கடற்றொழிலுக்காக கடலுக்கு செல்லும் மீன்பிடி படகுகள் அனைத்தையும் காப்புறுதி செய்யப்படுவதை கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி தெரிவித்தார். 

அவ்வாறு இல்லாத படகுகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்க வேண்டாம் என்று  கடற்றொழில் திணைக்களத்திற்கு உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

அம்பலந்தொட்டை (ஹம்பாந்தோட்டை மாவட்டம்) குருபொகுண மீனவ சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற (28) கலந்துரையாடலில் வைத்து இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள பணிப்பாளர் நிஹால் பாலித, உதவிப் பணிப்பாளர், ஹம்பாந்தோட்டை முகாமைத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. 
இதன் போது மீன்பிடி தொழில்நுட்பவியலாளர்கள் கூறியது, கடந்த 26 ஆம் திகதி எரிந்து சாம்பலான படகுகளுக்கு காப்புறுதித் தொகை பெறுவதில் பாரிய சிக்கல் உள்ளமையாகும்.
இதன் போது இராஜாங்க அமைச்சருக்கு தெரிய வந்தது, பல படகுகள் எந்த விதத்திலும் காப்புறுதி செய்யப்பட்டிருக்கவில்லை என்ற பிரச்சினை ஆகும். இதனால் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள், குடும்ப நிலைமைகள் அங்கு பெண் மீனவர்களால் விளக்கப்பட்டது. 
நிலத்திலும், நீரிலும் பகுதியளவில் சேதமடையும் படகுகளுக்கு எந்தவொரு காப்புறுதித் தொகையும் கிடைப்பதில்லை என்றும் அங்கு கூறப்பட்டது. இதன் போது முழுமையாக சேதமடைந்த படகுகளுக்கே காப்புறுதித் தொகை வழங்கப்படுவதை அதே போன்று பகுதியளவில் சேதமடைந்த படகுகளுக்கும் காப்புறுதித் தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடற்றொழில் திணைக்களத்திற்கு இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி பணிப்புரை வழங்கினார்.
கடந்த 26 ஆம் திகதி அதிகாலை ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள கலமடியாவ மீன்பிடித் துறைமுகத்தில் இருந்த 27 படகுகள் தீப்பிடித்து எரிந்தமை குறிப்பிடத்தக்கது.














ரிஹ்மி ஹக்கீம்,
விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில், நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சு.


உயிர்த்த ஞாயிறு தொடர் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் மினுவாங்கொட, குளியாப்பிட்டி, ஹெட்டிபொல உள்ளிட்ட பல பிரதேசங்களில் ஏற்பட்ட அமைதியற்ற நிலை காரணமாக சேதமடைந்த சொத்துக்களுக்காக இழப்பீடு வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

முழுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் வரையில் பெரும்பாலான வர்த்தகங்களை ஆரம்பிப்பதற்காக முற்பணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அலுவலகத்தின் பணிப்பாளர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.. 

முழுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்கும் அரசாங்க அலுவலகத்தின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வழங்கப்படும் இழப்பீடுகள் தொடர்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிய முடியும். 

0112-57-58-03, 0112-57-58-13, 0112-57-58-26 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அலுவலகத்தின் பணிப்பாளர் ஆனந்த விஜயபாலவிடம் விபரங்களைக் கேட்டறிய முடியும் என்றும் தெரிவித்தார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)



வைத்தியர் ஷாபி அவர்களை கைது செய்து தடுத்து வைப்பதற்கான கட்டளையை Detension Order (D.O) நீதிமன்றம் மூலம் பெற்று மூன்று மாத தடுப்புக் காவலில் வைத்து  விசாரனை முன்னெடுக்கப்பட்டது.

நேற்றைய தினம் அவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வந்தும் அவர் சிறையில் இருப்பதற்கான காரணம் இந்த D.O. தடுத்து வைப்பதற்கான கட்டளை தான்.

தற்போது வைத்தியர் ஷாபி அவர்களை சிறையில் இருந்து விடுவிப்பதாக இருந்தால் பாதுகாப்புச் செயலாளரின் எழுத்து மூல பரிந்துரையை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் இல்லையென்றால் தடுத்து வைப்பதற்காக பெறப்பட்ட கால எல்லை முடிவடைய வேண்டும்.

தடுப்புக் காவலின் காலம் முடிவடைய முன்பு குற்றச்சாட்டுகள் போலியானவை என நிரூபிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்புச் செயலாளரின் எழுத்து மூல பரிந்துரையை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கும் வரை அவரை விடுதலை செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.

விரைவில் சிறையில் இருந்து வெளியேற வல்ல நாயன் அருள் புரிய வேண்டும்.

திக்ருல்லாஹ் ஜிப்ரி,
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்,
குருணாகல்.


யுத்தத்துக்கு பயந்து நாட்டை விட்டு தப்பிச் சென்றவரே கோதாபாய ராஜபக்ஷ என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு அதனடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளரொருவர் களமிறக்கப்படுவாராக இருந்தால், அதற்கு தகுதியானவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா மாத்திரமே என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, யுத்தத்திற்கு பயந்து நாட்டை விட்டு அமெரிக்காவுக்கு ஓடிய கோத்தாபயவை விட சரத் பொன்சேகா மேலானவர் என்றும் குறிப்பிட்டார். 
நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புபடுத்தி நோக்கும் போது அவரே சிறந்த வேட்பாளராவார். எனினும் கடந்த தேர்தலில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்து விட்டார் என்ற கேள்வி எழத் தோன்றும். அவ்வாறு நோக்கினால் சி.டபில்யு.டபில்யு.கன்கங்கரா இலவச கல்வியை அறிமுகப்படுத்தி, இலவச கல்வியின் தந்தையாக தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். எனவே அதனைப் பெரிதுபடுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். 
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில், பிரச்சினை காணப்பட்ட போதிலும் கோதாபாய ராஜபக்ஷவை அந்தப் பொறுப்பில் அமர்த்த முடியாது எனவும் நாட்டின் பாதுகாப்பு குறித்து சரியான தீர்மானங்களை எடுக்கக்கூடிய ஆற்றல் சரத் பொன்சேகாவிடம் உண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் பெண் ஒருவரின் முந்தானையால் அவரது கழுத்து கட்டப்பட்டு பாதையில் இழுத்துச் செல்லப்பட்ட அகோரம்
- மினுவாங்கொடையில் சம்பவம்

( மினுவாங்கொடை நிருபர் )

   முச்சக்கர வண்டியில் வந்த பேரினவாதிகள் இருவர், அப்பாதையால் நடந்து சென்ற முஸ்லிம் பெண்மணி ஒருவரின் கழுத்தில், அவருடைய  முந்தானையால் கட்டிப் பாதையில் இழுத்துச் சென்ற சம்பவம் ஒன்று, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.       இச்சம்பவம், கடந்த (24) திங்கட்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில், மினுவாங்கொடை - கல்லொழுவை கிழக்கு கிராம சேவகர் முஸ்லிம் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
   இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, 
   கொழும்பு -  அப்பல்வத்தையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணி,  கல்லொழுவையில் வசிக்கும் அவரது மகள் வீட்டிலிருந்து (24) திங்கட்கிழமை  காலை 5 மணியளவில்,  கொழும்புக்குச்  செல்வதற்காக நடந்து சென்றுகொண்டிருந்த வேளை,  மினுவாங்கொடை கொழும்பு  வீதி திசையிலிருந்து திரும்பி  கல்லொழுவைச் சந்தியால் வந்த ஒரு முச்சக்கர வண்டி,  அப்பெண்மணி அருகிலே மிகவும் மெதுவாக நெருங்கிய மறு கணமே முன்னே சென்று மீண்டும் பின்னோக்கி வந்துள்ளது. அந்த முச்சக்கர வண்டியில்  இருந்து சிங்களக்  காடையர்கள் இருவர், அந்தப் பெண்ணுடைய   முந்தானையை இழுத்துப்பறித்து அந்தப் பெண்ணின்  கழுத்தி்ல் கட்டிவிட்டு அவரைக் கீழே தரையிலே தள்ளிப் போட்டு அப்படியே முச்சக்கர வண்டியை  ஓட்டிக் காெண்டு சற்றுத் தூரம் வரை அப்பெண் 
கதறிய நிலையில், அவரது 
உடல் தரையிலே உரசியபடி இழுத்துச் சென்றுள்ளனர். 
   அத்தோடு, அந்தப் பெண்  முந்தானையை இழுத்தெறிந்து,  எழுந்து நின்று கூக்குரலிடவே,  அந்தக் காடையர்கள் இருவரும், இவரை விட்டு விட்டு அங்கிருந்து  விரைவாகத் தப்பிச் சென்றுள்ளனர்.  
    அப்போது அவ்விடத்துக்கு வந்த இன்னுமோர் முச்சக்கர வண்டி  அவரருகே நிறுத்தப்பட்டு,  "என்ன நடந்தது" 
என்று வினவ, அப்பெண் நடந்தவற்றைச்  சொல்லி அழ, வந்தவர்கள் அவரை மீண்டும்  மகள் வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளனர். இப்பெண், தற்போது மினுவாங்கொடை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
   இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில், மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் இதனுடன் தொடர்புடையவர்களைத் தேடி வலை விரித்துள்ளனர்.
அத்துடன், இச்சம்பவம் இடம்பெற்ற பகுதியிலுள்ள சீ.சீ.ரி.வி. கமெராக்களின் பதிவுகளின் உதவியுடன் விசாரணை  நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதாகவும், இதன் மூலம் தாக்குதல் நடத்தியவர்களை விரைவில் அடையாளம் கண்டுகொள்ள  முடியும் என்றும், மினுவாங்கொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

( ஐ. ஏ. காதிர் கான் )

இலங்கை ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படுமென, போக்குவரத்து, சிவில் விமானசேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் கை​யொப்பத்துடன் குறித்த வர்த்தமானி பத்திரம் இன்று வெளியிடப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவசரகால சட்டத்தின் கீழ்  பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க முடியாதென்றும் அதையும் மீறி பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுமானால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து, சிவில் விமானசேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்


முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (26) இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் (OIC) அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதுவர்களை சந்தித்து அன்மைய சம்பவங்களின் பின்புலம் பற்றி விளக்கமளிக்கவுள்ளனர்.


