கஞ்சிப்பானை இம்ரான் அதிர்ச்சித் தகவல்
மேலும் இருவர் இன்று நாடு கடத்தப்பட்டு CID கட்டுப்பாட்டில்

மாகந்துர மதுஷுடன் தொடர்பு வைத்துள்ள இலங்கை அரசியல்வாதிகள், பொலிஸ் உயரதிகாரிகள் பலரின் பெயர் விபரங்கள் அடங்கிய தகவல்கள் தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையிலுள்ள கஞ்சிப்பானை இம்ரானிடம் நடத்தப்பட்ட விசாரணைகளிலிருந்து வெளிவந்துள்ளது.

இதேவேளை மாகந்துரே மதூஷ் உடன் கடந்த பெப்ரவரி மாதம் துபாயில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மேலும் இருவர் நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று (08) அதிகாலை 5.10 மணிக்கு ருடு-226 எனும் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவு அதிகாரிகளின் (CID) கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக மாகந்துர மதுஷுக்கு இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளுடனான தொடர்புகள் பலவும் வெளிவந்துள்ளன. இதற்கிணங்க மதுஷுக்கு இலங்கையிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் பல தொடர்பாகவும் தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன. அந்த வர்த்தக நிறுவனங்களுள் தெற்கிலுள்ள உல்லாச பிரயாண ஹோட்டலொன்றும் உள்ளடங்குகின்றது. அந்த ஹோட்டலைவேறொரு நபரின் பெயரில் மதுஷ் நடத்திச் செல்வதும் மற்றும் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றையும் மதுஷ் ஆரம்பித்துள்ளதாகவும் கஞ்சிபானை இம்ரான் தகவல் வெளியிட்டுள்ளார்.  

மதுஷுக்கு சொந்தமான காணிகள் பல நாடெங்கிலும் பல்வேறு பிரதேசங்களில் உள்ளதாகவும் காணிகளை விற்பதற்கான வர்த்தகமொன்றும் மதுஷினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மதுஷுக்கு மாத்திரமன்றி கஞ்சிப்பானை இம்ரானுக்கும் கொழும்பு நகரில் சொத்துக்கள் உள்ளதாகவும் தகவல்களிலிருந்து தெரியவருகிறது.  

கஞ்சிபானை இம்ரான் அரசியல்வாதிகள், பொலிஸ் உயரதிகாரிகள் பலரினதும் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அந்த உயரதிகாரிகளின் ஓய்வுபெற்றுள்ள இரண்டு அதிகாரிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

கஞ்சிபானை இம்ரான் துபாயிலிருந்த போது கொழும்பு பொலிஸ் நிலையங்கள் பலவற்றிலும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரிகள் பலருடனும் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளதாகவும் அவ்வேளையில் மரண அச்சுறுத்தல் விடுத்ததாகவும் கஞ்சிபானை இம்ரானிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.  

2015ஆம் ஆண்டு மாக்கந்துர மதுஷை துபாய்க்கு அழைத்துச் சென்றதில் தமக்கு பங்களிப்பு உள்ளதாகவும் அங்கு முதலீட்டு விஸாவை தயாரித்து வழங்கியதும் தாமே என்றும் கஞ்சிபானை இம்ரான் விசாரணைகளின் போது தகவல்களை வெளியிட்டுள்ளார்.  

மாக்கந்துர மதுஷ் தொடர்பில் இலங்கையிலுள்ள ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை தானே அங்கு தெரிவித்ததாகவும் தாம் அதிக குற்றச் செயல்களை செய்வதற்கு அவரே தம்மைத் தூண்டியதாகவும் கஞ்சிபானை இம்ரான் தெரிவித்தார்.  

மாக்கந்துர மதுஷ் தனது மகளின் பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடுவதற்கு தீர்மானித்து இலங்கையிலுள்ள அவரது சகாக்களை அதில் கலந்துகொள்ளச் செய்வதற்கும் தீர்மானித்தமையானது அவரது பலத்தைக் காண்பிப்பதற்காகவே என்றும் கஞ்சிபானை இம்ரான் விசாரணைகளின் போது தெரிவித்திருந்தார்.  

மதுஷ் போதைப்பொருள் விருந்துபசாரமொன்றை ஏற்பாடு செய்கையில் தாம் அதைத் தடுத்ததாகவும் அதிக பிரச்சினைகள் உள்ளதால் நாம் அவ்வாறு செய்யக்கூடாது என்று கூறியதாகவும் அவர் அதனை செவிமடுக்க மறுத்துவிட்டதாகவும் விருந்துபசாரத்தை நடத்தினார் என்றும் கஞ்சிபானை இம்ரான் தெரிவித்தார்.  

அந்த விருந்துபசாரத்திற்கு கஞ்சிபானை இம்ரான் கடைசி நேரத்திலேயே வருகை தந்துள்ளார். தாமும் தமது மனைவி பிள்ளைகள் அந்த விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளப் போவதில்லையென்று தீர்மானித்திருந்த போது மதுஷ் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு நச்சரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.