தமது கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்ற நகர சபை, மாகாண சபை மற்றும் பிரதேச சபைகளின் மூலம் எவ்வித அபிவிருத்தியோ அல்லது பொதுமக்கள் சேவையோ மேற்கொள்ளப்படவில்லை என்பதை உணர்ந்து கொண்ட எதிர்கட்சியினர், அந்நிறுவனங்களை புறக்கணித்துவிட்டு அதற்காக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிதி ஒதுக்கிட்டினை தோல்வியடையச் செய்தார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நேற்று முன்தினம் (02) மகரகமயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்தார். 


கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது அதிகாரத்தினை கைப்பற்றிய நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் ஊடாக தமது பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்த போதும், இன்று அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் சுக்குநூறாக்கப்பட்டு எவ்வித பொதுமக்கள் சேவையும் இடம்பெறாத நிறுவனங்களாக அந்நிறுவனங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மேலும் தெரிவித்தார். 

ஹோமாகம நகரப் பூங்காவினை திறந்து வைத்தல், தொழில்நுட்ப நகரத்திற்கான நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டுதல் மற்றும் மகரகம நான்கு மாடி வாகனத்தரிப்பிடத்தினை திறந்து வைத்தல் ஆகிய நிகழ்வுகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன், அதன் பின்னர் மகரகம நகர சபைக்கு முன்னால் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் உரை நிகழ்த்திய பிரதமர்,

'இன்று மகரம நகரில் நான்கு மாடிகளைக் கொண்ட வாகன தரிப்பிடம், ஹோமாகம நகர பூங்கா ஆகியவற்றை திறந்து வைப்பதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. இந்த நான்கு மாடிகளைக் கொண்ட வாகன தரிப்பிடமானது, மகரகம நகரத்தினை சுபிட்சமான நகரமாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற 230 வேலைத்திட்டங்களில் ஒன்று என்பதை குறிப்பிட வேண்டும். அதேபோன்று ஹோமாகம நகர பூங்காவானது, ஹோமாகம நகரத்தினை சுபிட்சமான நகரமாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற 141 வேலைத்திட்டங்களில் ஒரே ஒரு வேலைத்திட்டமாகும். 

அதனடிப்படையில் ஹோமாகம மற்றும் மகரகம ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு மாத்திரம் 371 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான வேலைத்திட்டங்கள் மூலம் கொழும்பு நகரத்தினை போன்று அதனை சூழவுள்ள ஏனைய நகரங்களையும் மாநகரமாக மாற்றும் விசேட பணி நிறைவேற்றப்படுகின்றது. அதனடிப்படையில், மகரகம, ஹோமாகம, கொட்டாவ, கொலன்னாவ உட்பட அனைத்து பிரதேசங்களிலும் விசாலமான மாற்றமொன்றை நாம் காண்கின்றோம். புதிய கருத்துக்கள், புதிய திட்டங்களின் அடிப்படையில் நாம் அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். 



இவ்வாறான புதிய கருத்துக்கள் மற்றும் புதிய திட்டங்களுடன் கூடிய வேலைத்திட்டங்களை நாம் இதற்கு முன்னர் கண்டதில்லை. கடந்த ஆட்சியாளர்கள் நகர அபிவிருத்தி என கூறித்திரிந்த போதும் எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை. 

அதேபோன்று போக்குவரத்து துறையினை விருத்தி செய்வதற்காக நாம் புதிய வீதி கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகின்றோம். கடந்த தினத்தில் திறந்து வைக்கப்பட்ட கொட்டாவ பல்சேவை போக்குவரத்து மத்திய நிலையத்தினை போன்று களனி பாலத்திலிருந்து கொழும்பு துறைமுகத்துக்கும், ராஜகிரியவிற்கும் அமைக்கப்படுகின்ற புதிய தூண்களின் மீது அமைகின்ற வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம், இலகு ரக புகையிரத வேலைத்திட்டம் போன்ற வேலைத்திட்டங்கள் பலவற்றை நாம் கொழும்பில் மேற்கொண்டு வருகின்றோம். 

