பல்கலைக்கழங்கள் பட்டப்பின் படிப்பிற்கான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் - பிரதமர்


பல்கலைக்கழங்கள் பட்டங்களை வழங்கும் நிறுவனங்களாக மாத்திரமல்லாமல் பட்டப்பின் படிப்பிற்கான வசதிகளையும் செய்து கொடுக்கும் நிறுவனங்களாகவும் மாற்றப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மன உளைச்சலுக்கு உள்ளாகும் பாடசாலை மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்காக ஆலோசனை சேவைகளை முன்னெடுக்கும் முறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இது தொடர்பில் தேசிய வேலைத்திட்டமொன்றினை ஏற்படுத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்னும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

2019ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் பட்டம் மற்றும் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றி பிரதமர்,

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் தொடர்பில் சிறுபராயத்திலிருந்தே எனக்கு  ஞாபகம் இருக்கின்றது. இந்நிறுவனமானது ஆரம்ப காலக்கட்டத்தில் எமது வீட்டுக்கு அருகில் உள்ள 05 ஆவது ஒழுங்கையிலேயே அமைந்திருந்தது. அன்று நாங்கள் அங்கும் இங்கும் சைக்கிள் வண்டிகளை செலுத்தும் போது இந்த நிறுவனத்திற்கு வருகைத்தரும் மாணவ மாணவிகளை அடிக்கடி காண்போம்.

இந்த வீதியினூடாகவே ரோயல், மஹானாம மற்றும் தேர்ஸ்டன் கல்லூரி மாணவ மாணவிகளும் செல்கின்றனர். அவர்களுக்கு மத்தியில் இத்தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் மாணவ, மாணவிகள் 50 பேர் மிகவும் கஷ;டத்துக்கு மத்தியில் பயணிப்பது எனக்கு நன்கு ஞாபகம் இருக்கின்றது. 

அந்த உறவு பல ஆண்டுகள் தொடர்ந்தது. அதன் விளைவினால் இந்நிறுவனம் தொடர்பில் எனக்கு நன்கு தெரியும்.சிறிது காலத்துக்கு பின்னர், நாங்கள் ஜே.ஆர். ஜயவர்தன கேந்திர நிலையத்தினை திறந்து வைத்த சந்தர்ப்பத்தில் முதலில் அதன் ஒரு கட்டிடத்தினை இந்நிறுவனம் பொறுப்பெடுத்துக் கொண்டது. ஜே.ஆர். ஜயவர்தன கேந்திர நிலையத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான வருமானம் இதன் மூலமே கிடைக்கப்பெற்றது. எனினும் இன்று அந்த கேந்திர நிலையத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கான நிதியினை பாராளுமன்றம் பெற்றுக் கொடுக்கின்றது. இன்று ஜே.ஆர். ஜயவர்தன கேந்திர நிலையத்தின் சகல வேலைத்திட்டங்களும் அனைத்து வழிகளிலும் முன்னேறியுள்ளது. 

அன்று சமூக சேவைகளை சுகாதார துறையில் ஓர் அங்கமாக கவனத்திற் கொள்ளப்பட்டதுடன், அதன் மூலம் சிறுவர்கள், பெண்கள் மற்றும் அநாதரவாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. எனினும் இன்று சிறுவர்கள், பெண்கள் என வௌ;வேறு பிரிவுகள் காணப்படுகின்றன. சமூக முன்னேற்றத்துடன் சமூகத்தில் பல்வேறு பிரிவுகளுக்கும் ஒத்துழைப்பு, ஆலோசனை மற்றும் சிகிச்சை அவசியமாகின்றது. அச் சேவைகளை வழங்குவது யார்? அன்று எமது நாட்டில் அது தொடர்பில் அமைப்பொன்று இருந்தது. அது குடும்ப அமைப்பாகும். குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாக வாழ்ந்ததுடன், அவர்கள் ஒருவரை ஒருவர் தாமாகவே பார்த்துக் கொண்டனர். 

எனினும், அந்த குடும்ப அமைப்பினை இன்று காண்பதற்கு முடியாத நிலை உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அங்கும் இங்குமாக சிதறிக்கிடக்கின்றனர். ஒருவர் டுபாயிலும், மற்றுமொருவர் கொரியாவிலும், மேலும் இருவர் இலங்கையிலும் என சிதறி வாழ்கின்றனர். அவர்களிலும் ஒருவர் மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தில் இணைந்து பணிபுரியும் அதேவேளை மற்றைய நபர் கொழும்பில் பணிபுரியும் நிலையே காணப்படுகின்றது. 

