முஸ்லிம் அரசியலும்
கேள்விக்குறியாகியுள்ள முஸ்லிம் எதிர்காலமும்
===============================
பாகம்-1
வை எல் எஸ் ஹமீட்

எண்பதுகளின் நடுப்பகுதியில் தனித்துவ முஸ்லிம் அரசியல் தோற்றம்பெற்றபோதே முஸ்லிம்களுக்கு தனித்துவ அரசியல் தேவையில்லை; என்ற கோசம் தேசிய அரசியலில் இருந்த முஸ்லிம்களாலேயே எழுப்பப்பட்டது.

அன்று ‘ அஷ்ரப்’ என்ற பெரும் ஆளுமை அக்கோசங்களுக்கெல்லாம் தெளிவான பதிலை வழங்கி அவர்களது வாதங்களை முறியடித்தார். அதன்பின் மக்கள் ஆணையைப்பெற்ற சக்தியாக மாறியபோது முஸ்லிம்களின் உரிமைகளுக்காக தைரியமாக உரத்துக் குரல்கொடுத்த அதேவேளை தனித்துவ அரசியல் என்பது இனவாத அரசியலல்ல; அது சகவாழ்வுக்கான அரசியல் என்பதை தனது செயற்பாடுகள் மூலம் நடைமுறையில் நிறுவினார்.

அவரது இவ்வாறான செயற்பாடுகளும் விளக்கங்கங்களும் தனித்துவ அரசியல் என்பது இனவாத அரசியல் என்ற கோசத்தை மழுங்கச் செய்தது. அவரை ஆரம்பத்தில்  இனவாதியாக பார்த்தவர்களெல்லாம் அவரை மரியாதையுடன் நோக்கத்தொடங்கினார்கள். இவரைப்போன்ற ஒரு தலைவர் நமக்கு இருந்திருந்தால் இந்நாடு எப்போதோ முன்னேறியிருக்குமே என்றுகூட சில பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுமளவுக்கு முஸ்லிம் அரசியலை முன்னெடுத்தார் மறைந்த தலைவர்.

முஸ்லிம் தனித்துவ அரசியல் இனவாத அரசியலல்ல; என்று மறைந்த தலைவரால் நிறுவப்பட்ட அரசியல் அவரது மறைவைத்தொடர்ந்து இனவாத, சந்தர்ப்பவாத அரசியல் என்ற பெயரை மீண்டும் பெறத்தொடங்கியது. உண்மையில் முஸ்லிம் அரசியலுக்கெதிரான பார்வை மீண்டும் ஆரம்பித்தது 2001 ஆம் சந்திரிகாவின் ஆட்சிக்கவிழ்ப்பினாலாகும்.

முஸ்லிம்கள் வழங்கிய அரசியல் பலம் முஸ்லிம்களுக்காகப் பாவிக்கப்படாமல் சில அரசியல் சுயநலன்களுக்காக பாவிக்கப்பட்ட சந்தர்ப்பம் அதுவாகும். சிறுபான்மை அரசியல்கட்சிகளுக்கு பலம் வழங்குகின்ற இத்தேர்தல் முறையே மாற்றப்படவேண்டும்; என்ற கோசம் அன்றுதான் ஆரம்பித்தது.

இன்று அது மீண்டும் விசுவரூபமெடுத்து அன்று ஆர் பிரேமதாச வெட்டுப்புள்ளித்திட்டத்தை குறைத்ததே வரலாற்றுத்தவறு; அதுதான் இன்று இந்த நாட்டின் அழிவுக்கு வித்திட்டது; என்று அடுத்த சமூக அரசியல்வாதிகள் கூறுமளவுக்கு, இந்த சிறுபான்மைக்கட்சி அரசியல் இந்நாட்டிற்கு ஒத்துவராது; என்று சில பெரும்பான்மையைச்சேர்ந்த அரசியலுக்கு அப்பாலுள்ளவர்கள்கூட கூறுமளவுக்கு நிலைமை வந்திருக்கிறது.