இவை அனைத்தும் நாம் திட்டமிட்டு ஆரம்பித்த வேலைத்திட்டங்கள் என்பதை நான் குறிப்பிட வேண்டும். இவ் வேலைத்திட்டங்களுக்காக தலைமைத்துவத்தினை வழங்கிய அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களுக்கு எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அவர் கொழும்பில் மாத்திரமல்ல நாடு தழுவிய ரீதியில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். அதன் கீழ் எமது பழைமைவாய்ந்த திட்டங்களை நவீனமயப்படுத்தி 21 ம் நூற்றாண்டுக்கு பொருத்தமான நவீன நகரமாயக்கலினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

மகரகம நகரத்தினை நவீனமயப்படுத்துவதற்காக வேண்டி மாத்திரம் இக்காலப்பகுதியினுள் 900 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. எனினும் 2010 - 2015 வரையான காலப்பகுதியினுள் இவ்வாறான வேலைத்திட்டங்களை நாம் கண்டதில்லை. நகர நவீனமயப்படுத்தலுக்காக வேண்டி நாங்கள் இதுவரை 80,000 - 90,000 மில்லியன் ரூபாய்களை செலவழித்துள்ளோம்.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் சிந்தனைக்கமைய நடுத்தர வர்க்கத்தினருக்கு நவீனமயமான வாழ்க்கை முறையொன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று கொழும்பில் குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு மாடி வீட்டுத் தொகுதியில் வீடுகளை வழங்கி அவர்களின் காணிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பெற்றுக் கொண்டு, 10 வருட அபிவருத்தி திட்டத்தின் கீழ் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த அமைச்சினை பொறுப்பேற்ற எவரும் இவ்வாறான பாரிய வேலைத்திட்டங்கள் எதனையும் ஆரம்பிக்கவில்லை.


இந்த நாட்டில் முதன் முதலில் 1977ம் ஆண்டு அறிமுகமான திறந்த பொருளாதார கொள்கையின் ஊடாகவே விசாலமான மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. அதன் பின்னர் 21ம் நூற்றாண்டாகும் போது இந்து சமூத்திரத்தின் பிரதான நகரமாக கொழும்பு நகரினை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்.

அதேபோன்று, கண்டி, குருநாகல், கம்பஹா போன்ற அனைத்து நகரங்களிலும் அபிவிருத்தி பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அடுத்து வருகின்ற 05 வருடங்களினுள் நவீன நகரங்கள் பலவற்றை உருவாக்குவதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது. மாகாண சபைகளுக்கு, நகர சபைகளுக்கு அல்லது பிரதேச சபைகளுக்கு இவ்வாறான பாரிய நிதியினை செலவழித்து அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. 

அப்படியெனின், மாகாண சபைகளும், உள்ளூராட்சி மன்றங்களும் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளாத போது பொதுமக்கள் உள்ளூராட்சி மன்றங்கள் மீது தமது வெறுப்பினை வெளிக்காட்டுவார்கள். 

கடந்த வருடத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியினை தோல்வியுறச் செய்து எதிர்கட்சி அதிகாரத்தினை கைப்பற்றியது. அந்த உள்ளூராட்சி மன்றங்களில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அம்மக்கள் எதிர்பார்த்தனர். 

அரசாங்கம் இதுவரை என்ன செய்திருக்கின்றது?, எவ்வித பிரதிபலன்களையும் வெளிக்காட்டவில்லை என குற்றம் சுமத்தி எதிர்கட்சியினர் 2018ம் ஆண்டு பல உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தினை கைப்பற்றிக் கொண்டனர். எனினும் அவ்வாறு குற்றம் சுமத்தி ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் நாங்கள் அனைத்து பிரிவுகளிலும் பிரதிபலன்களை காட்டுவதற்கு ஆரம்பித்துள்ளோம்.  மாநகரம், வீடமைப்பு மற்றும் வர்த்தக வலயம் தொடர்பில் சரியான தீர்மானங்களை மேற்கொண்டு முறையான திட்டங்களின் அடிப்படையில் நாம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்த காரணத்தினால் அந்த பிரதிபலன்களை எம்மால் காட்ட இயலுமாக இருந்தது. 

எனினும் அந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு என்ன நடந்து இருக்கின்றது? அந்த நிறுவனங்கள் உரிய திட்டமிடலின் கீழ் பணிபுரிந்து பிரதிபலன்களை வெளிக்காட்டி உள்ளதா? என்ற கேள்வி எழுகின்றது. எனினும் இன்று குறித்த பிரதேச சபைகளும், நகர சபைகளும் எதிர்கட்சியினருக்கு வேண்டாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எதிர்கட்சியினரின் அதிகாரத்தின் கீழ் இருந்த உள்ளூராட்சி மன்றங்களின் மூலம் எவ்வித பணிகளும்; மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் இன்று கூறுகின்றனர். 

