இலங்கையின் தேர்தல் காலண்டருக்கு அமைவாக அடுத்து மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படல் வேண்டும். ஆனாலும் ஆளும் ஐதேகவை பொறுத்தவரை தேர்தல் ஆண்டான இந்த வருடத்தில் முதலில் மாகாண சபை தேர்தல்கள் நடத்துவது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது.

ஏனெனில் அடிமட்டத்தில் கட்சியை பலப்படுத்தும் எந்தவித வேலைத்திட்டங்களும் கடந்த காலங்களில் செய்யப்படவில்லை. அதன் விளைவுகள் உள்ளூராட்சி தேர்தலில் பிரதிபலித்தது. மாகாண சபை தேர்தல்களை வெற்றிகொள்ளும் எந்தவிதமான கவர்ச்சிகரமான சுலோகங்களும் ஐதேக வசம் கிடையாது.

எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டி காலம் இழுத்தடிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. மைத்திரி(SLFP) - மஹிந்த (SLPP) இடையே ஒரு தேர்தல்  இணக்கப்பாடு இதுவரை எட்டப்படவில்லை என்பதால் அவர்களும் மாகாண சபை தேர்தல்கள் பிற்போடப்படுவதை ஒரு எதிர்கட்சி சுலோகமாக பாவிக்கிறார்களே ஒழிய அவர்களும் பூரணமாக மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இல்லை.

மாகாண சபை தேர்தல்களுக்கும் மேலாக ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பேச்சுக்களே அரசியல் அரங்கில் முக்கியத்தும் பெற்றுவருகிறது. SLFP -SLPP அணியின் பொது வேட்பாளராக மைத்திரி போட்டியிட விரும்பினாலும், அதற்கு SLPP அணியினர் கொஞ்சமும் விரும்புவதாக தெரியவில்லை. அவர்கள் கோட்டாவை முன்னிறுத்தி சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ராஜபக்ச குடும்பத்திற்குள் கோட்டாவை போட்டியிட வைப்பதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கோட்டாவும் முன்னரைவிட இப்போது தனது ஜனாதிபதி ஆசையை பற்றி வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்.  கடுப்போக்கு சிங்கள தேசியவாதியாகவும் அரசியல் நெகிழ்வு தன்மை அற்றவராகவும் அறியப்பட்ட கோடா, ஒருவேளை களம் இறக்கப்பட்டு வெற்றிபெற்றால் அத்துடன் நாமலின் ஜனாதிபதி கனவு முற்றுப்பெறும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாகும். இந்த நிலையில் கோட்டா மீதான விஷேட நீதிமன்ற விசாரணைகளின் நீதிபதிகளுக்கு நேரடியற்ற அச்சத்தை எற்படுத்தி அந்த விசாரணைகளில் இருந்து அவரை தப்ப வைப்பதற்கான ஒரு உத்தியாக அவரின் பெயரை மேல்கொண்டு வந்ததாகவும் யூகிக்கப்படுகிறது.

ஒருவேளை அவர் களம் இறங்கினால், தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் இன்றி தனி சிங்கள வாக்குகளால் வெற்றிபெற முடியுமா என்ற கேள்விக்குறியும் இருக்கிறது. SLPP அணியை பொறுத்தவரை தமிழ் வாக்குகளை விட முஸ்லிம் வாக்குகளை குறிவைத்து பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. SLPP முஸ்லிம் அணி (Muslim Wing) ஒன்று உருவாக்கப்பட்டு தற்பொதைய நிலையில் அலி சப்ரி போன்றோர் அதை வழிநடத்தினாலும் எதிர்வரும் காலங்களில் முக்கிய முஸ்லிம் அரசியல் புள்ளிகள் உள்வாங்ப்பட்டு தலைமைத்துவம் கொடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் இருக்கிறது.

கோட்டாவை சிறுபான்மை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பது ரணில் தரப்பில் களம் இறக்கபடும் வேட்பாளரை பொறுத்தே தீர்மானிக்கபடும். தற்போதய நிலையில் நான்கு பேரின் பெயர்கள் பரிசீலனையில் இருக்கின்றன.

1. கரு ஜயசூரிய - நேர்மையான அரசியல்வாதியாக அறியப்பட்டவர். சிங்கள மற்றும் சிறுபான்மை மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர். இவர் அதிக வயதுடையவர் என்பதால் ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என்ற ஒரேயொரு சுலோகத்துடனேயே இவர் களம் இறக்கப்படுவார்.

2. ரணில் விக்ரமசிங்க - நவம்பர் சதிப்புரட்சியை அமைதியான காய் நகர்த்துடலுன் வெற்றி பெற்றதன் பின்னாலும் அதன் பின்னர் தொடர்ந்தும் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களாலும் சிங்கள மக்கள் மத்தியில் இவர் மீதிருந்த எதிர்மறை (negative) கருத்துக்கள் குறைவடைந்திருப்பது அவதானிக்கக்கூடியதாக இருந்தாலும் அவை வாக்குகளாக உருமாற்றம் அடையுமா என்பது திண்ணமாக சொல்லமுடியாது. இதற்கிடையில் சிறுபான்மையினர் முன்னரை விட இவரின் மீது அதிருப்தியுடன் இருப்பதை இவரின் அணியினர் கவனிக்க தவறியிருக்கிறார்கள்.