அன்று மறைந்த தலைவர் செய்ததுபோல் இதற்கெதிரான நியாயங்களை தெட்டத்தளிவாக, ஆணித்தரமாக தெளிவுபடுத்தக்கூடிய தலைமைத்துவங்கள் இன்று எம்மிடம் இல்லை. கெடுபிடிகள் அதிகமானால் இவர்களே கட்சிகளைக் கலைத்துவிட்டு வாருங்கள் தேசியக்கட்சிகளில் சங்கமிப்போம்; என்று அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மறுபுறம் முஸ்லிம்களுக்கு மத்தியில்கூட இந்த தனித்துவ அரசியல் தேவையில்லை; தேசிய அரசிலுக்கே மீண்டும் திரும்புவோம்; என்கின்ற விரக்தி மனப்பான்மை மேலோங்கி வருகிறது. இன்றைய இந்த இக்கட்டான நிலையில்கூட சில சிவில் அமைப்புகள் விளம்பரமின்றி அமைதியாக செய்கின்ற பணியைக்கூட இவர்கள் செய்யமுடியாதவர்களாக இருக்கின்றார்கள்; என்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.

அன்று தொடங்கும்போதே இது இனவாதக்கட்சியாக இருக்குமோ என்றெழுந்த சந்தேகங்களைக் களைந்த அதேவேளை சமூகத்தின் ஒவ்வொரு விடயத்திலும் குரல்கொடுக்க வேண்டிய இடத்தில் குரல்கொடுத்து சாதிக்கவேண்டிய இடத்தில் மறந்த தலைவர் சாதித்தார்.

இன்று சரணாகதி அரசியல் செய்துகொண்டு முஸ்லிம்களுக்காக எதையும் சாதிக்க முடியாத நிலையிலும், இவை இனவாதக்கட்சிகள், இது மாற்றப்படவேண்டும்; என்று மீண்டும் பெரும்பான்மை தீவிரமாக சிந்திக்கின்றதென்றால் பிழை எங்கே இருக்கின்றது; என்று தேடிப்பார்க்கின்ற, கட்சி பிணைப்புகளுக்கப்பால் சுயபரிசோதனை செய்கின்ற தேவை சமூகத்திற்கில்லையா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

இனவாத அரசியலைக் கைவிடுவதற்காகத்தான் நுஆவை தலைவர் ஆரம்பித்தார்; என்ற கருத்து நம்மவர்கள் சிலரால் முன்வைக்கப்படுகிறது. இது தவறாகும். தலைவர் தேசியக்கட்சியொன்றில் சேரவில்லை. மாறாக பொதுவான பெயரைத்தான் புதிய கட்சிக்கு வைத்தார். இன்று பெரும்பாலான முஸ்லிம் கட்சிகளுக்கு முஸ்லிம் பெயர் இல்லை. எனவே, வெறும் பெயர் மாற்றம் அல்ல முக்கியம். பெயர் எதுவானாலும் ஒரு முஸ்லிம் தலைமை தாங்கினால் அது ஒரு முஸ்லிம் கட்சியாகவே பார்க்கப்படுகிறது.

மறைந்த தலைவர் நுஆவை உருவாக்கிய காரணம், இனவாதக்கட்சி என்று ஆரம்பத்தில் முத்திரை குத்தப்பட்ட மு கா ஒரு இனவாதக்கட்சியல்ல, “ அஷ்ரப்” தனது சமூகத்தின் நீதிக்காக போராடுகின்ற அதேவேளை ஏனைய சமூகங்களின் உரிமைகளையும் மதிக்கின்ற ஒருவர். இவருடன் தாமும் இணையலாம்; என ஏனைய சமூகங்களைச் சேர்ந்த பலர் விரும்பினார்கள். ஆனால் அவர்களுக்கு முஸ்லிம் என்ற பெயரில் ஒரு தர்மசங்கடம் இருந்தது. எனவே அது ஒரு காரணம்.