வரவு செலவு திட்டத்தின் போது அரசாங்கத்தினை போன்று எதிர்கட்சியினரின் பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்படுகின்றது. வரவு செலவு திட்டத்தின் போது பொதுவாக அரசாங்கத்தின் பணிகளுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதியினை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்கட்சியினர் மேற்கொள்வது வழக்கம். எனினும் இம்முறை அதற்கு முற்றிலும் மாற்றமான விடயம் ஒன்றே நடந்தேறியுள்ளது. 

எதிர்கட்சியினர் வரவு செலவு திட்டம் தொடர்பில் விவாதங்களை மேற்கொண்டு, வாக்களிப்பு ஒன்றினை நடாத்தி, தமக்கு கீழால் இயங்கிக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி ஒதுக்கீட்டினை தோல்வியடையச் செய்துள்ளனர். இதன் மூலம் தமது அதிகாரத்தின் கீழ் காணப்படுகின்ற உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் அவர்கள் ஏமாற்றத்துடன் இருப்பது தெளிவாகின்றது. 



எனினும் அந்த நிறுவனங்களுக்கு தேவையான நிதியினை பெற்றுத் தருவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்நிறுவனங்களின் எதிர்கட்சி தலைவர்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனினும், ஏப்ரல் மாதம் 05ம் திகதிக்கு முன்பதாக நாங்கள் அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அடுத்து வருகின்ற வருடத்திற்காக நிதி இல்லாமல் போய்விடும்.

எனினும், நாம் ஏப்ரல் மாதம் 05ம் திகதி குறித்த நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் நடவடிக்கைகளை எடுக்க தயார் நிலையிலேயே இருக்கின்றோம். எனினும் பொது எதிரணியினர் அதனையும் எதிர்த்தால் எமக்கு எதுவும் செய்ய முடியாது.

வரவு செலவு திட்டத்தின் போது அரசாங்கத்திற்கு பாரியளவு தாக்கமுடைய அமைச்சுக்களின் நிதி ஓதுக்கீட்டினை தோல்வியடையச் செய்வதற்கு எதிர்கட்சியினர் நடவடிக்கை எடுப்பார்கள் என நாம் எதிர்பார்த்து இருந்தோம். எனினும் அவர்கள் தமது பெரும்பான்iயினை கொண்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்படவிருந்த நிதி ஓதுக்கீட்டினை தோல்வியுறச் செய்வதற்காகவே தமது வாக்குகளை அளித்துள்ளனர். இந்த உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் எதிர்கட்சியினருக்கு இவ்வாறான சான்றிதழே இருக்கும் எனின், தொடர்ந்தும் அந்நிறுவனங்கள் தொடர்பில் கதைப்பதில் பயனில்லை.

எனினும், கொழும்பு மாநகரம் உட்பட அனைத்து நகரங்களையும் அபிவிருத்தி செய்வதற்காக எம்முடன் இணைந்து செயற்படுமாறு நான் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன். இன்று திறந்து வைக்கப்பட்ட நான்கு மாடி வாகன தரிப்பிடத்தின் பரிபாலனத்தினை மகரகம மாநகர சபைக்கு பொறுப்பளிக்கின்றேன்.

மாநகரங்களை அபிவிருத்தி செய்வதற்கான தலைமைத்துவத்தினை இந்த அரசாங்கத்துக்கு மாத்திரமே வழங்க முடியும். இதற்கு முன்னர் இருந்த நிர்வாகங்கள் மேற்கொண்டது என்ன?. அவர்கள் வெறுமனே கடன் பெறுவதை மாத்திரமே செய்துள்ளனர். எனினும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அந்த கடன் தொகை திரும்ப செலுத்தப்பட்டதுடன், புதிய வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

நகர அபிவிருத்தி அதிகார சபையும், பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களும் இணைந்து முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பினை நல்குமாறு அனைவரிடத்திலும் நான் மீண்டுமொருமுறை கேட்டுக் கொள்கின்றேன்.' என்றார்.

இந்த நிகழ்வில் பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களுடன் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.    

         

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.