3. சஜித் பிரேமதாச -  கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் முதல் பாராளுமன்ற உருப்பினர்கள் வரை இவரின் வருகையை விரும்புகிறார்கள். நவம்பர் சதிப்புரட்சியின் போதும் ரணிலுக்கு ஆதரவாக இருந்திருந்தார். ஹேமா பிரேமதாச இன்னும் உயிரோடு இருப்பதால் ஒருவேளை தனது தந்தை மீதான சதிப்புரட்சியை ரணில் காப்பாற்றிக்கொடுத்ததற்கான கைமாறாக கூட இருக்கும். ஆனாலும் இவருக்கு மைத்திரி மற்றும் சிரச மஹாராஜா போன்றோருடன் இருக்கும் நெருக்கம், ஒரு தேசிய தலைவனாக நாட்டுக்கான தனது கொள்கை  என்ன என்று இதுவரை வெளிப்படுத்தாமல் இருப்பதும் இவரின் மீதிருக்கும் உள்ளக விமர்சமாகும். அதுபோக ஐதேகவின் இறுதி தீர்மானம் இயற்றும் செயற்குழு முழுக்க முழுக்க ரணிலின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவை எப்படி திரட்ட போகிறார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

4. சம்பிக்க ரணவக்க - மேலே உள்ள மூன்று பேரும் ஐதேக உறுப்பினர்கள். ஆனாலும் கடும்போக்கு சிங்கள தேசியவாதியான சம்பிக்க, அதையொத்த கோடாவுக்கு எதிரான ஒரு பொது வேட்பாளராக  தன்னை முன்னிறுத்த எத்தனிக்கிறார். கடந்த ஞாயிறு லங்காதீப பத்திகையில் வெளியான பேட்டியிலும் சூசகமாக இதை வெளிப்படுத்தியிருந்தார். அதுபோக கோடாவின் பெயர் மேலேந்ததன் பின்னர் இவரின் அமைச்சினால் செயற்படுத்தப்பட்ட திட்டங்களின் திறப்பு விழாக்களில் ஜனாதிபதியும் பிரதமரும் பிரதான அதிதிகளாக கலந்துகொண்டமை ஒன்றும் தற்செயலானது அல்ல. அவரையும் தங்களது தெரிவுகளில் ஒன்றாக முன்னிறுத்துகிறார்கள். அதனால்தான் சம்பிக்கவின் காலில் கொழுவிய நெருஞ்சி முள்ளாக மாறியிருக்கும் அருவக்காலு திட்டம் தொடர்பாக புத்தளம் மக்களுடன் பேச்சுவார்த்தையை இவர்கள் இருவரும் தவிர்ந்து வருகிறார்கள்.  சம்பிக்கவின் கனவுக்கு செக் மேட் வைப்பதற்கான சிக்னலாகவே அவரின் அமைச்சுக்கான வரவு செலவு திட்ட பிரேரணை குழுநிலை விவாதத்தில் மஹிந்த அணியால் தோற்கடிக்கப்பட்டது.

 சிங்கள பெருந்தேசியவாதிகளான கோட்டாவும் சம்பிக்கவும் ஜனாதிபதி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டால் சிறுபான்மை வாக்குகள் யாருக்கு என்ற சுவாரசியமான கேள்வியும் எழுகிறது.

 இலங்கை வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி பதவியால் சிறுபான்மை அடைந்த நன்மைகளைவிட அதிக பாதிப்புகளுக்கான சான்றுகள் நம் முன்னே இருக்கின்றன. இந்த கதிரையில் பெருன்பான்மையை மட்டும் திருப்திபடுத்தும் ஒரு கடும்போக்காளர் அமர்ந்தால் , தேசிய கொள்கை ரீதியிலும் நிறுவன ரீதியிலும் நீண்ட கால நோக்கில் சிறுபான்மையினர்  ஒதுக்கப்படும் அபாயம் அதிகமாகவே இருக்கும். இதற்கிடையில் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படல் வேண்டும் என்று ஜேவிபி 20 அரசியல் சீர்திருத்த முன்மொழிவை கொண்டு வந்த போது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை  சிறுபான்மைக்கான காப்பீடு என்று சிலர்  கிளிப்பிள்ளை போல பேசி வந்தது ஞாபகம் வருகிறது.

கோட்டா - சம்பிக்க போட்டியிட்டால்  ஜேவிபி சார்பாக ஒரு பொதுவேட்பாளர் அல்லது ஜேவிபி, TNA மற்றும் ஏனைய சிறுகட்சிகள் சார்பாக ஒரு பொதுவேட்பாளர் நிறுத்தப்படலாம். அவ்வாறு ஒருவர் நிறுத்தப்பட்டால் இருமுனைப்போட்டி மும்முனை போட்டியாக மாற்றம் பெற்று அந்த வேட்பாளர் கணிசமான வாக்குகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில் எந்தவொரு வேட்பாளரும் 50% எல்லையை தாண்ட முடியாத ஒரு நிலையை உருவாக்கி, இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடைபெறும் சூழலை ஏற்படுத்தும்.

இருவாரங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையாளரை ஒரு நிகழ்வில் சந்திக்க கிடைத்தபோது இது பற்றி அவருடன் பேசக்கிடைத்த்து. தனது பணிக்காலத்தில் எல்லா வகையான தேர்தல்களும் நடத்தியிருப்பதாகவும், இந்த மாதிரியான ஒரு வித்தியாசமான அதேநேரம் சுவாரசியமாக தேர்தலை எதிர்பார்ப்பதாகவும் , அதற்கு தேர்தல் திணைக்களமும் தயாராகி வருவதாகவும் கூறினார். அவர் தயாராக இருந்தாலும் இந்த நாடும் மக்கள் அதற்கு முகம்கொடுக்க தயாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(டில்ஷான் மொஹமட்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.