(Shafeek Hussain)



#human_rights_commission

========≠=========≠=========≠========

இலங்கை முஸ்லிம்களுக்காக நாங்களும் குரல் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏன் வந்ததோ தெரியவில்லை.

உலகில் எல்லாப் பகுதிகளிலும் முஸ்லிம்கள் எண்ணிலடங்கா துன்பங்களையும்,உயிர்களையும்,உறவுகளையும்,உடமைகளையும் இழந்து வருகின்றனர்.

இந்த விடயங்களை கவனிக்காமல் திடீர் என #இலங்கை_முஸ்லிம்கள் தாக்கப் படுவது நாம் தாக்கப் படுவது போல் என்ற கோசம் எழுந்துள்ளது.

இஸ்ரேலின் அடக்கு முறையும், அட்டூலியங்களும் எல்லை மீறி முஸ்லிம்களை சிறுவர்கள் பெரியவர்கள் பாராமல் கணும் இடங்களில் இறக்கமற்ற கல்நெஞ்சம் கொண்டவர்கள் கொத்து கொத்தாக கொலை செய்கின்றனர்.

இதை கண்டிக்காத ஐ.நா.ம.உ.இன்று இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்துள்ளது.

இது போலியான தா? அல்லது இப்போதாவது வாய் திறந்தார்களே என்று திருப்தி கொள்வதா? தெரிய வில்லை.

ஐ.நா.மனித உரிமை என்று ஒன்று உண்டு என்பதை உலக மக்களுக்கு நினைவூட்டும் விதமாக ஒரு அறிக்கை!

ஐ.நா.ம.உ.  இலங்கை முஸ்லிகலுக்காக குரல் கொடுத்தது எமக்கு திருப்தியளிக்கிறது.

இருந்தாலும் எல்லாம் முடிந்த பின் அறிக்கை விடுவது தான் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

#உலகில்_முஸ்லிம்கள்_மட்டுமல்ல யாருடைய உயிராயினும்,உடமையாயினும்,மதமாயினும் அது மதிக்கப்பட வேண்டுமே தவிர மிதிக்கப்படவோ அல்லது அழிக்கப்படவோ கூடாது என்பது உலக முஸ்லிம்களின் வேண்டுகோளும், அவர்களது மதத்தின் போதனையும் ஆகும்.

இப்படி அநியாயங்கள் நடைபெறும் போதெல்லாம் ஐ.நா.ம.உரிமைகள் அமைப்பு குரல் கொடுக்குமேயானால் நிச்சயமாக அதிகரிக்கும் இன படுகொலைகள் குறைந்து இன,மத, நிற ஒற்றுமை உலகில் மேலோங்கி மக்கள் மனிதநேய மக்களாக வாழ்வார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

#இலங்கைக்காக_நீங்கள் விட்ட அறிக்கைக்கு #இலங்கை_முஸ்லிம்கள்_சார்பாக_நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களது அறிக்கை அறிக்கையோடு நின்று விடாமல் அது செயலுக்கும் நடைமுறைக்கும் வர வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தையும், நிபந்தனையையும் இட வேண்டும் என இலங்கை வாழ் முஸ்லிம்கள் வேண்டுகோளாக முன்வைக்கிறோம்.

மனிதன் வாழ்வது நிரந்தரம் இல்லாவிட்டாலும் அவன் நிம்மதியாக வாழவே வேண்டும் என ஆசைப் படுகிறான்.

✒முபாரிஸ் றஷீதி.......


இனவாதத்தை கக்கும் மகிந்த அணியின் - முஸ்லிம்களின் வர்த்தக பொருளாதார அம்சங்களை முடக்கும்  மற்றுமொரு நடவடிக்கை.

முஸ்லிம்கள் பொதுச்சந்தையில் வியாபாரம் செய்ய விடாமல் தடுப்பதற்கான வெண்ணப்புவ பிரதேச சபையின் உத்தியோகபூர்வ அறிவித்தல்.

நான் நினைக்கிறேன் இதுதான் முதலாவது உத்தியோகபூர்வ ஆவணமும் கூட.

திரை மறைவில் இடம்பெற்ற விடயங்களை இப்போது பகிரங்கமாகவே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

வடமேல் மாகாண ஆளுனரின் கவனத்திற்கு இது உடனடியாக கொண்டுசெல்லப்படவுள்ளது.

சட்டரீதியாக இதனை முகங்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை புத்தள முஸ்லிம் சட்டத்தரணிகள் மேற்கொள்ளவுள்ளனர்.

(ஏ.எல்.தவம்)


கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சாபி சிஹாப்தீன் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

தான் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோமானது என்று உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

வைத்தியர் சாபியின் சட்டத்தரணிகளால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறியுள்ளார். 

சொத்து விபரம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சாபி சிஹாப்தீன் கைது செய்யப்பட்டார்.

(AdaDerana)


வென்னப்புவ பிரதேச சபையினால் நடாத்தப்படும் தங்கொடுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான கடிதம் ஒன்று வென்னப்புவ பிரதேச சபை தலைவர் சுசந்த பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதேசத்தில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களை அடுத்து அப்பிரதேசங்களில் இருக்கும் முஸ்லிம் மக்கள் பொது சந்தை பகுதிக்கு வருவதற்கு ஏனைய மக்களும் வியாபார சமூகமும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக பிரதேச சபை தலைவர் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி குறித்த வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(டேய்லி சிலோன்)


கொரியாவில் சென்ற 23 ஆம் திகதி ஆரம்பமான பல்செயற்றிறன் கொண்ட (Multifunctional) மீன்பிடித் துறைமுகங்களை 
அமைப்பது தொடர்பான விஷேட செயலமர்வில், இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி உள்ளிட்ட குழு பங்குபற்றியது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்குபற்றும் இந்நிகழ்வு 23 - 29 வரை கொரியாவின் சியோல் மற்றும் பூஸான் நகரங்களில் நடைபெறும். 

இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி அவர்கள் 2016 கொரிய விஜயத்தின் போது இலங்கையின் முதலாவது பல்செயற்றிறன் கொண்ட மீன்பிடித் துறைமுகத்தை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தில் கைச்சாத்திடும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த பல்செயற்றிறன் கொண்ட மீன்பிடித் துறைமுக எண்ணக்கரு உலகிற்கே புதியதாகும்.

இந்த எண்ணக்கருவை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவர் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி அவர்களாவர்.

மேற்படி செயலமர்வில் கலந்து கொள்ள இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சியுடன், கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் விக்ரமசிங்க, இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தினேஷ் குமார, இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனத்தின் பொறியியல் முகாமையாளர் நிசாந்த விக்ரமசூரிய உள்ளிட்டவர்கள் கொரியா சென்றுள்ளனர். 

ரிஹ்மி ஹக்கீம்,
விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில், நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சு.


பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையின் பின்னணியில் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கி வரும் சவால்களின் பின்னணியில் ஐந்து பிரதேச செயலகங்களில் பணியாற்றும் பொது சேவை ஊழியர்கள் உள்ளடங்கலாக 157 முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புத்தளம் நகரபிதா கே.ஏ பாயிஸ் சோனகர்.கொம் நேரலையில் தகவல் வெளியிட்டார்.

புத்தளம், கல்பிட்டி, வனாத்தவில்லு, கருவலகஸ்வேவ மற்றும் முந்தல் பிரதேச செயலகங்களின் ஊழியர்கள் ஒன்றிணைந்தே இவ்வாறு முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுத் தாக்கல் செய்வதற்கான பின்னணியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்றைய (24) நேரலையில் கலந்து கொண்டு, புத்தளம் நகரபிரதா கே.ஏ. பாயிஸ் தெரிவித்த கருத்துக்களை கீழ்க்காணும் காணொளியில் காணலாம்.

LINK ; https://www.facebook.com/ceylonmoors/videos/342370219778505/

(Sonakar.com)


பௌத்தத்தின் பாதுகாவலர்களிடமிருந்து பௌத்தம் பாதுகாக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ‘நாடாளுமன்றம், நீதிமன்றம், சட்ட மா அதிபர் திணைக்களம் ஆகியவற்றில் பௌத்தம் தொடர்பாக சிந்திப்பவர்கள், பௌத்த மதத்தின் உயரிய சிந்தனைகள் கோட்பாடுகளை, பௌத்தத்தை பாதுகாப்பதாக சொல்லிக்கொள்பவர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இன்னும் இரண்டு மாத காலம் அளவில் நாட்டில் இடம்பெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலுக்கு மக்கள் எதிர்பார்த்த அளவில் ஐக்கிய தேசிய கட்சி நாட்டில் அபிவிருத்திகளை முன்னெடுத்து இருப்பதாகவும் மக்கள் அதனை ஏற்று கொண்டுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷான் வித்தானகே தெரிவித்துள்ளார். 

