ஜம்மு - காஷ்மீரில் புல்வாமா பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து பாகிஸ்தான்  ' முற்றுமுழுதாக தனிமைப்படுத்தப்படுவதை ' உறுதிசெய்துகொள்வதற்கு இந்தியா மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு அயல்நாடுகளிடமிருந்து ஒத்துழைப்புக்கிடைப்பது சாத்தியமில்லை.

பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தில் ( சார்க் ) இருந்து பாகிஸ்தானை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இடைநிறுத்துவது தொடர்பில் அந்த அமைப்பின் 8 உறுப்பு நாடுகள் மத்தியிலும் கருத்தொருமிப்பு எட்டப்படக்கூடிய வாய்ப்பு இல்லை.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற புலவாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் எழுந்திருக்கும் நிலைவரம் குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகலே மறுநாள் புதுடில்லியில் பாகிஸ்தான் தவிர்ந்த  ' சார்க் ' நாடுகளின் தூதுவர்களுக்கு விளக்கம் அளித்தார்.

'சார்க்' அமைப்பில் தீர்மானங்கள் எப்போதுமே எகமனதாக எடுக்கப்படுவதே நடைமுறையாக இருந்துவந்திருப்பதால், பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சகல உறுப்பு நாடுகளினதும் நம்பிக்கையை இந்தியா  வென்றெடுப்பது சாத்தியமானதல்ல என்று தனது பெயரைக் குறிப்பிடவேண்டாமெனக் கேட்டுக்கொண்ட  இராஜதந்திரி ஒருவர் கூறினார். பயங்கரவாதத்தைக் கண்டித்து ' சார்க்' அமைப்பிடமிருந்து அறிக்கையொன்று வெளியிடப்படவேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. அந்த அமைப்பில் இருந்து பாகிஸ்தானை இடைநிறுத்துவதற்கு ஆதரவைப் பெறுவதென்பது கஷ்டமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பெரிய இராஜதந்திர தூதரகத்தைக் கொண்டுள்ள நேபாளம் போன்ற நாடுகளிடமிருந்து இந்தியா ஆதரவைப் பெறுவது மிகவும் கஷ்டமானதாக இருக்கும் என்று முன்னாள் வெளியுறவு செயலாளர் கன்வால் சிபல் கூறினார். ' இந்திய - பாகிஸ்தானிய உறவுகளில் தற்போது ஏற்பட்டிருக்கும் மோசமான சீர்குலைவை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இந்தியாவில் விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்குப் பிறது பதவிக்கு வரக்கூடிய புதிய அரசாங்கம் பாகிஸ்தானுடன் புதிய ஆரம்பம் ஒன்றைச் செய்வதில் அவசரம் காட்டப்போவதில்லை என்றே தோன்றுகிறது.' சார்க்' அமைப்பில் சீனாவைச் சேர்ப்பதற்ககான பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு நேபாளம் ஆதரவளித்துவந்திருக்கின்ற அதேவேளைஇ இலங்கை பாதுகாப்புக் கூட்டுப்பங்காண்மையொன்றை பாகிஸ்தானுடன்கொண்டிருக்கிறது' என்று அவர் குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தை மீளநிலைநிறுத்துவதை நோக்கி முன்னாள் ஜனாதிபதி பெர்வெஸ் முஷாரப் நடவடிக்கைகளை முன்னெடுக்காதததை அடுத்து 2007 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது என்பது நினைவுபடுத்தத்தக்கது.

'ஒரு தொடக்க நடவடிக்கையாக ' சாஃப்டா ' வில் ( தெற்காசிய சுதந்திர வர்த்தக வலயம்) இருந்து பாகிஸ்தானை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஏனைய உறுப்பு நாடுகளின் ஆதரவை இந்தியா நாடவேண்டும்.அடுத்து பெரியளவில் ' சார்க்' கில் இருந்து இடைநிறுத்துவதைப் பற்றி பரிசீலிக்கலாம்' என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பிஸ்வஜித் தார் அபிப்பிராயம் வெளியிட்டிருக்கிறார்.

ஜம்மு - காஷ்மீரில் யூரி பகுதியில் உள்ள இந்திய இராணுவ முகாம் மீது படுமோசமான பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று 2016 செப்டெம்பரில் நடத்தப்பட்டதை அடுத்து , இஸ்லாமாபாத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த 19 சார்க் உச்சிமகாநாட்டில் பங்கேற்காதிருக்க இந்தியா தீர்மானித்தது. பங்களாதேஷ், பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் கலந்துகொள்ள மறுத்ததை அடுத்து அந்த உச்சிமகாநாடு பின்போடப்பட்டது.  திகதிகள் இன்னமும் தீர்மானிக்கப்படவேண்டியிருக்கும் சார்க் உச்சிமகாநாட்டில் பங்கேற்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு வருமாறு அழைக்கப்படுவார் என்று கடந்த வருடம் நவம்பரில்  பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு பேச்சாளர் முஹம்மத் பைசால் தெரிவித்திருந்தார்.

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலையடுத்து  மிகவும் விரும்பப்படும் நாடு என்ற அந்தஸ்தில் இருந்து பாகிஸதானை அகற்றிய இந்தியா கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான தீர்வையை 200 சதவீதத்தினால் அதிகரித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.