ஷைஹாட வாப்பா
-------------------------------

ஸ்கூல் தொடங்குற நேரமும் செரி ஸ்கூல் கலைர நேரமென்டாலும் கேட்டுக்கு போனாத்தான் தெரியும் படிக்கிற புள்ளயலுக்கா வேண்டி வாப்பாமார் பர்ர பாடு.

என்ட வகுப்புல 22 செல்வங்கள் இருக்குதுகள் இதுகள் ஒவ்வொன்டோடயும் அதுகள்ள வாப்பா,உம்மாமார் பர்ர கஸ்டம் எனக்கும் தெரியாம இல்ல,
அதுலயும் ஷைஹாட வாப்பா அவர்ர மகளுக்காக செய்ற தியாகங்கள் நெனச்சாலே செல  நேரம் கண்கலங்கிடும்.

ஷைஹாட வாப்பாவ போன நவம்பர் மாசம்தான் மொதன்மொதலா கண்டன், அந்நேரம் ஷைஹா மூனாம் வகுப்பு படிச்சிட்டு இருந்துச்சி, அந்த க்ளாஸ் டீச்சர் டிரான்ஸ்பர்ல் போனதும் அந்த க்ளாஸ நான் பொறுப்பெடுத்தன்,பொறுப்பெடுத்து அடுத்த கெழம நடந்த பேரன்ட்ஸ் மீட்டிங்லதான் அவர சந்திச்சன்.
 "சேர் மகள் நல்லா படிப்பா ஆள கொஞ்சம் பாத்துக்கங்க, ஷைஹாக்கு எட்மிசன் நம்பர் இல்லாம  ஈக்கிது அதயும் கொஞ்சம் பாத்து செஞ்சிடுங்க சேர்...என்டு அன்டக்கி பேசிட்டு போனாரு,

அதுக்கு பொறவு நடந்த மூனாந்தவணை எக்ஸாம்லயும் ஷைஹாதான் ஆக கூட மாக்ஸ் எடுத்து மொதலாவது புள்ளயா வந்துச்சி.
இந்த வருசம் " போதை ஒழிப்பு"வாரத்த முன்னிட்டு வீதி ஊர்வலம்  ஒன்டு ஸ்கூல்ல நடந்துச்சி, அன்டக்கி கிளாஸ்ல இருக்குற புள்ளகல் எல்லாம் ஆளுக்கொரு பதாதை எடுத்துட்டு வந்து இருந்துச்சிகள், ஆனா ஷைஹா வெறுங்கையோட வந்து "சேர் எங்கட வாப்பா 9 மணிக்கு கொண்டு வார என்டு சொன்னாங்க" நாங்க எத்தன மணிக்கு சேர் ஊர்வலம் போற?" என்டு கேட்டுச்சி.

அப்டியே டைம் போய் 9 மணி ஆகி கொஞ்ச நேரத்துல ஷைஹாட வாப்பா வந்தாரு.ஷைஹா சொன்ன மாதிரியே கைல பிரிஸ்டில் போர்ட்ல எழுதின பதாதையோடதான் வந்திருந்தாரு. அவர நிமிந்து பாத்தன் "சொரி சேர் லேட் ஆவிட்டு" ன்டு செல்லிட்டு மகள்ள தலய தடவிட்டு போயிட்டாரு.
அவர் போனதுதான் தாமதம் ஷைஹா கிளாஸ்ல இருக்குற ஒவ்வொரு புள்ளையா போய் அந்த பதாதைய காட்டி காட்டி சிரிச்சுச்சு...

ஷைஹா வாப்பாவை கொண்டாடுகிறாள்.

ஸ்கூல் தொடங்கி மொதலாவது கெழம "சேர் வாப்பா புக்ஸூக்கு கவர் போட்டுத் தந்தாரு" என்டு சந்தோசப்பட்டாள்.
ஒருநாள் ஷைஹாட புக் ஒன்ட காணல்ல ன்னு தேடிட்டு இருந்துச்சி. " புக்க ஸ்கூலுக்கு கொண்டு வந்தீங்களா ? " ன்னு கேட்டேன். ஒடனே "ஓ சேர் எங்கட  வாப்பா எல்லா புக்ஸயும் செக் பண்ணித்தான் தந்தாரு.." ன்னு கண்ணெல்லாம் நம்பிக்கையோட செல்லிச்சி, அது சென்ன போலவே கப்பேர்ட்ல புக் இருந்துச்சி.

அதே போலதான் வெசாக் கூடு செஞ்சி கொடுத்திருந்தாரு,ஷைஹாட பொறந்த நாளுக்கு பொது அறிவு புக்கும் செஞ்சி  கொடுத்திருந்தாரு அவங்க வாப்பா.

ஆப்டர் ஸ்கூல் கிளாஸ் வெக்கிற நேரம் ஷைஹா  சாப்டாம உக்காந்துட்டு இருக்கும். மத்த பிள்ளயல் சாப்ட கூப்ட்டா "இல்ல எங்கட வாப்பா வருவாரு" ன்னு சொல்லிட்டு பேசாம இருக்கும். அது நம்பிட்டு இருக்குறது போல அவரும் டான்னுன்னு சாப்பாட்டோட வந்து நிப்பாரு.
ஷைஹா ஸ்கூலுக்கு வராத நாளைல கோல் பண்ணி அன்டக்கி படிச்சி விசயங்கள கேப்பாரு, "சேர் ஷைஹாக்கு .... இது கொஞ்சம் விளங்கல போல...." ன்னு ஒவ்வொன்டா செல்லிட்டே இருப்பாரு. சில நேரம் அவர நெனச்சா எனக்கே பெருமயா இருக்கும்.

கிளாஸ்ல புள்ளைகள் கதச்சிட்டு நேரம் ஷைஹா புள்ளயலோட அவட வாப்பாவ பத்தி கதச்சி சந்தோசப்பட்டுட்டே இருக்குறத கண்டிருக்கன்..
கிளாஸ்ல ஹோம் வேர்க் கொடுத்தாலும் செரி,சின்ன ஸ்பீச் கொடுத்தாலும் செரி "எனக்குன்டா வாப்பா சொல்லித் தருவாரு" என்டு ஷைஹா  கண்ண புறட்டுவாள்;
அந்த கண் முழுக்க அவங்க வாப்பாதான் இருப்பாரு..

ஷைஹாட உம்மா மௌத்தாகிட்டாங்க, ஆனா ஷைஹாட வாப்பா ஷைஹாக்கு உம்மாவா,வாப்பாவா  எல்லாமா இருக்காரு.
உண்மயாவே ஷைஹாட வாப்பா கொண்டாடப்பட வேண்டிய ஆள்தான்.

(ஆசிரியர் நிஸ்ரி - அட்டாளைச்சேனை)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.