நேற்று நாவலப்பிட்டிய நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று மொட்டு கட்சியினராக இருந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக இருந்தாலும் அரசியல் பலத்தை வைத்து கொண்டு எதிர் காலத்தில் இந்த நாட்டினை எவ்வாறு கொண்டு செல்லவேண்டும் என்பதை பற்றி நினைத்து பார்க்கவேண்டும். எமது நாட்டினை நல்லதொரு நிலமைக்கு கொண்டு செல்லவேண்டும் என எண்ணித்தான் ஐக்கிய தேசிய கட்சிய நாட்டில் இன்று பலம்வாய்ந்த கட்சியாக காணப்படுகின்றது. 

எமது நாட்டின் அபிவிருத்திக்கு இன்று வெளிநாடுகளில் இருந்தும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். ஆனால் இன்று இந்த நாட்டு மக்களுக்கு எந்த ஒரு அரசியல் கட்சிகளின் மீதும் நம்பிக்கையில்லாமல் போய்விட்டது. அதனால் ஐக்கிய தேசிய கட்சி இன்று தனிச்சையான ஒரு ஆட்சியினை முன்னெடுக்க தயாராகியுள்ளது. 

எமது நாட்டு மக்களுக்கு சிறந்த ஒரு தலைவரை தேர்தெடுக்கும் நோக்கில் ஜே.ஆர் ஜயவர்தனவுடைய வரலாற்றை போல் ரணசிங்க பிரமேதாசவின் வரலாற்றை போல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் ஊடாக பாரிய அபிவிருத்தியினை இந்த நாட்டு மக்கள் தற்பொழுது எதிர்பார்த்த கொண்டிருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். 

(AdaDerana)



முஸ்லிம்களின் ஆதரவு இல்லாததனாலேயே தமிழர்களின் விடுதலைப் போராட்டம் வெற்றியளிக்கவில்லை என்பது எல்லா தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும்.

தொடர்ந்து முஸ்லிம் மக்களை பகைத்துக்கொண்டால் எதிர்காலத்தில் தமிழர்களுக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வுத்திட்டமும் சாத்தியமற்ற ஒன்றாகிவிடும் என்பதனை பொறுப்புள்ள தமிழர்களின் பிரதிநிதி என்றவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நன்கறிவர். 

முஸ்லிம் தரப்பினர் தீர்வு திட்டத்தினை எதிர்த்தால் அதனை காரணம் கூறி சிங்கள தரப்பினர் சர்வதேச சமூகத்திடம் முஸ்லிம்களுக்காக முதலைக்கண்ணீர் வடித்து தீர்வுத்திட்டத்தை கைவிட்டு விடுவார்கள். 

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்துவதற்காகத்தான் தமிழர்கள் இவ்வளவு காலமும் ஆயுதப் போராட்டம் நடாத்தவில்லை. அதனாலேயே முஸ்லிம் தரப்பினரை அரவணைத்தவாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மிகவும் கவனமாக அரசியல் நகர்வுகளை மேற்கொள்கின்றார்கள்.

ஆனால் இன்று கல்முனையில் அதற்கு முற்றிலும் மாற்றமான சூழ்நிலையை காண்கிறோம். அதாவது தமிழ் தலைமைகளுடன் கலந்தாலோசிக்காமல் உள்ளூர் பிரமுகர்கள் சிலருடன் பௌத்த பிக்கு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

இந்த பிக்கு ஏன் திடீரென இந்த முடிவை எடுத்தார் ? இவரது நோக்கம் என்ன ? இவரை இயக்குபவர்கள் யார் ? தமிழர்களின் பிரதிநிதிகளாக நாங்கள் இருக்கும்போது மூன்றாம் நபரான பௌத்த பிக்குவுக்கு இதில் என்ன தேவை உள்ளது ? என்ற கேள்விகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு பதில் தெரியாமலில்லை. 

கடந்தகால கசப்புணர்வுகளை மறந்து தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையில் இருக்கின்ற இடைவெளிகளை அகற்றி இரண்டு சிறுபான்மை சமூகங்களும் பரஸ்பரம் விட்டுக்கொடுப்புடன் செயல்படுவதற்கு தமிழ் - முஸ்லிம் தலைவர்கள் முயற்சிக்கின்ற காலகட்டத்தில்,

மீண்டும் இரண்டு சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் நாடுதழுவிய ரீதியில் விரிசல்களை உண்டுபன்னி அதில் குளிர்காய்ந்துகொண்டு தென்னிலங்கை இனவாதிகளின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற எந்தவொரு பொறுப்புள்ள சமூகத் தலைமையும் அனுமதிக்க மாட்டார்கள். 

தமிழ் பேசும் சிறுபான்மை மக்களாகிய எங்களுக்கிடையில் உள்ள பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையில் எங்கே முரண்பாடுகள் உள்ளது என்று ஆராய்ந்து, அந்த இடத்தில் தென்னிலங்கை இனவாத சக்திகள் மூக்கை நுழைத்து தமிழர்களுக்கு உதவி செய்வதுபோன்று நடிக்கின்றார்கள்.

இதன் மூலம் தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் உருவாக வேண்டும் என்று எதிர்பார்கின்றார்கள்.

தமிழ் மக்கள்மீது இவர்களுக்கு அக்கறை இருப்பது உண்மையென்றால், தீர்வு வழங்கா விட்டாலும் பருவாயில்லை. பல வருடங்களாக சிறையில் வாடுகின்ற தமிழ் கைதிகளை விடுவிப்பதற்காக போராட்டம் நடத்தட்டும். அதன்பின்பு இவர்களை நம்புவோம். 

ஆனால் தமிழ் மக்கள் மீது பாசம் இருப்பதுபோல் காண்பிப்பது வெறும் நடிப்பு என்பது மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கு எதிராக வஞ்சகம் தீர்பதற்கு தமிழர்களை பயன்படுத்துகின்றார்கள் என்பதனை த.தே. கூட்டமைப்பினர் நன்கறிவர். 

விடுதலை போராட்டத்தை காட்டிக்கொடுத்த கருணா போன்ற சில சக்திகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை அழிப்பதற்காக இப்படியான சந்தர்ப்பங்களை வாய்ப்பாக பயன்படுத்துகிறார்கள். இவர்களது சூழ்ச்சிகளை புரிந்துகொள்ளாத சில அப்பாவிகள் இதனை உண்மையென்று நம்புவதுதான் கவலையான விடயமாகும்.

எனவே தமிழ் – முஸ்லிம் மக்களின் அரசியல் தலைமைகள் பேச்சுவார்த்தை நடாத்தி அதில் உடன்பாடு காணப்படுவதுடன், எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு கல்முனை வடக்கு பிரதேசம் தரமுயர்த்தப்படல் வேண்டுமே தவிர, தென்னிலங்கை இனவாதிகளின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அல்ல. என்பதுதான் தமிழ் – முஸ்லிம் தலைமைகளின் எதிர்பார்ப்பாகும். 

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது


தழுவப் போகும் நிர்வாணம்....
********************************
புர்கா,நிகாப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றார்கள்.சரி பெண் வேடமிட்டு ஆண் போகலாம் என்ற நியாயத்தில் விட்டுக் கொடுத்தாயிற்று.அதற்காக குட்டக் குட்ட குனிய வேண்டுமென்பது போல தொடர்ந்து துகிலுரியப் படுகிறோம்.

அரச பணியாளர்களுக்கான அபாயா தடை என்பது  சங்கிலித் தொடர் தான்.அத்தோடு நிற்கப் போவதில்லை.அந்த தொற்று நோய் முஸ்லீம் பாடசாலைகளின் காற்சட்டை,பர்தா வரை தாக்கி அழிக்கத் தான் போகிறது.

அரச துறையில் பணிபுரியும் அத்தனை பெண்களும் சாரி அல்லது ஒசரி அணிய வேண்டுமென்ற சுற்று நிரூபம் திருத்தப்படும் என்று ஒரு பக்கம் பூச்சாண்டி காட்டப்பட்டுக் கொண்டிருக்க,மறு பக்கம் கஞ்சி ஆறவிடப்பட்டுள்ளது,அவ்வளவே.

பிரதமர் அலுவலக கடிதங்களும் நவமணி,தினமின பத்திரிகைகளும் சுற்று நிரூபமாகப் போவதில்லை.நீர் வற்றினால்  மீன் பிடிக்கலாம் என காத்திருப்பது போலிருக்கிறது.

எதிர்வினையாற்ற தாமதிக்கும் ஒவ்வொரு கனமும் தவணை முறையில் நிர்வாணப்படுத்தப் படப் போகிறோம்.

ஹிஜாபிற்காக உயிர்துறந்த ஆளுமைகளை கொண்டாடிய எந்த பெண்ணும் நீதிமன்ற படியேற தயாரில்லை என்பது அவர்கள் கோழைகள் மட்டுமல்ல,சுயநலவாதிகள் என்பதையும் சத்தமாக சொல்கிறது.

