மோடியின் பந்துக்கு மிட்விக்கட்டில் ஓங்கி சிக்சர் அடித்த இம்ரான் கான்


பாகிஸ்தானில் சூப்பர் ஸ்டார் லெவலுக்கு கொண்டாடப்பட்ட வீரர் ஜாவிட் மியண்டாட்.மியண்டாட் எந்தளவுக்கு மிகச் சிறந்த வீரரோ அந்தளவுக்கு சர்ச்சையிலும் நம்பர் வன்.மியண்டாட்டுக்கு இந்தியாவைச் சுத்தமாய்ப் பிடிக்காது.இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் எழுச்சியில் மியண்டாட்டின் வியர்வை லீட்டர் கணக்கில் சிந்தப்பட்டு இருக்கிறது.

86 ஆம் ஆண்டு சார்ஜா கிண்ண இறுதிப் போட்டி தொடங்க சற்று முன்னர் கிண்ணத்தைச் சுற்றிக் காட்டிய மியண்டாட் " இதை நாளை நான் பாகிஸ்தான் கொண்டு போகப் போகிறேன் " என்றாராம்.உடனே சுனில் கவாஸ்கர் " அதையும் பார்த்துவிடுவோம் " என்று சொல்ல மியண்டாட் சொன்னதையே விடாப்பிடியாய் அழுத்தமாய் சொல்லிக் கொண்டே போக இம்ரான் கானும் மெளனமாய் மியண்டாட்டை ரசிக்க கோபப்பட்ட கவாஸ்கர் பட்டென்று அந்த இடத்தில் இருந்து வெளியேறினாராம்.மியண்டாட் சொன்னது போலவே நடந்தது.இறுதிப் போட்டியில் கேட்டன் சர்மாவின் கடைசிப் பந்தில் சரித்திரப் பிரசித்தி பெற்ற சிக்ஸர் அடித்து கிண்ணத்தைப் பாகிஸ்தானுக்குப் பெற்றுக் கொடுத்தார்.பழைய ஸ்போர்ட்ஸ் ஸ்டார் சஞ்சிகை ஒன்றில் இந்த சம்பவம் பற்றி அத்தனை ரசனையாய் சொல்லப்பட்டு இருந்தது.

அன்று பாகிஸ்தான் கிரிக்கட்டை வழிநடத்திய இம்ரான் கான் இப்போது நாட்டை நிர்வகிக்கிறார்.அன்று கபில் தேவ்களும் கவாஸ்கர்களும் ஶ்ரீகாந்த்களும் இருந்த இடத்தில் இன்று மோடியும் ராஜ் நாத் சிங்கும் யோகிகளும் சாமியார்களும் இருக்கிறார்கள்.கிரிக்கட் ஆடுகளம் போலவே அரசியலிலும் ஏகப்பட்ட ஸ்விங்கள்,பவுன்சர்கள்,யோக்கர்கள் என்று இம்ரான் கான் ஒவ்வொன்றாய் அவ்வப் போது வீசிக் கொண்டிருக்கிறார்.எல்லாமே எதிர்பார்க்காத நுணுக்கமான நகர்வுகள்.இந்திய வீரர் அபிநந்தனை விடுவித்தார்.போர் செய்ய நேரம் இல்லை என்றார்.பாகிஸ்தானால் உயிருக்கு ஆபத்து என்று மோடி பிரம்மஸ்திரத்தை தேர்தல் மேடைகளில் கையிலெடுத்த போது " மோடி மீண்டும் வெல்ல வேண்டும் .அப்போது தான் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணலாம் " என்று மிட்விக்கட்டில் ஓங்கி ஒரு சிக்ஸர் அடித்து இருக்கிறார்.படு நேர்த்தியான ஆட்டம்.ஒட்டுமொத்தமாய் இந்தியாவைப் புதைகுழிக்குள் இறக்க மோடி வேண்டும் என்பதன் வஞ்சப் புகழ்ச்சியே அது.

இந்த ராஜதந்திர அரசியல் சித்து விளையாட்டுக்களை எல்லாம் இம்ரான் கானின் வலது கரம் போல இருந்த ஜாவிட் மியண்டாட் எப்படி ரசித்துக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை."இம்ரான் பாய் !உமக்கு கிரிக்கட் போலவே அரசியலும் அதுவும் இந்தியாவைச் செய்யும் போது செம்மையாய் வருகிறது "என்று ஒரு வேளை சொல்லிக் கொண்டிருக்கக் கூடும்.

(ஸபர் அஹ்மத்)
Share:

No comments:

Post a Comment