அதனடிப்படையில் இன்று குடும்ப அமைப்பினை பார்த்துக் கொள்பவர்கள் யார்? என்ற கேள்வி எழுவதுடன், இன்று இவர்கள் அனைவருக்கும் முன்பதாக தமது பிள்ளைகளை பராமரித்துக் கொள்ள வேண்டி பாரிய பொறுப்பொன்று இருக்கின்றது. பிள்ளைகளின் கல்வியினை போன்று அவர்களின் ஏனைய விடயங்கள் தொடர்பிலும்  கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எப்படியாயினும், இன்று தமது இரு நேர உணவு வேளைகளை சிற்றுண்டிச்சாலைகளில் கொள்வனவு செய்யும் நிலைமையே காணப்படுகின்றது. இதற்கு முன்னர் இந்த நிலைமையானது உயர் வகுப்பினரிடத்தில் மாத்திரமே இருந்த போதும், இன்று இந்த நிலை அனைத்து தரப்பினரிடத்திலும் பரவியுள்ளது. இது நவீன பொருளாதாரத்தின் விளைவாகும். இச்சமூக குழுக்கள் தொடர்பில் எமது அவதானம் அதிகரிக்கும் போது அதற்காக விசேட அறிவு அவசியமாகின்றது. 

2015ம் ஆண்டு நாம் அரசாங்கத்தினை கைப்பற்றும் போது எமக்கு அதிகமான கடன் தொகையினை செலுத்த வேண்டி இருந்ததுடன், அந்த கடன் தொகையினை செலுத்தி முடிப்பதற்கு முடியாத சூழ்நிலையும் உருவானது. உண்மையில் அன்றிருந்த அரசாங்கத்திற்கு அந்த கடன் தொகையினை செலுத்தக் கூடியதாக இருந்திருந்தால் 2014ம் ஆண்டு ஜனாதிபதிதேர்தல் நடைபெற்றிருக்காது. 

நாம் அரசாங்கத்தினை பொறுப்பேற்றதன் பின்னர் இந்த வருடத்தில் மாத்திரம் 5,900 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக செலுத்தப்பட வேண்டியுள்ளது. அதனடிப்படையில் எமது வருமானத்தில் அதிகமான தொகையினை கடனை செலுத்துவதற்காகவே செலவிட வேண்டியுள்ளது. வருமானத்தில் மற்றுமொரு பகுதியினை அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தினை செலுத்துவதற்காக பயன்படுத்தபடுகின்றது. மிகுதியினை சமூக பிரிவிற்கு பயன்படுத்துவது தொடர்பில் நாம் கவனம் செலுத்துகின்றோம். 

மிகவும் கடினமான காலப்பிரிவில் கூட கல்விக்காக நாம் அதிகமான நிதியினை பெற்றுக் கொடுத்தோம். 13 வருட கல்வியினை கட்டாயப்படுத்தினோம். அதேபோன்று 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்கும், பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் தொகையினை அதிகரிப்பதற்கும், கல்வியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மாணவர்களின் பாதுகாப்புக் காப்புறுதி திட்டம், டெப் கணனிகள் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம், உயர் கல்விக்காக மாணவர்களுக்கான விடுதி வசதிகள், பொறியியல் பீடங்கள் என்பவற்றை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.


சுகாதார சேவையின் விருத்திக்காகவும் நாம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அன்று கொழும்பு வைத்தியசாலைகளில் மாத்திரம் காணப்பட்ட நவீன உபகரணங்கள் இன்று அனைத்து வைத்தியசாலைகளுக்கும் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த சந்தர்ப்பத்தில் அங்குள்ள வைத்தியசாலைகளில் அந்த உபகரணங்களை நான் கண்டேன். அதேபோன்று நாங்கள் ஒளடதங்களின் விலைகளையும் குறைத்துள்ளோம்.

இவ்வாறு கல்விக்கும் சுகாதாரத்திற்கும் நாங்கள் அதிகமான நிதியினை ஒதுக்கி உள்ளோம். அதேபோன்று குடிநீர் வழங்கல் திட்டங்கள், கிராமிய மற்றும் நகரங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாடி வீடுகள், பெருந்தோட்ட மற்றும் வடக்கு வாழ் மக்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுத்தல் போன்ற அடிப்படை பிரிவுகளுக்காகவும் நாங்கள் நிதி ஒதுக்கிக் கொடுத்துள்ளோம்.