யாரோ நெருப்பு மூட்ட நாம் குளிர் காயலாம் என காத்திருக்கிறோம்.
ஆனால் எங்கோ ஊற்றப்படும் நீரினால் எங்கள் வாசலிலுள்ள பூச்செடியில் பூ பூக்காது.

நானும் அரச துறையில் பணியாற்றவில்லையே என்று முதல்முறையாக  கைசேதப் படுகிறேன்.
எங்கே எங்கள் முஸ்லீம் பெண் ஆளுமைகள்?
குரலற்றவர்க்காக கோஷமிட்டவர்கள் எங்கே?

எம்மிடையே உள்ள பெரும்பாலான அரச துறை பணியாளர்கள் கிழக்கிலோ ,முஸ்லீம்களால் நிர்வகிக்கப்படும் அலுவலகங்களிலோ தான் பணியாற்றுகிறார்கள்.அவர்களுக்கு எந்த நெருக்குவாரமும் இதுவரை நடந்திருக்காது.
அதனால் அவர்கள் குரலெழுப்பப் போவதில்லை.

ஆனால் மற்றவருடன் கலந்து வாழும் ஒரு சிலரின் ஓசையை விட அவர்களது ஆரவாரமே சாதிக்க வல்லது.

உடலின் ஏதோ அங்கம் தாக்கப்பட இன்னொரு அங்கம் துடிக்கவில்லை என்றால் சமூகமாய் நாம் வெட்கப்பட வேண்டும்.

பஸ்ஸில் யாரோ ஒரு முஸ்லீம் பெண் மேலுள்ள கம்பியை எட்டிப் பிடிக்கும் போது அமர்ந்திருக்கும்  யாரோ ஒருவரின் கண்கள் அவளை  மேய்ந்ததற்கு நாம் எல்லோருமே பதில் சொல்லியாக வேண்டும்.

இன்று தாதியர்,காவல் துறையினர் போல ஏன் அரச  துறையில் பணிபுரியும் பெண்களும் பொதுவான ஆடை அணிய முடியாது? என தர்க்க நியாயம் பேசுபவர்கள், நாளை சீருடையாக ஒரு t-shirt உம் tight skirt ம் பிரகடணப்படுத்தப் படும் போதும் ஏதோ நியாயம் பேசத் தான் போகிறார்கள்.அணிய வேண்டியது நீங்கள் தான்..

✒ஆயிஷா அபூ பக்ர்



வைத்தியசாலைகளுக்கு இலவசமாக உணவு வழங்கும் முஸ்லிம்கள் பற்றி, கொடிய விஷத்தை கக்குகிறார் காமினி லொக்குகே!

கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில, புற்றுநோய் வைத்தியசாலை போன்ற வைத்தியசாலைகளுக்கு வரும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் முஸ்லிம் அமைப்பு தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் கோருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

எந்த அடிப்படையில் இந்த அமைப்பு நான்கு வருடங்களுக்கு மேலாக மக்களுக்கு இலவசமாக உணவை வழங்கி வருகிறது என்பது பிரச்சினைக்குரியது எனவும் அவர் இதனை கூறியுள்ளார்.

எந்த நோக்கத்தில் இந்த அமைப் இலவசமாக உணவை வழங்கி வருகிறது என்பது சந்தேகத்திற்குரியது. உணவு மூலம் பெண்கள் கர்ப்பம் தரிப்பது தடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகமும் உள்ளது. இவர்களுக்கு இந்தளவுக்கு இருக்கும் அக்கறை என்ன?. இதனை சுகாதார அதிகரிகள் உடனடியாக தேடிப்பார்க்க வேண்டும்.

இந்த அமைப்பினர் அரசாங்க வைத்தியசாலைக்கு வரும் பௌத்த மக்களிடம் சென்று துண்டு சீட்டு ஒன்றை வழங்குகின்றனர். விசேடமாக பெண்களுக்கே இந்த துண்டு சீட்டு வழங்கப்படுகிறது. சிகிச்சை பெற்ற பின்னர் வந்து உணவு சாப்பிடுமாறு கூறுகின்றனர். கோழி இறைச்சி, காய்கறி, பருப்பு உட்பட உணவுகளை வழங்குகின்றனர்.

இது குறித்து தேடிப்பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.


கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் போராட்டம்
==========================
வை எல் எஸ் ஹமீட்

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் நடைபெற்றுவருவது நாம் அறிந்ததே! இந்தக் கோரிக்கையை நியாயப்படுத்துவதற்காக கூறப்படுகின்ற பிரதான காரணங்கள், இவ்வுப செயலகம் கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கி வருகின்றது; அதைத் தரமுயர்த்திக் கேட்பதில் என்ன தவறு என்பதும் காலப்போக்கில் நிர்வாகங்கள் பரவலாக்கப்படுவது இயல்பானதே! என்பதுமாகும்.

இங்கு அவர்களால் எழுப்பப்படுகின்ற கேள்வி இந்த நியாயமான கோரிக்கையை முஸ்லிம்கள் ஏன் எதிர்க்க வேண்டும்; என்பதாகும். இதே கருத்தை அமைச்சர் மனோ கணேசன் உட்பட பலர் தெரிவிக்கின்றனர். இங்குதான் அமைச்சர் மனோ உட்பட பலரும் பிரச்சினையை புரிந்துகொள்ளாமல் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.

தமிழர்கட்கு ஒரு பிரதேச செயலகமல்ல, ஓராயிரம் செயலகம் வழங்கினாலும் முஸ்லிம்கள் எதிர்க்கப் போவதில்லை. அன்று நிந்தவூரில் இருந்து இனவாத ரீதியில் காரைதீவு பிரிந்தபோது அதற்குள் சுமார் நாற்பது வீதம் முஸ்லிம்களைக்கொண்ட மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி முஸ்லிம் கிராமங்களை முஸ்லிம்களைக் கேட்காமல் வரதராஜபெருமாள் காலத்தில் இணைத்தபோதும்
முஸ்லிம்கள் இன்றுவரை ஆட்சேபணை தெரிவிக்கவில்லை.

அக்கரைப்பற்றில் இருந்து ஆலையடிவேம்பை அன்று ரங்கநாயகி பத்மநாதன் பிரித்தபோதும் யாரும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை.

அண்மையில் நாற்பது வீதத்திற்குமேலான முஸ்லிம்களையும் இணைத்து சம்மாந்துறையில் இருந்து நாவிதன்வெளியைப் பிரித்து தனி செயலகம் அமைத்தபோதும் யாரும் எதிர்க்கவில்லை. ஏனெனில் முஸ்லிம்கள் தமிழர்களுடன் இணைந்து வாழவே கூடாது; என ஒருபோதும் நினைக்கவில்லை. அப்படிப்பட்ட முஸ்லிம்கள் கல்முனைப் பிரிப்பை மட்டும் ஏன் எதிர்க்கின்றார்கள்.

அமைச்சர் மனோ போன்றவர்கள் சற்று ஆழமாக சிந்தித்தால் இவ்வாறெல்லாம் தமிழர்களுடன் விட்டுக்கொடுப்புகளைச்செய்து இணைந்துவாழ விரும்பும் முஸ்லிம்கள் கல்முனையில் எதிர்க்கின்றார்கள்; என்றால் அதற்குள் ஓர் ஆழமான காரணம் இருக்கும்; அது நிச்சயமாக இனவாதமாக இருக்க முடியாது; மாறாக நியாமானதாகவே இருக்கும்; என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

அவ்வாறு சிந்தித்திருந்தால் இவ்வாறு அவசரப்பட்டு அறிக்கைகளை விடமுன் அந்த நியாயமான, வலுவான காரணங்களை தேடியிருக்கலாம்.

என்ன அந்தக்காரணம்
—————————-
இலங்கையின் அனைத்து பிரதான நகரங்களிலும் முஸ்லிம்கள் வர்த்தகம் செய்கிறார்கள்; ஆனாலும் அவைகள் முஸ்லிம்களின் நகரம் என்று சொல்லமுடியாது; ஏனெனில் அவர்கள் அங்கெல்லாம் பெரும்பான்மை இல்லை. இதற்கு விதிவிலக்காக இருப்பது கல்முனை நகரம் மாத்திரம்தான். இங்கு 90% வர்த்தக நிலையங்கள் முஸ்லிம்களுக்குரியதாகும்.

இது மிக நீண்டகால வரலாற்றைக்கொண்ட ஒரு நகரமாகும். ஒரு காலத்தில் வட கிழக்கிலேயே அதிகூடிய வருவானமாத்தைப்பெற்ற உள்ளூராட்சி சபையாக கல்முனைப் பட்டினசபை இருந்ததாக கூறப்படுகிறது. இன்றும் நகை வியாபாரத்தில் கொழும்பு செட்டிதெருவுக்கு அடுத்ததாக இருப்பது கல்முனை என்றும் கூறப்படுகிறது. கல்முனைப் பொதுச்சந்தை அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான உணவுப்பொருள் விநியோகத்தின் பிரதான மையமாக அமைந்திருக்கின்றது.

இவ்வளவு முக்கியத்துவத்தையும் கொண்ட இப்பழமைவாய்ந்த பெருநகரத்தின் பெரும்பான்மைதான் முஸ்லிம்களாகும். இது வெள்ளையர் ஆட்சிலேயே முஸ்லிம்களின் வர்த்தக ஆதிக்கத்தின்கீழ் இருந்த ஒரு வரலாற்றுத்தடமாகும். இதனால்தான்  முஸ்லிம்களின் மானசீகத் தலைநகராக இது போற்றப்படுகின்றது.