அதேநேரம் தலைவர் மு கா என்ற பெயரில் சமூகத்திற்கான பல அடைவுகளைப் பெற்றார். அதன் அடுத்த கட்டமுன்னேற்றத்திற்கு ஏனைய சமூகங்களைச் சேர்ந்த ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களையாவது பெறமுடிமானால் சில விடயங்களை நாம் பேசுவதைவிட அவர்கள் எங்களுக்காக பேசும்போது அது ஒரு பெரும் பலமாக இருக்கும்; என்று நம்பினார்.

தலைவரின் உள்ளத்தில் “ நுஆ” என்ற எண்ணக்கரு குடிகொள்ள ஆரம்பித்தபோது சிலவேளை முதலாவதாக கலந்தாசித்தது என்னுடாக இருக்கலாம் அல்லது முதலாவதாக அவர் கலந்தாலோசித்த ஒரு சிலரில் ஒருவராக நான் இருக்கலாம்.

ஒரு நாள் நானும் தலைவரும் அம்பாறையில் பல இடங்களுக்கும் சென்றதன்பின் மகா ஓயாவில் தங்கினோம். அப்பொழுது ஒரு சிறிய தாள்துண்டில் எதையோ கீறிக்கொண்டிருந்தார். என்னையும் அருகே அழைத்துவைத்து அவரது அந்த ஆரம்ப எண்ணக்கருவை என்னுடன் பகிர்ந்துகொண்டார்.

எனவே, இங்கு நாங்கள் சிந்திக்க வேண்டியது முஸ்லிம் அரசியல் ஆரம்பத்தில் இனவாத முத்திரை குத்தப்பட்டபோதும் முஸ்லிம்களுக்கான தமது போராட்டத்தின் வீரியத்தைக் குறைக்காமல் ஒரு குறிப்பிட்ட சமநிலையைப்பேணி அதன்மூலம் அடுத்த சமூகங்களின் மனதையும் வென்று முஸ்லிம் அரசியலுக்கு உறுதுணையாக அடுத்த சமூகத்தவர்களும் வந்து பங்களிப்புச் செய்யக்கூடிய அளவு நிலையை மறைந்த தலைவர் உருவாக்கினார்.

இன்று அந்த முஸ்லிம் அரசியல் மொத்த சரணாகதி அரசியலாக மாறியும் இனவாதம் என்று தேசியரீதியிலும்,  பிரயோசனம் அற்றது என்று சமூகரீதியிலும் பார்க்கப்படுகின்ற நிலை எவ்வாறு உருவாகியது? இது முஸ்லிம்களின் எதிர்காலத்தை எங்கே கொண்டுபோய் விடும்?

இதற்கு மாற்றுத்தீர்வு என்ன? தமது பலகீனங்களை மறைக்க இன்றைய தொழிநுட்ப வளர்ச்சி தந்த வரமான சமூக வலைத்தளங்கள் எவ்வளவு தூரம் கைகொடுக்கும்? நமக்கு தனித்துவ அரசியலின் தேவை இன்னும் இருக்கின்றதா? அல்லது தேசிய அரசியலுடன் சங்கமிப்பது நமது எதிர்காலத்தைப் பாதுகாக்குமா? அல்லது இந்த தனித்துவ அரசியலை எவ்வாறு சீர்செய்யலாம்?

இன்று இந்த இளைஞர்கள் வழிதவறி தீவிரவாதிகளாகமாறி இந்த அழிவை ஏற்படுத்தும் நிலைக்கு சென்றதற்கு பிழையான மார்க்க வழிகாட்டல் மட்டும் காரணமா? அல்லது அரசியல் குறைபாடுகளும் அவர்களது விரக்திக்கு பங்களிப்புச் செய்ததா?

நாம் கடந்துவந்த பாதையில் எங்கே தவறுவிட்டோம்? எவ்வாறு சீர்திருத்துவோம்? என்பதை சற்று ஆள, அகலமாக இத்தொடரில் ஆராய்வோம்; இன்ஷாஅல்லாஹ்.

( தொடரும்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.