுவனங்களையும் பிரதமர் அவர்கள் எனக்கு தந்துள்ளதால் மகிழ்ச்சியடைகிறேன். கபினட் அமைச்சரான ஹரிசனும் எனக்கு இந்த வாய்ப்பைத் தந்துள்ளார். நான் பொறுப்புக்களை சுமந்து பணியாற்றுகிறேன்."

"தற்போது நாட்டின் கடற்றொழில் சீரழிக்கப்பட்டு எஞ்சியிருப்பது வைக்கோல் மட்டுமே. நான் இந்த அமைச்சை கட்டியெழுப்புகிறேன். சம்பாதிப்பது எனது நோக்கமல்ல. எனக்கு இந்த 5 நிறுவனங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றுக்கு சிறந்த பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த 5 இற்கும் நான் பதில் செல்ல வேண்டும். அமைச்சில் மாத்திரமல்லாது இந்த 5 நிறுவனங்களிலும் செய்யவிருந்த விடயங்கள் தெரியும். யாரும் மக்களது வளங்களுடன் விளையாட வேண்டாம்"

"விசேடமாக இன்று பதவியேற்ற தலைவர்கள், பணிப்பாளர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு ஒன்றை கூறிக் கொள்ள வேண்டும். இது அலங்கார பதவியல்ல. உங்களது கடமையை செய்ய வேண்டும். சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று வருகிறது. பிறகு வரும் அரசில் நான் கபினட் அமைச்சராக இருப்பேன். அப்போது நீங்கள் இப்பதவியில் இருந்து செய்த பணிகளின் பெறுபேற்று அடிப்படையில் உங்களை தொடர்ந்து பதவியில் வைத்திருப்பதா என்று முடிவு செய்வேன்.

இந்த 5 நிறுவனங்களுக்கிடையிலும் தொடர்பினைப் பேண வேண்டும். வெறுமனே ஐஸ் மற்றும் மணலை விற்கும் இடமல்ல இது. "

என்னுடைய இலக்கு மீனவரை வர்த்தகராக்குவதாகும். 1970 -1977 இல் இருந்து கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை மீண்டும் உருவாக்க வேண்டும். கடற்றொழில் கூட்டுத்தாபனம், மற்றும் சினோர் மன்றம் தற்போது நட்டத்தில் இயங்குகிறது. இவற்றை மீளக் கட்டியெழுப்ப வேண்டும்" என்றும் இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி சந்த நாயக்க, மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ரிஹ்மி ஹக்கீம்,
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.