இந்தக் கல்முனையின் முக்கியத்துவத்தை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் இந்தக் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக கோரிக்கையின் ஆள்புல எல்லைக்குள் இந்தக் கல்முனை நகரமும் உள்வாங்கபடவேண்டுமென்ற தமிழரின் கோரிக்கையாகும். அதுதான் இவ்வுப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற பிரச்சினையாகும்.

இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படின் முஸ்லிம்களின் இப்பெரும் வர்த்தக மையம் மட்டுமல்ல, இன்று இருக்கின்ற பிரதான செயலகமும் கல்முனை மாநகரசபைக் கட்டிடமும்கூட அவர்களது ஆள்புல எல்லைக்குள்ளேயே வரும்.

அவ்வாறு வந்தால் இலங்கையிலேயே ஒரு பிரதேச செயலகத்தின் ஆள்புல எல்லைக்குள் இருந்து இன்னுமொரு ஆள்புல எல்லையை நிர்வகிக்கின்ற முதலாவது பிரதேச செயலகமாக தற்போதைய இந்த பிரதான செயலகம் வரும். அல்லது தெற்குநோக்கி அப்பிரதேச செயலகத்தை எங்காவது ஒரு இடத்திற்கு நகர்த்தவேண்டி வரும். இதற்கு எந்த சமூகமாவது உடன்படுமா? என்று வினவ விரும்புகின்றோம்.

உதாரணமாக, நுவரெலியவாவில் தமிழர்களின் பெரும்பான்மையான வர்த்தக நிலையங்களைக்கொண்ட ஒரு நகரத்தை இன்னுமொரு சமூகத்தின் நிர்வாக ஆள்புல எல்லைக்குள் வழங்குவதற்கு அமைச்சர் மனோகணேசன் சம்மதிப்பாரா?

தமிழர்களின் இந்தக்கோரிக்கையை நியாயப்படுத்துவதற்காக மூன்று குறிச்சிக்குள்கூட உள்ளடக்க போதாத சனத்தொகைக்கு பதினொரு குறிச்சிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். எவ்வாறு இவ்வுப பிரதேச செயலகம் முப்பது வருடங்களுக்குமுன் ஆயுதமுனையில் உருவாக்கப்பட்டதோ, அதே அடிப்படையிலேயே இப்பெரும் எண்ணிக்கையான குறிச்சிகளும் உருவாக்கப்பட்டன.

எனவே, தமிழருக்கென்று ஒரு தனியான பிரதேச செயலகம் வழங்குவதில் முஸ்லிம்களுக்கு எதுவித பிரச்சினையுமில்லை. ஆனால் அப்பிரதேச எல்லைக்குள் கல்முனை நகரம், அந்த வர்த்தக மையம் உள்வாங்கப்பட வேண்டுமென்ற தமிழரின் கோரிக்கைதான் பிரச்சினையாகும்.

சுருங்கக்கூறின் இன்று கல்முனையில் நடைபெறுகின்ற உண்ணாவிரதம் தமிழருக்கென ஒரு தனியான பிரதேச செயலகத்தைப் பெற்றுக்கொள்வதற்கானது; என்பது ஒரு பிழையான, வஞ்சகத்தனமான பிரச்சாரமாகும். ஏனெனில் செயலகம்தான் அவர்களது கோரிக்கையாயின் நாளையே அதனைப் பெற்றுக்கொள்ளலாம், கல்முனை நகரைவிடுத்து ஏனைய அவர்கள் வாழும் பகுதிகளை உள்ளடக்கியதாக.

இவர்களது இந்த வஞ்சகத்தனமான பிரச்சாரத்தின் வலையில் சிக்கியவர்களுள் ஒருவர்தான் அமைச்சர் மனோ கணேசன் அவர்களும்.

மேற்கூறப்பட்ட பெருமைகளைக்கொண்ட கல்முனை நகரத்தை அவர்களுக்குத் தாரைவார்க்கவேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கின்றார்களா? அவர்களின் அவ்வாறான ஒரு நகரத்தை அவர்கள் தாரை வார்ப்பார்களா?

எனவே, பிரதேச செயலகம் என்பது இவர்களது கோரிக்கையின் வெளித்தோற்றப்பாடு மாத்திரம்தான். இவர்களது உள்நோக்கம் முஸ்லிம்களின் பிரதான வர்த்தக மையத்தை தன் நிர்வாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதாகும். இதில் அவர்கள் வெற்றிபெற்றால் இதே ஆள்புல எல்லைக்கு உள்ளூராட்சி சபை கேட்பார்கள். அதன்பின் அவர்கள் கொடுக்கும் நெருக்குதலில் முஸ்லிம் வர்த்தகர்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து வெளியேறவேண்டிவரும்.

IPKF காலத்து அனுபவம்
——————————-
கல்முனை வர்த்தக நகரை கையகப்படுத்தும் அவர்களது திட்டம் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. எண்பதுகளின் பிற்பகுதியில் இந்திய அமைதிப்படை ( IPKF) வட கிழக்கை ஆட்கொண்டபோது கல்முனைப் பிராந்தியத்திற்குப் பொறுப்பாக ஒரு தமிழ் பிரிகேடியர் நியமிக்கப்பட்டிருந்தார்.

அவருடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட கல்முனையின் சில தமிழ்ப் பிரமுகர்கள் முஸ்லிம்களைப் பற்றிய தப்பெண்ணெத்தை அவரிடம் விதைத்தார்கள். கல்முனை வர்த்தக நகரம் தமிழருக்குரியதென்றும் அதனை முஸ்லிம்கள் அடாத்தாக பிடித்துக்கொண்டதாகவும் அவரிடமும் பொய்களையும் புனை கதைகளையும் கூறியிருந்தார்கள். அந்தக் காலப்பகுதியில் அவ்வமைதிப்படை முஸ்லிம்கள்மீது விரோதமாகவே நடந்துகொண்டார்கள்.

1989ம் ஆண்டு மறைந்த தலைவர் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைவரின் முயற்சியினால் தமிழ்- முஸ்லிம் பிரஜைகள் குழு அமைக்கப்பட்டது. தமிழ்த்தரப்பின் அவ்வாறு முஸ்லிம்களைப் போட்டுக்கொடுத்தவர்களே உள்வாங்கப்பட்டனர்.

முஸ்லிம் தரப்பின் தலைவராக மறைந்த சேகு இப்றாஹீம் மௌலவி அவர்களும் செயலாளராக நானும் நியமிக்கபட்டோம். அவ்வாறு போட்டுக்கொடுத்தவர்கள் முன்னாலேயே கல்முனையில் உள்ள கடைகள் அனைத்தும் முஸ்லிம்களின் சட்டபூர்வ சொத்துக்கள்; எவையும் அடாத்தாக பிடிக்கப்பட்டதல்ல; என்பதை ஆணித்தரமாக நிறுவுகின்ற பாக்கியத்தை இறைவன் தந்தான். அவர்களால் எங்களை மறுத்துப்பேச முடியவில்லை. அவ்வேளையில் தமிழ் பிரிகேடியர் நாடு செல்ல, வட நாட்டைச் சேர்ந்த துக்கால் என்பவர் பிரிகேடியராக வந்தார். அவருக்கும் தெளிவுபடுத்தினோம். அதன்பின் IPKF முஸ்லிம்களுடன் மிகவும் அந்நியோன்யமாக பழகத்தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து ஆயுத இயக்கங்கள் கல்முனை வர்த்தகர்களுக்கு பல தொல்லைகளை கொடுத்தார்கள். IPKF பாதுகாப்பிற்கு மத்தியிலும் கொள்ளைகளும் கப்பம் பறித்தல் போன்றவையும் இடம்பெற்றன. அச்சூழலில் IPKF ஐ மாறுவேடத்தில் கடைகளில் கொண்டுவந்து வைத்து கல்முனை பசாரைப் பாதுகாத்தோம்; அல்ஹம்துலில்லாஹ்.

இவ்வாறு கல்முனை வர்த்தகர்களை கல்முனையில் இருந்து துரத்தி கையகப்படுத்தும் முயற்சி என்றோ ஆரம்பித்துவிட்டது. அவை வெற்றயளிக்காத நிலையில்தான் நிர்வாக ரீதியில் கல்முனையை தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து தங்கள் இலக்கை அடைய ஆசைப்படுகிறார்கள்.


நேரடியான, மறைமுகமான தொல்லைகளைக் கொடுத்தால் முஸ்லிம்கள் அரைகுறை விலைகளுக்கு தங்கள் கடைகளை விற்றுவிட்டு சென்றுவிடுவார்கள்; என நினைக்கிறார்கள்.

யுத்தகாலத்தில் தோற்றுவிக்கப்பட்ட பல இனக்கலவரங்கள் மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக Round about இற்கு வடக்குப் பக்கம் பல சொத்துக்களை ஏற்கனவே முஸ்லிம்கள் தமிழருக்கு விற்றுவிட்டார்கள். இவ்வாறு நீண்டதொரு திட்டம் இதுவாகும். இதன் மையப்புள்ளி முஸ்லிம்களின் பொருளாதாரமாகும்.