மிகவும் போட்டித் தன்மைமிக்க பொருளாதாரத்தினை கட்டியெப்புவதே எமது எதிர்பார்ப்பாகும். எனினும் போட்டித் தன்மைமிக்க பொருளாதாரத்தின் ஊடாக பல சாதக, பாதக நிலைமைகள் உருவாகின்றன. அவற்றில் பாதக நிலைமைகளை அகற்றி சமூக நன்மைக்கருதி செயற்பட்டு வருகின்றோம். ஐரோப்பிய நாடுகள் இதனை உயர் போட்டித்தன்மைமிக்க சமூக சந்தைப் பொருளாதாரம் என்று அழைக்கின்றனர். (Highly Competitive Social Market Economy)

இங்கு சிலர் நெதர்லாந்து பொருளாதார முறையினை நோக்குமாறும், இன்னும் சிலர் சுவீடன் பொருளாதார முறையினை நோக்குமாறும் குறிப்பிடுகின்றனர். எது எவ்வாறிருப்பினும் உயர் போட்டித்தன்மைமிக்க சமூக சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி செல்லும் போது அனைத்து துறைகளுக்கும் நிதி ஒதுக்குவது கடினம் என்பதுடன் எதிர்காலத்தில் ஏனைய துறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

வயதானவர்களின் தொகை அதிகரிப்பதன் மூலம் நாட்டில் பல சமூக பிரச்சினைகள் தோன்றுகின்றன. அதேபோன்று மற்றுமொரு உதாரணமாக, பரீட்சைகளில் சித்தியடையாமையினால் ஏற்படுகின்ற மனநிலை பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது. அதனால் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுத்து அவற்றினை முகாமைத்துவம் செய்வதற்காக அறிவார்ந்த நபர்களின் தேவை எழுந்துள்ளது. அடுத்து வருகின்ற காலங்களில் இப்பகுதி தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்படும். கடந்த காலங்களில் எமது நிதி மட்டுப்படுத்தப்பட்டு இருந்தமையினால் முன்னுரிமையின் அடிப்படையில் நிதியினை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கிணங்க சமூக பிரிவு தொடர்பில் முன்னுரிமை வழங்கப்பட்டது.

இணைத்துக் கொள்ளப்படுகின்ற பட்டதாரிகளுக்கு நிதியினை பெற்றுக் கொடுத்து இந்நிறுவனத்திலேயே பாடநெறிகளை தொடர்வதற்கான சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொடுக்கலாம். அதற்கு தகுதியான கல்வி நிறுவனங்கள் என்னவென்பதை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. அதனடிப்படையில், இத்தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினை தெரிவு செய்து, பல்கலைக்கழக மட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். 

எமது சமூகம் மிக வேகமாக மாறுகின்றது. இதற்கு 20 வருடத்திற்கு முன்னர் காற்சட்டை பையில் போடுவதற்கு ஏற்ற கையடக்கத் தொலைப்பேசியினை கண்டுபிடிக்க முடியுமா? என்று நாம் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இவ்வாறு சமூகம் மாறுவதன் மூலம் சாதக மற்றும் பாதகமான இருவகை விளைவுகளும் ஏற்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் ஒருவர் மற்றுமொருவரை பார்த்து கடினமான வார்த்தைகளை பாவிக்கும் போது குறித்த நபர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு செல்லும் நிலை கொண்ட சமூதாயமாக நாம் இன்று வாழ்கின்றோம். 

இந்த விடயங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மற்றும் ஏனைய நிறுவனங்கள் எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்து தேடியறிய வேண்டும். அதனடிப்படையில் பாடசாலை மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்காக ஆலோசனை சேவைகளை முன்னெடுக்கும் முறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இது தொடர்பில் தேசிய வேலைத்திட்டமொன்றினை ஏற்படுத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

இந்நிகழ்வில் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கௌரவ தயா கமகே, ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் எச்.எம். காமினி செனவிரத்ன, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி அத்தநாயக்க, பேராசிரியர் டொனால்ட் சந்திரசேன ஆகியோர் உட்பட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா சான்றிதழ் பெரும் அதிகமானோரும் கலந்து கொண்டனர்.   Share:

No comments:

Post a Comment