நியூஸிலாந்து பள்ளிவாசல் படுகொலைத் தாக்குதலுக்குக் கண்டனம் ; 
துப்பாக்கிப் பாவனைச் சட்டத்தையும் மீள் பரிசீலனை  செய்யவேண்டும் 
- வெள்ளிக்கிழமை பிரார்த்திக்குமாறும் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா வேண்டுகோள் 

( ஐ. ஏ. காதிர் கான் )

   நியூஸிலாந்து - கிறிஸ்ட் சர்ச் பள்ளிவாசலில்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை தான் வன்மையாகக் கண்டிப்பதாக,  முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். 
   இந்தப் பயங்கரவாதத்தின் பின்னணியில் உள்ள அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் நியூஸிலாந்து அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.    இது தொடர்பில் பைஸர் முஸ்தபா ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஊடக  அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
துப்பாக்கிகளைப் பாவிப்பது தொடர்பில், நியூஸிலாந்து அரசினால் புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள சட்டம், பாதுகாப்புப் படையினருக்கு மாத்திரமே பொருந்தும். இது பொதுமக்களுக்கு எந்த விதத்திலும்  பொருத்தமாக அமைய மாட்டாது. எனவே, இச்சட்டத்தை, நியூஸிலாந்து அரசு மீண்டும்  மீள் பரிசீலனை செய்து, துப்பாக்கிப் பாவனை தொடர்பில் எல்லோருக்கும் பொருத்தமான புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். இவ்வாறு செய்வதால், அனைவருக்கும் பொருத்தமான பல்வேறு நன்மைகள் இருப்பதாக நான் நினைக்கின்றேன்.
  இத்தாக்குதலின் பின்னணியில், முஸ்லிம்கள் அனைவரும் மிகப் பொறுப்புடனும், பொறுமையுடனும் நடந்துகொள்ள வேண்டும். இத்தாக்குதலில் பலியானவர்களுக்காக, வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையன்று,  அல்லாஹ்விடம் தொழுதுவிட்டுப் பிரார்த்திக்க வேண்டும். அத்துடன், "ஜன்னத்துல் பிர்தெளஸ்" சுவர்க்கத்தில் உயர் ஸ்தானம் கிடைக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்க வேண்டும். இக்கொடூரத் தாக்குதலில் பலியானவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கும், அது எந்த நாடாக இருந்தாலும் சரி, எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 
   நியூஸிலாந்துப் பிரதமரும்  இத்தாக்குதலை வன்மையாகக்  கண்டித்துள்ளதுடன், மிகச் சிறந்த நடவடிக்கைகள் பலவற்றையும் உடனடியாக மேற்கொண்டிருந்தார். இச்சந்தர்ப்பத்தில் நியூஸிலாந்துப் பிரதமரையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். 
   இவ்வாறு அந்த ஊடக அறிக்கையில் முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.