வட கிழக்கில் அனைத்தும் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அவர்கள் 1/3 பங்கு இருந்தாலும் அவர்கள் ஆளும் இனமாக இருப்பதற்கு வட கிழக்கு இணைக்கப்பட வேண்டும். ஆனால் முஸ்லிம்களின் நிர்வாகத்தின்கீழ் ஒரு பிரதான நகர்கூட இருக்கக்கூடாது.

வட கிழக்கைத் தமிழ் ஆளவேண்டும், ஆளுபவன் ஒரு தமிழனாக இருக்கும்வரை. ஆளுபவன் தமிழ்பேசும் முஸ்லிமாக இருந்துவிடக்கூடாது. அதைவிட ஒரு சிங்களவர் ஆள்வதுமேல். இது அவர்களது
கொள்கை.

அதனால்தான் கிழக்கில் தமிழ்பேசும் முஸ்லிம் ஆளுநராக வந்தால் ஏதாவது சாக்குப்போக்கு காரணங்களைச் சொல்லி அதனை எதிர்க்கின்றார்கள். ஹிஸ்புல்லா இல்லாமல் வேறு ஒரு முஸ்லிம் நியமிக்கப்பட்டிருந்தால் அவரை எதிர்ப்பதற்கும் ஒரு காரணம் கண்டுபிடித்திருப்பார்கள். ஆனால் பெரும்பான்மையைச் சேர்ந்த ஒருவரை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் தமிழுக்காகவும் தமிழ்பேசும் சமூகத்திற்காகவும் போராடுபவர்கள்!

அதேபோல் அம்பாறையில் தமிழ்பேசும் மக்களுக்காக ஒரு கரையோர மாவட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; ஏனெனில் ஒரு முஸ்லிம் அரச அதிபராக வந்துவிடக்கூடாது. அதைவிட அம்பாறையில் ஒரு பெரும்பான்மை அரச அதிபரை ஏற்றுக்கொள்வார்கள். சிங்களத்தையும் ஏற்றுக்கொள்வார்கள்.

கல்முனை உப பிரதேச செயலகத்திற்கான கணக்காளர் இதுவரை கல்முனை பிரதான அலுவலகத்தில்தான் இருந்தார். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அம்பாறையில் ஒருவரை வைத்து 15 மைல்கள் தூரம் சென்று காரியம் முடிப்பார்கள். ஆனாலும் அவர்கள் தமிழுக்காகப் போராடுகிறார்கள். வட கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம்கள் இணங்க வேண்டும்.

இந்தப் பின்னணியில், தெற்கில் முஸ்லிம்களின் பொருளாதாரம் இலக்கு வைக்கப்பட்டு மதவாதம் முஸ்லிம்களை கசக்கிப் பிழிந்துகொண்டிருக்கும்போது அதே மதவாதத்திற்குள் தஞ்சம் புகுந்து கல்முனையில் சிற்றினவாதத்தால் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுகின்றார்கள்.

எனவே, இன்றைய அவர்களது உண்ணாவிரதப்போராட்டம் என்பது முஸ்லிம்களின் மானசீகத் தலைநகரை நிர்வாக ரீதியாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான ஒரு போராட்டமே தவிர பிரதேச செயலகத்திற்கான போராட்டமல்ல. அதற்காக போராடவேண்டிய அவசியமே இல்லை. நாளையே அதனைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதனை வஞ்சகத்தனமான மறைப்பதற்காக இந்த நகரின் பின்புறம் வாழுகின்ற மூன்று குறிச்சிக்குரிய தமிழர்களுக்காக 11 குறிச்சிகளை அன்று ஆயுதபலத்தில் உருவாக்கி இந்தப்பிரச்சாரத்தைச் செய்கிறார்கள்.

இந்த இனவாத உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் தமிழ்தலைவர்களே! நீங்கள் ஒரு தீர்மானத்தை எடுங்கள். மூன்று குறிச்சிக்குரிய தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பதற்காக ஒரு மாநகரையே உங்களுக்கு விட்டுத்தரவேண்டுமானால் வட கிழக்கிலுள்ள அனைத்து பிரதேச செயலக எல்லைகள், உள்ளூராட்சி எல்லைகளுக்குள் வாழுகின்ற முஸ்லிம்களுக்கும் தனியான செயலகம், சபை என்பன வழங்குவதற்கு தீர்மானமெடுங்கள், காரைதீவு, நாவிதனவெளி உட்பட.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நிரந்தர எல்லைக்கோட்டைப் போட்டுவிடுங்கள். You can’t have the cake and eat the cake. நீங்கள் கேக்கை சாப்பிடவும் வேண்டும்; வைத்திருக்கவும் வேண்டும்; என்றால் முடியாது. ஒன்றில் சாப்பிடுங்கள் அல்லது வைத்திருங்கள்.

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட எந்தவொரு நிர்வாகத்தினுள்ளும் தமிழர்கள் இருக்கக்கூடாது; அவர்களுக்கு தனிநிர்வாகம் வேண்டும்; ஆனால் தமிழர் பெரும்பான்மை நிர்வாகங்களுக்குள் முஸ்லிம்கள் இருக்கலாம் என்பது எந்த அடிப்படையில் நியாயம்.

இவ்வாறு நியாயத்தை அநியாயமாகவும் அநியாயத்தை நியாயமாகவும் பேசும் நீங்கள் தானா பேரினவாத அநியாயங்களுக்காக போராடுகிறீர்கள்? இன்று இந்த நியாயமான போராட்டத்திற்கு பேரினவாதம் உங்களுக்கு ஆதரவு தருகின்றதே! ஏன் என சிந்தித்தீர்களா?

சுதந்திரத்தின்பின் இப்பேரினவாதம் உங்களை அரவணைத்திருந்தால் நீங்கள் ஆயுதம் தூக்கியிருப்பீர்களா? இத்தனை உயிர்களை இழந்திருப்பீர்களா? இன்றும் இதே பேரினவாதம் உங்கள் காணிகளைப் பிடிக்கிறது. உங்கள் கோயில் எல்லைகளுக்குள் சிலை வைக்கிறார்கள்.

அவ்வாறு உங்களைக் கபளீகரம் செய்யத்துடிக்கும் பேரினவாதம் கல்முனையில் உங்களை அரவணைக்கத் துடிக்கின்றது; என்றால் உங்கள் போராட்டத்திற்கு அவர்களே தலைமை தாங்குகிறார்கள்; என்றால் இதனைக்கூட புரிந்துகொள்ள முடியாத சிறு குழந்தைகளா நீங்கள்?

ஒரு புறம் பேரினவாதத்துடன் போராடிக்கொண்டு மறுபுறம் முஸ்லிம்களைச் சிதைக்கும் விடயங்களில் அதே பேரினவாதத்துடன் கை கோர்ப்பீர்களா? இதுதானா உங்கள் நியாயம்?

எனவே, அன்பின் தமிழ்த் தலைவர்களே! நாடு சுதந்திரமடைந்ததிலிரிந்து உங்களை நசுக்கிவந்த பேரினவாதம் இன்று முஸ்லிம்களை நோக்கித் திரும்பியிருக்கின்ற வேளையில் அவர்களின் சதிவலைக்குள் வீழ்ந்துவிடாதீர்கள். தமிழ்பேசும் இரு சகோதர சமூகங்களையும் ஒற்றுமையாக வாழவிடுங்கள். பிரச்சினைகளை பேசித்தீர்க்க முன்வாருங்கள்.

அடுத்தவருக்கு நியாயமானவர்களாக இருங்கள். உங்கள் போராட்டங்களுக்கும் வெற்றிகிடைக்கும்.


