சமூகங்களுக்கிடையில் அமைதியை நிலைநாட்ட சமயத் தலைவர்கள் முன்வர வேண்டும்

( ஐ. ஏ. காதிர் கான் ) 

   சமூகங்களுக்கிடையில் விழிப்புணர்வையும் அமைதியையும் ஏற்படுத்துவதே இன்றைய காலத்தின் தேவை. இதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு, அரசியல் மற்றும் சமூக சமயத் தலைவர்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என, மினுவாங்கொடை மெதடிஸ் ஆலய பங்குத்தந்தை நதீர பெர்னாண்டோ தெரிவித்தார்.

மினுவாங்கொடை ஜும்ஆப் பள்ளிவாசலில், பள்ளிவாசல் பிரதம பேஷ் இமாம் மெளலவி எம்.எஸ்.எம். நஜீம் (இல்ஹாரி) தலைமையில்  நல்லிணக்க வெசாக் ஒன்று கூடல் நிகழ்வு, (19) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆலய பங்குத்தந்தை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

   அவர் மேலும் இந்நிகழ்வில் பேசும்போது, 
நாம் வன்முறைகள், வெறுப்புணர்வுகள் போன்றவற்றை முழுமையாக நிராகரிக்க வேண்டும். அத்துடன், அனைத்து மக்களினதும் பாதுகாப்பையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். 

   நாம் சக ஒற்றுமை தொடர்பில் கதைக்கின்றோம். ஒருமித்து வாழுதல் என்பது, ஒருவருடன் ஒற்றுமையுடன் கழிப்பது மாத்திரமல்ல. ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதே. இன்று மினுவாங்கொடையில் நாம் அனைவரியும் வரவேற்கின்றோம். எம்மிடையே உள்ள தேவையற்ற  பயத்தை முற்றாக நீக்கிக் கொள்ளவேண்டும். மன தைரியத்துடனும் வலிமையுடனும் நாம் வாழவேண்டும். சகல இன மக்களுக்கிடையிலும் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். . எம்மிடையே புரிந்துணர்வு அவசியம். அனைவருக்கும் இடையிலான புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமையினாலேயே எமது சக வாழ்வு பூரணத்துவம் பெறும் என்றார்.

மினுவாங்கொடை தர்மராஜ விகாரையின் இந்துல் உடகந்த ஞானாநந்த தேரர் இங்கு கூறும்போது, 
சமாதானத்திற்காக நாம் ஒற்றுமைப்பட வேண்டும். ஒருவருக்கொருவர் வெறுப்புணர்வுடன் பார்க்கக் கூடாது. சந்தேகத்துடனும் யாரையும் அணுகக்கூடாது. நாம் எல்லோரும் இலங்கையர்கள். இந்த உணர்வுடன் வாழ்ந்தால், வன்முறைகள் எதுவும் நடைபெற இங்கு இடமில்லை. இதை நாம் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். மினுவாங்கொடையில் சிங்களவர்கள் உட்பட அனைத்து இன சமூகத்தினரும் சமாதானமாகவும் ஒற்றுமையுடனுமே வாழ்ந்து வருகின்றோம் என்றார்.

   எம்.எஸ்.எம். கபீர் ஹாஜி இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது,
தெளஹீத் என்ற பெயரில் இயங்கும் இயக்கங்களினால் முஸ்லிம் சமூகமாகிய நாம்  பல வருடங்களாக பல்வேறு இன்னல்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றோம். இவர்களினால் முஸ்லிம் மக்களுக்கு அதிக ஈனத்தனங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முஸ்லிம் சமூகம்,  தமது பரிபூரண ஒத்துழைப்பை வழங்குவோம். 

இனவாதிகளைதும், பயங்கரவாதிகளையும் நாம் வளரவிடக்கூடாது. தெளஹீத் என்ற பெயரில் இயங்கும் இயக்கங்கள் ஒட்டுமொத்தமாக தடை செய்யப்படல் வேண்டும். இதுபோன்ற பல குழுக்கள் இன்னும்  உள்ளன. புலனாய்வுத்துறை இவர்களைப் பின் தொடரவேண்டும். 
அரசியல்வாதிகளும் அவர்களை போஷிக்கவோ அல்லது அவர்கள் பக்கம் நெருங்கிவிடவோ கூடாது. ஜம் இய்யத்துல் உலமாவோடு எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். ஜம் இய்யா என்ன கூறுகிறதோ, அதன்படியே நடக்க வேண்டும். நாம் எப்போதும் பொறுமையுடன் இருந்துகொள்ள வேண்டும் என்றார். 

   நீர்கொழும்பு தலாதுவ கருமாரி அம்மன் ஆலய பூஜகர் சிவ ஸ்ரீ குமார் சர்மா குருக்கள், மினுவாங்கொடை கோப்பிவத்தை ஜும்ஆப் பள்ளிவாசல் இமாம் துவான் முராத் ஆகியோரும் இங்கு உரை நிகழ்த்தினர்.






( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.