ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவது எதிரிகளுக்கு சாதகமாக அமையக்கூடும் என்பதால் பயங்கரவாத குழுவை வேரோடு ஒழிப்போம்


பயங்கரவாத குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவது எதிரிகளுக்கு சாதகமாக அமையக்கூடும் என்பதால் இப்பயங்கரவாதக் குழுவை வேரோடு அறுத்தெறிய அனைவரும் ஒன்றுபட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

துரதிஷ்டவசமாக ஒரு கோரச்சம்பவம் இடம்பெற்றுவிட்டது. அதனைத் தொடர்ந்து நாம் பயத்தை உருவாக்கும் பொத்தானையே அழுத்திக் கொண்டிருக்காமல் இவ்விடயம் தொடர்பில் தற்போதும் எதிர்காலத்திலும் செயற்படுத்த வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய முன்வர வேண்டும் என்றும் அவர் பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது இலங்கையில் தேவாலயங்கள், ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்த அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். காயமடைந்தவர்கள் குணமடையவும் பிரார்த்திக்கின்றேன்.
இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதையடுத்து பேராயர் மல்கம் ரஞ்சித் பொறுப்புடன் செயற்பட்டார்.

அவர் கிறிஸ்தவர்களையும் பொறுப்புடன் செயற்பட வழிகாட்டினார். அது வரவேற்கப்பட வேண்டிய விடயம். அவர் அவ்வாறு செயற்பட்டிருக்காவிட்டால் நாட்டில் பாரியதொரு இனப்பிரச்சினையை சந்திக்க நேரிட்டிருக்கும்.
பயங்கரவாதிகள் நிகழ்த்திய இச்சம்பவங்களினால் முஸ்லீம் சமூகம் பெரும் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளது. இத்தாக்குதல்கள் நன்கு ஒருங்கமைக்கப்பட்டே நடத்தப்பட்டுள்ளன.

இலங்கை வரலாற்றில் இவ்வாறான ஒரு தாக்குதல் நடந்ததில்லை. எனவே இத்தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதக்குழுவை வேரோடு அறுத்தெறிய வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் எம்மால் இதை வெற்றிகரமாக செய்ய முடியும்.
உயர்மட்டம் முதல் கீழ் மட்டம் வரை அனைத்து அதிகாரிகளுக்கும் இவ்விடயத்தில் பொறுப்பு உண்டு. பொதுவாக தாக்குதலை நடத்திவிட்டு அதற்கான காரணம் மற்றும் கோரிக்கையை முன்வைப்பார்கள். ஆனால் இந்த தாக்குதல்களுக்கு எந்தக்காரணங்களும் கூறப்படவில்லை.
இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் ஒருவர் கூட தாக்குதல்ககளை ஏற்கவில்லை. நாம் ஒருவர் மீது ஒருவர் விமர்சித்துக் கொண்டிருந்து எதிரியை வெற்றியடைய வைக்கக்கூடாது. அது எதிரிக்கு சாதகமாக அமைந்துவிடும். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதனை நிறுத்துவோம்.

அனைவரும் ஒன்றிணைத்து இந்த எதிரியை அடியோடு ஒழிப்போம். இவர்களை அழித்தொழிக்க அரசு அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
Share:

No comments:

Post a Comment