பிறவ்ஸ்
முஸ்லிம் கூட்டமைப்பு என்ற கருப்பொருள் காலம்காலமாக பேசப்பட்டு வந்தாலும், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுசேர்வது என்பது நடக்கமுடியாத ஒரு நிகழ்வாகவே கடந்த காலங்களில் பார்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், 51 நாட்கள் அரசியல் புரட்சியின்போது பிரதான முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து செயற்பட்டமை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
பிரச்சினைகளின்போது முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருந்தாலும், தேர்தல் வரும்போது பிரிந்துவிடும் நிலைமையே காணப்பட்டது. இந்நிலையில் முஸ்லிம் கட்சிகளை ஒரு கூட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கு சமூக மட்டத்தில் பல முயற்சிகளை மேற்கொண்டும் அவை சாத்தியப்படவில்லை. காலம் காலமாக எதிர் அரசியல் செய்துவந்த காரணத்தால், அதனை கட்சிகளின் ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கவில்லை.
இந்நிலையில், முஸ்லிம் சமூகத்துக்கு மிகவும் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ள நிலையில் சமூக நலன்கருதி நான்கு அமைச்சர்கள், நான்கு இராஜாங்க அமைச்சர்கள், ஒரு பிரதி அமைச்சர் என ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது பதவிகளை துறந்துள்ளனர். ஏனைய பன்னிரெண்டு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இவர்களுடன் துணைநின்றனர்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சமூகத்துக்காக ஒரே நிலைப்பாட்டை எடுத்தது இதுவே முதற்தடவையாகும். இந்த செயற்பாட்டுக்கு முஸ்லிம்கள் மத்தியில் அமோக வரவேற்புக் கிடைத்தது. மாற்று சமூகத்தின் மத்தியின் ஒற்றுமையின் உதாரணத்துக்கான பேசுபொருளாகவும் இது அடையாளப்படுத்தப்பட்டது.
ஒற்றுமை எப்படி சாத்தியமானது?
ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் அமைச்சரான றிஷாத் பதியுதீன் ஆகியோர் பயங்கரவாதத்துக்கு துணைநின்றதாக குற்றம்சாட்டி, அவர்களை பதவிவிலகுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதம் இருந்தார். இதன்போது மூவரும் தங்களது பதவிகளை துறப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர்.
போராட்டத்துக்கான ஆதரவு சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்தது. பெளத்தர்கள் தலதா மாளிகையின் முன்னால் ஒன்றுதிரண்டார்கள். இந்நிலையில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் ஞாயிற்றுக்கிழமை கண்டிக்கு வந்தார். மூவரும் பதவி விலகவேண்டுமென ஞானசார தேரர் அடுத்தநாள் 12 மணிவரை காலக்கெடு விதித்தார். இல்லாவிட்டால் நாட்டில் கலவரம் ஏற்படுமென எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும்போது குழுக்களாக கூடியிருந்து கதைப்பதற்குகூட அனுமதியில்லை. அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதம் என்பது அவசரகாலச் சட்ட நியதிகள்படி அனுமதிக்க முடியாத செயலாகும். அதேபோன்று மக்கள் ஒன்றுகூடுவதற்கும் அனுமதிக்க முடியாது. ஆனால், இவையெல்லாம் நடக்கும்போது அரசாங்கம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. இதன்மூலம் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த உண்ணாவிரதத்தின் பின்னணியில் முஸ்லிம்களை இலக்குவைத்து பாரிய அழிவுகளை ஏற்படுத்த பேரினவாத சக்திகள் தயார்நிலையில் இருந்தன. குருநாகல், புத்தளம், கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்களை இலக்குவைத்து நடாத்தப்பட்ட தாக்குதல்களை விட, ஏற்படவிருந்த வன்முறைகள் உக்கிரமாக இருக்குமென்பதை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஊகித்தனர். இந்த வன்முறை சம்பவங்கள் நாடுதழுவிய ரீதியில் நடத்தப்படலாம் என்ற அச்சம் மேலோங்கியிருந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீமை தொலைபேசியில் தொடர்புகொண்டு இக்கட்டான சூழ்நிலையில் நாம் அடுத்ததாக என்ன செய்வோம் என்று தொலைபேசியில் கலந்துரையாடினார். மூவரையும் இராஜினாமா செய்யுமாறுதான் போராட்டம் நடக்கிறது. எனவே, பிரதமருடன் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் தான் கதைப்பதாகவும், ஆனால் அவர் வழங்கிய உறுதிப்பாட்டில் நாட்டின் நிலைமைகளை பார்க்கும்போது திருப்திகொள்ள முடியாதும் என்றும் கூறியுள்ளார்.
இப்பிரச்சினை தொடர்பில் நாளை முக்கியமான முடிவொன்றை எடுக்கவேண்டும். என்னால் கொழும்புக்கு வரமுடியாது. எனவே, உங்கள் தலைமையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வாருங்கள். அதன்போது நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நான் முழுமையாக கட்டுப்படுவேன் என்ற ஒபபுதலை கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீமிடம் வழங்கியிருந்தார்.
ஜனாதிபதியின் வேண்டுகோளின் பிரகாரம் ஆளுநர்கள் இராஜினாமா செய்வதற்கு தயாராக இருந்ததால், அடுத்ததாக றிஷாத் பதியுதீன் மாத்திரமே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருந்தார். றிஷாத் பதியுதீன் இராஜினாமா செய்யுமாறு கூறமுடியாத இக்கட்டான சூழ்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி இருந்தது. நான் பதவியிலிருந்து தான விலகமாட்டேன், வேண்டுமானால் நீங்கள் என்னை பதவி விலக்குங்கள் என்ற நிலைப்பாட்டில் றிஷாத் பதியுதீன் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இதுதொடர்பில் கபீர் ஹாசிம், றிஷாத் பதியுதீனிடம் பேசியபோது தன்னால் பதவியை இராஜினாமா செய்யமுடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். கடந்த ஆட்சிக் கவிழ்ப்பின்போது, தான் உங்களது கட்சிக்கு வழங்கிய பங்களிப்புக்காக எதிர்க்கட்சியினால் பழிவாங்கப்படுவதாகவும், அவர்களது சதிமுயற்சிக்கு என்னை பலிக்கடாவாக்க வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் கூறிய கருத்துகளில் இருக்கின்ற நியாயங்களை புரிந்துகொண்டுதான் முடிவெடுக்கும் பொறுப்பை கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீமிடம் வழங்கியிருந்தார்.
மறுநாள் திங்கட்கிழமை சந்திக்கு சந்தி கறுப்புக் கொடிகளோடும் தடிகளோடும் கடைகளை மூடச்சொல்லி கோசங்கள் எழுப்பியவாறு நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் பொலன்னறுவை முதல் அக்குறணை வரை ஊர்வலமாகச் சென்றனர். அத்துடன் நாட்டின் நாலா பகுதிகளிலும் முஸ்லிம்களை இலக்குவைத்து வன்முறைகளை கட்டவிழ்த்துவிடப்படலாம் என்ற அச்சம் காணப்பட்டது. ஞானசார தேரர் கூறிய அந்த களியாட்டம் நடைபெறுவதற்கு தயார்நிலையில் இருந்தது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிரேஷ்ட அரசியல்வாதி ஏ.எச்.எம். பெளசியின் வீட்டில் ஒன்றுகூடினார்கள். சட்டத்துக்கு முரணான இருந்தாலும் தேரர்களை என்று வரும்போது அவர்கள் விடயத்தில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் நெகிழ்வுப்போக்கு குறித்து சகலரும் அறிந்துவைத்திருந்தார்கள். நாடு பற்றி எரியப்போகும் நிலையில், முஸ்லிம்களை பாதுகாப்பதற்கான உத்தரவாதத்தை அரசாங்கத்தினால் வழங்கமுடியாது என்ற யதார்த்ததை புரிந்துகொண்டார்கள்.
முஸ்லிம்களை பாதுகாப்பதற்கான மாற்றுவழிகள் எதுவுமில்லாத நிலையில், இளைஞர்கள் வன்முறையின்பால் சென்றுவிடலாம் என்ற அச்சம் காணப்பட்டது. இதனால் நாடு மிகவும் அபாயகரமான நிலைக்கு தள்ளப்படும் அபாயம் காணப்பட்டது. முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் ஆட்சியில் இருந்தும், தங்களது மக்களை காப்பாற்றமுடியாத கையாலாகாத நிலையில் இருப்பதை உணர்ந்தர்கள்.
இந்நிலையில் முஸ்லிம் அரசியல் அமைச்சர்கள் அனைவரும் தங்களுடைய பதவிகளை துச்சமென மதித்து, அவற்றை தூக்கியெறிவதற்கு முன்வந்தனர். முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒரு மாதத்துக்குள் விசாரணை நிறைவடைய வேண்டும் என்றும், கைதுசெய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுதலை செய்யவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்து நான்கு அமைச்சர்கள், நான்கு இராஜாங்க அமைச்சர்கள், ஒரு பிரதி அமைச்சர் என ஒன்பது பேர் தங்களது பதவிகளை தூக்கியெறிந்தனர்.
பதவி துறப்பின் எதிரொலி
முஸ்லிம் அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக பதவிதுறந்த பின்னர், இலங்கை வரலாற்றில் முதல்முறையாக முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை காணப்பட்டது. ஒட்டுமொத்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகியது, அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனத்தைக் காட்டியது. இது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அரசாங்கம் ஒருவகையான நெருக்குதலுக்குள்ளானது.
பெளத்த மகாசங்கத்தினர் முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது பதவிகளை மீளப் பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தினர். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்களை நேரில் சந்தித்து தங்கள் பக்க நியாயங்கள் குறித்து அவர்களுக்கு தெளிவுபடுத்தினார்கள். இந்நிலையில் அமைச்சு பதவிகளை பெறவேண்டுமா, இல்லையா என்பது தொடர்பில் முஸ்லிம் தரப்புகளிடையே வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், கபீர் ஹாசிம் மீண்டும் அமைச்சு பொறுப்பை ஏற்கவேண்டுமென அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சை பொறுப்பேற்குமாறு அவருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார். இந்த சூழ்நிலையில், அமைச்சுகளை பொறுப்பேற்பது தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுன்றத்தில் ஒன்றுகூடி ஆராய்ந்தனர். ஆனால், எவ்வித முடிவுகளும் எட்டப்படாமல் அந்த கூட்டம் நிறைவடைந்தது.
