வெள்ளிக்கிழமை பள்ளி போகவேண்டாம் ; மினுவாங்கொடை பாடசாலையில் அனுமதி மறுப்பு


வெள்ளிக்கிழமை பள்ளி போகவேண்டாம் ;
மினுவாங்கொடை பாடசாலையில் அனுமதி மறுப்பு

( மினுவாங்கொடை நிருபர் )

   உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைக் காரணமாக வைத்து, சிங்களப் பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களை வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்கு சமூகமளிக்கச் செய்யாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள், மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

   இது தொடர்பிலான முதற்கட்ட நடவடிக்கைகள், மினுவாங்கொடை புருல்லப்பிட்டிய (சிங்கள) மகா வித்தியாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மினுவாங்கொடை பிரதேச வாழ் முஸ்லிம் பெற்றோர் மிகவும் கவலையுடன் தெரிவித்தனர்.

   இதற்கு முன்பு, இப்பாடசாலையில் படிக்கும் முஸ்லிம் மாணவர்களை, வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை தினத்தன்று உரிய நேரத்திற்கு வீடுகளுக்கு அனுப்பி விடுவார்கள். ஆனால், கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தினத்தன்று, இம்மாணவர்களுக்கு ஜும்ஆத் தொழுகைக்காக வீடு செல்வதற்கு, குறித்த பாடசாலையின் அதிபர் ஊடாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டனர்.

   இதேவேளை, "இனிமேல் வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் செல்ல கேட்டு வரவேண்டாம். அதற்கு நாம் அனுமதி தரவும்  மாட்டோம்" என்றும், முஸ்லிம் மாணவர்கள் எச்சரிக்கப்பட்டுமுள்ளனர். 
மினுவாங்கொடை, புருல்லப்பிட்டிய மகா வித்தியாலயத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here