(அகமட் எஸ். முகைடீன்)
கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளம் அறுவக்காட்டு பிரதேசத்தில் கொட்டுவதனை அரசு உடனடியாக தலையிட்டு கைவிடவேண்டுமென மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பாராளுமன்றத்தில் நேற்று (1) திங்கட்கிழமை உரையாற்றுகையில் தெரிவித்தார்.

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளம் அறுவக்காட்டு பிரதேசத்தில் கொட்டுகின்ற நிகழ்வு தற்போது நடைபெற்று வருகின்றது. இதனால் அப்பிரதேசம் மாசடைவதாக புத்தளம் மக்கள் வெகுண்டெழுந்துள்ளனர்.

இந்த நாட்டின் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் என்றவகையில் இது சம்பந்தமாக எமது அமைச்சின் சூழல் பிரிவுடன் கதைத்தேன். தலைநகர் உள்ளிட்ட கொழும்பு பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை வாங்கி அதனை தொழிற்சாலையில் பசளையாக்குவதற்கு இலண்டன் நாட்டைச் சேர்ந்த நியு பவர் ஜெனரேசன் கம்பனி முன்வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தார்கள். அந்தவகையில் ஒரு நாளைக்கு 500 மெட்ரிக்தொன் குப்பைகளை அந்நிறுவனம் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அந்நிறுவனத்திற்கு குப்பைகளை வழங்குவதற்கான விலைமனுக்கோரல் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இவ்வாறு குப்பைகளை எடுப்பதற்கு நிறுவனம் ஒன்று தயாராகின்றபோது எந்த விதத்திலும் சாத்தியமற்றவகையில் கொழும்பிலிருந்து குப்பைகளை புத்தளம் அறுவக்காட்டிற்கு கொண்டு சென்று போடுவதனால் புத்தளம் மக்களின் சூழல் பாதிக்கப்படுகிறது. இதனை கண்டிக்கின்றேன், உடனடியாக ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு புத்தளம் அறுவக்காட்டு பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவதை கைவிடவேண்டுமென இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.