ஆனாலும், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கபீர் ஹாசிம், அப்துல் ஹலீம் ஆகியோர் கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சு பதவிகளை பொறுப்பேற்பது என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். இதனால் முஸ்லிம்களின் ஒற்றுமை முறிவடைந்துபோகும் என்பதை சுட்டிக்காட்டியபோது, தங்களது கட்சியின் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாக அவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.
அதன்பின்னர், கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் அலரி மாளிகையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றது. பிரதமர், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி, பிரதி சட்டமா அதிபர், முன்னாள் சட்டமா அதிபரும் அமைச்சருமான திலக் மாரப்பன உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். கைதுசெய்யப்பட்ட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்வது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன. அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் பெருமளவானவர்களை விடுவிப்பதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் உயர்பீட உறுப்பினர்களும் செவ்வாய்க்கிழமை இரவு ரவூப் ஹக்கீமின் வீட்டில் ஒன்றுகூடி இதுதொடர்பில் ஆராய்ந்தனர். விசாரணைகள் நிறைவடையாத நிலையிலும், அப்பாவி முஸ்லிம்கள் விடுதலை செய்யப்படாத நிலையிலும் எவ்வித காரணங்களுக்காகவும் அமைச்சு பதவிகளை மீளப் பொறுப்பேற்பதில்லை என்ற தீர்மானம் ஏகமனதாக காணப்பட்டது.
கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது ரவூப் ஹக்கீமை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இருவரும் மீள அமைச்சுகளை பொறுப்பேற்பதற்கு தயாராக இருக்கின்றனர். ஆனாலும், முஸ்லிம்களின் ஒற்றுமையை குழப்பும் நோக்கில் அவர்களது செயற்பாடு அமைத்துவிடக்கூடாது என்பதால், சிறிது காலத்துக்கு இப்படியே இருக்குமாறு கூறியுள்ளதாக தெரிவித்தார். அதன்பின்னர் அமைச்சுப்பதவி விடயத்தில் உயர்பீடத்தை கூட்டவேண்டிய தேவை இல்லையெனக் கருதி, கூட்டம் அத்துடன் கலைந்தது.
பதவியேற்ற ஐ.தே.க. எம்.பி.க்கள்
ஆனால், மறுநாள் கபீர் ஹாசிம், அப்துல் ஹலீம் இருவரும் தத்தமது அமைச்சுகளை மீளப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இவர்கள் அமைச்சுகளை பொறுப்பேற்பதற்கு முன்னர் பிரதமர் அதுதொடர்பில் ரவூப் ஹக்கீமுக்கு அறவித்துள்ளார். முஸ்லிம் அரசியல்வாதிகள் நிபந்தனைகளை முன்வைத்து கூட்டாக விலகியுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இருவரும் அமைச்சுகளை பொறுப்பேற்பது உசிதமானதல்ல என ரவூப் ஹக்கீம் இதன்போது ரணிலிடம் தெரிவித்துள்ளார்.
சிங்கள வாக்குகளில் தங்கியிருக்கின்ற இவர்கள், முஸ்லிம் கட்சிகளுடன் சேர்ந்து அமைச்சு பதவிகளை துறந்ததே பெரிய விடயம். ஒற்றுமையாக இருந்த முஸ்லிம் கூட்டை உடைத்துக்கொண்டு சென்றாலும், இரு அமைச்சர்களும் தொடர்ந்தும் கூட்டாக இயங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். முஸ்லிம்களின் பிரச்சினை விடயத்தில் ஒருமித்து செயற்படுவதற்கும், கூட்டங்களுக்கு சமூகளிப்பதற்கும் அவர்கள் உடன்பட்டுள்ளனர்.
தேசியக் கட்சியில் பிரதான பதவிகளை வகிக்கின்ற இவர்கள், முஸ்லிம் சமூகத்துக்காக ஓரணியில் நின்றது என்பது சாதாரண விடயமல்ல. அமைச்சர் கபீர் ஹாசிம்தான் பதவி விலகுவதற்கான முதலாவது விருப்பத்தை தெரிவித்திருந்தார் என்பதையும் இங்கு நினைவுகூர வேண்டும். இவர்களை தவிர்த்து, முஸ்லிம் கட்சிகள் மட்டும் இந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தால் அது இந்தளவுக்கு செல்வாக்குச் செலுத்தியிருக்காது என்பது வெளிப்படையான உண்மை.
கேகாலை மாவட்டத்தில் கபீர் ஹாசிம் பெரும்பான்மை வாக்குகளின்றி பாராளுமன்றத்துக்கு தெரிவாக முடியாத சூழ்நிலை இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பெரும்பான்மை சமூகத்தை பகைத்துக்கொள்வது அல்லது முரண்படுவது என்பது அவரின் அரசியல் இருப்புக்கு கேள்விக்குறியாக மாறலாம். அதேபோன்று, கண்டி மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ தொகுதியில் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் ஏ.சி.எஸ். ஹமீட் சேர்த்துவைத்துள்ள வாக்குவங்கியை தக்கவைக்கவேண்டிய தேவை அப்துல் ஹலீமுக்கு இருக்கின்றது.
ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின்மீது சந்தேகப் பார்வை திரும்பியுள்ள நிலையில், முஸ்லிம் பிரதிநிதிகள் அமைச்சரவையில் இருக்கவேண்டியது காலத்தின் தேவையாகும். முஸ்லிம்களுக்கு எதிரான மசோதாக்கள் அமைச்சரவையில் வரும்போது, அதுதொடர்பில் விளக்கமளிப்பதற்கு அல்லது எதிர்ப்பதற்கு ஒரு முஸ்லிம் அமைச்சராவது அமைச்சரவையில் இருக்கவேண்டும்.
அப்துல் ஹலீம் முஸ்லிம் சமய விவகார அமைச்சை பொறுப்பெற்றதன் மூலம், கைதுசெய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிப்பதற்கு பெரும் பங்காற்ற முடியும். அரபு கிதாபுகள், இஸ்லாமிய சஞ்சிகைகளை ஆதாரமாக வைத்து கைதுசெய்தவர்களை விடுவிப்பதற்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது. முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் ஊடாக குறித்த கிதாபுகளில் பயங்கரவாத விடயங்கள் இல்லையென்பதை அவர்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும்.
அதுதவிர, பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரசாக்களில் பயங்கரவாதம் போதிக்கப்படுவதில்லை என்பதையும் அங்கு நல்லிணக்கம் பற்றிய விடயங்களே போதிக்கப்படுகின்ற என்பதையும் ஆதாரபூர்வமாக நிரூபிப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சு முஸ்லிம் ஒருவரின் கையில் இருக்கவேண்டும். முஸ்லிம் விவகார அமைச்சு முஸ்லிம் ஒருவரிடம் இருந்தால்தான் பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும்.
தலைமைதாங்கும் ரவூப் ஹக்கீம்
இக்கட்டான பிரச்சினைகள் வருகின்றபோது, முஸ்லிம் சமூகத்துக்கு தலைமைதாங்கும் வல்லமை ரவூப் ஹக்கீமிடம் இருப்பதை இன்றை சூழலில் அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர். முஸ்லிம் சமூகத்தை விட்டுக்கொடுக்காமலும் பெரும்பான்மை சமூகத்தை பகைத்துக்கொள்ளாமலும் காய்நகர்த்தும் ரவூப் ஹக்கீமின் ஆளுமை சாமானியமானதல்ல. பேரினவாத சக்திகள் அவரைநோக்கி விரல் நீட்டமுடியாதளவுக்கு அவரது செயற்பாடுகள் அமைந்துள்ளன.
கண்டி மாவட்டத்தில் தெரிவாகும் அவருக்கு கனிசமான சிங்கள மக்கள் வாக்களிக்கின்றனர். முஸ்லிம் சமூகத்துக்கு அப்பால் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் அவருக்கென தனியொரு செல்வாக்கு இருக்கின்றது. இந்த முடிவினால் அது பாதிப்படைந்தாலும் பரவாயில்லை, தனக்கான சிங்கள வாக்குகள் குறைந்தாலும் பரவாயில்லை என்று சமூகத்துக்காக தனது பதவியை தூக்கியெறிந்துள்ளார். இதற்கு முன்னர் மூன்று தடவைகள் அவர் அமைச்சு பதவியை தூக்கியெறிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிங்கள ஊடகங்களில் பேசுகின்றபோது, அவர்களின் இனவாத கேள்விகளினால் எவ்வித சஞ்சலமும் அடையாமல் நிதானமாக பதில் சொல்லும் பக்குவம் வேறு யாருக்கும் வராது. சிங்கள ஊடகங்களின் நிகழ்ச்சிநிரல் பற்றி தெரிந்திருந்தும், அவர்களின் இடத்துக்கே சென்று பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் உண்மை நிலையை நிதானமாக எடுத்துவைக்கும் பக்குவமான பணிக்கு ரவூப் ஹக்கீமுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளது.
றிஷாத் பதியுதீன் சம்பந்தமாக பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணை நடத்தக்கூடாது என்று தெரிவுக்குழுவை நியமிப்பதற்கு முன்னரே ரவூப் ஹக்கீம் சபாநாயகரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த காரணத்தினால்தான் எதிர்க்கட்சி தெரிவுக்குழுவை புறக்கணித்துள்ளது. அதேவேளை, தெரிவிக்குழுவின் நம்பகத்தன்மையில் சந்தேகம் ஏற்பட்டால், அதிலிருந்து விலகுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இப்போதைய சூழலில், ரவூப் ஹக்கீம் அரசாங்கத்துக்கு வெளியிலிருந்து முஸ்லிம் அரசியல்வாதிகளை வழிநடாத்தவேண்டும். ஆட்சியில் இருக்கின்ற இரண்டு முஸ்லிம் அமைச்சர்களும் அரசியல் ரீதியான செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்துக்கு நன்மை பயக்கும் விடயங்களை செய்யவேண்டும். இந்த ஒற்றுமை மூலம் முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுகள் களையப்பட்டு, அப்பாவி முஸ்லிம்கள் விடுதலை செய்யப்பட்டு, விரைவில் இயல்புநிலை வழமைக்கு திரும்பவேண்டும்.
(நன்றி: நவமணி – 21.06.2019)
Blogger இயக்குவது.