"அமைச்சுப் பதவிகளைத் துறந்திருக்கின்ற நாம் சமூக நலன்களை பாதுகாப்பதற்காக இதற்கு மேல் எதைச் செய்யவும் தயார்" மு.கா பிரதி தலைவர் எச்.எம்.எம்.ஹரீஸ்

*********************************************

(அகமட் எஸ். முகைடீன்)

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை எங்களுடைய போராட்டம் தொடரும், இன்று அமைச்சுப் பதவிகளைத் துறந்திருக்கின்ற நாம் சமூக நலன்களை பாதுகாப்பதற்காக இதற்கு மேல் எதைச் செய்ய வேண்டுமோ அதனையும் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோமென முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வியாழக்கிழமை (6) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் மேற்கொள்ளப்பட்ட வன்முறை காரணமாக முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் சில முக்கிய தீர்மானங்களை எடுக்க வேண்டி ஏற்பட்டது. நாட்டின் ஒற்றையாட்சிக்கும் பாதுகாப்பிற்கும் சமூகங்களின் ஒற்றுமைக்குமாக முஸ்லிம் அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்தார்கள். பதவியிலிருந்து விலகிய அவ் முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது பொறுப்புக்களை ஏற்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இராஜினாமா செய்தவன் என்ற வகையிலும் முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமாச் செய்வதற்கு முன்னோடியாக உழைத்தவன் என்ற ரீதியிலும் அவ்வேண்டுகோளை விடுத்த மகாநாயக்க தேரர்களுக்கு மிகுந்த கௌரவத்தை கொடுக்க விரும்புகின்றேன். அவர்களின் அக்கருத்து எமக்கும் எம்சமூகத்திற்கும் மிகப் பெரிய ஆறுதலைத் தந்திருக்கின்றது. அத்தோடு முஸ்லிம் சமூகம் மீது பெரும்பான்மை மக்களின் சந்தேகம் படிப்படியாக மறைவதற்கும் வழியமைத்துள்ளது.

ஆனால் அவர்களுடைய அக்கோரிக்கை சம்பந்தமாக எங்களால் உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாதுள்ளது. முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதின், மேல் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர்கள் சஹ்ரானுடைய பயங்கரவாத குழுவுக்கு உதவி செய்தார்கள் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை இந்த நாட்டிலுள்ள பல அரசியல் முக்கியஸ்தகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலமையில் மீண்டும் பதவிகளை எடுக்கின்றபோது குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாப்பதற்கு முஸ்லிம் அமைச்சர்கள் அளுத்தம் கொடுக்கின்றார்கள் என்று மீண்டும் வீண் புரளியை கிளப்புவார்கள். இதனால் இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகம் திரும்பவும் பீதிக்குள்ளாக்கப்படும். எனவேதான் அமைச்சுப் பொறுப்பை எடுப்பதில் எந்தவித ஆர்வத்தையும் எங்களால் காட்ட முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

அது மாத்திரமன்றி இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் சகோதர சகோதரிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அனியாயமாக கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். சஹ்ரானுடைய குழுவினரை விடுதலை செய்யுமாறு நாம் கூறவில்லை.

முஸ்லிம்கள் தைரியமாக இருக்க வேண்டும், நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள். இந்த நாட்டை அல்லது ஒரு மாகாணத்தை பிரிக்க வேண்டும் என்றோ பொலிஸ் மற்றும் சமஸ்டி அதிகாரம் வேண்டும் என்றோ நாட்டின் பிரிவினைக்காக போராடுகின்ற ஒரு சமூகம் அல்ல. மாறாக பிரிட்டிஸ் ஆட்சிக் காலத்தில் சுதந்திரத்திற்காக அவர்களை எதிர்த்து முஸ்லிம்கள் போராடியவர்கள். அன்று இருந்த மன்னர் ஒருவரை பாதுகாப்பதற்காக முஸ்லிம் பெண் மணி உயிர் இழந்திருக்கின்றார். அதேபோன்று கல்முனை சம்மாந்துறை பிரதேசத்திலிருந்து ஆங்கிலேயருக்கு எதிராக இந்த நாட்டின் சிங்கள தலைவர்களுடன் இணைந்து போராடிய ஏழு பேர் சிறைக்குச் சென்றார்கள். நாடு பூராகவும் இந்த நாட்டின் விடுதலைக்காக போராடிய முஸ்லிம் தலைவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

இன்று நாட்டின் பாதுகாப்பு நிலமை மிகக் கேவலமாக இருக்கின்றது. பாதுகாப்பு கட்டமைப்பில் புலனாய்வுப் பிரிவுகள் சஹ்ரான் சம்பந்தமாக பல தகவல்களை பரிமாறி இருக்கின்றது. இரண்டு வருடங்களாக அதில் உள்ள ஆபத்து சம்பந்தமாக நாட்டின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு கூறப்பட்டிருக்கின்றது, ஆனால் அந்த விடயம் பாரதுரமாக எடுக்கப்பட்டு சஹ்ரானையும் அவருடைய குழுவினரையும் கைது செய்யாமல் இருந்தது பாராதூரமான பிழையாகும். இதனை தெரிவுக் குழு முன்னிலையில் ஆஜரான கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மிகத் தெளிவாக சொல்லி இருக்கின்றார்.

அப்பிழையினை பாதுகாப்பு அமைச்சும் பாதுகாப்பு முக்கியஸ்தர்களும் செய்துவிட்டு, இன்று முஸ்லிம் சமூகத்தை பகடைக் காயாக்கி அவர்களை பலி கொள்வதற்கு இடம் கொடுக்க முடியாது. மிகப் பெரிய அமைப்பான எல்.ரி.ரி.ஈ அமைப்பினை துவம்சம் செய்தவர்கள் எமது நாட்டின் பாதுகாப்பு தரப்பினர். இந்நிலையில் சஹ்ரான் ஒரு பயங்கரவாதி அவர் இந்த நாட்டில் பயங்கர தாக்குதலை மேற்கொள்ள இருக்கின்றார் என்று பாதுகாப்பு உயர் பீடத்தில் உள்ளவர்கள் தெரிந்துகொண்டும் ஏன்? அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்வாறு நடந்த பின்பு இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களை பலி கொள்ளலாம், கைது செய்யலாம், அவர்களது பொருளாராத்தை அழிக்கலாம் என்று அவர்கள் விரும்பினார்களா?. இதுதான் குறுநாகலில் நடந்தது, கடைகள் அழிக்கப்பட்டன, பள்ளிவாயல்கள் எரிக்கப்பட்டன. எந்த பாதுகாப்பு தரப்பினாலும் அங்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அனியாயமாக உயிர் ஒன்றும் கொல்லப்பட்டது. இவ்வாறு எல்லா விடயங்களிலும் தவறை விட்டு விட்டு வெந்த புண்ணில் ஈட்டி எறிவது போன்று பல பராளுமன்ற உறுப்பினர்களும் இனவாத செயற்பாட்டாளர்களும் இனவாதத்தை கக்குகின்றார்கள்.

கல்முனை சாய்ந்தமருதில் சதோச வாகனத்தில் சஹ்ரானுடைய குழு வந்து சென்றது என்று விமல் வீரவன்ச வேண்டுமென்று நாட்டு மக்கள் மத்தியில் மீண்டும் பீதியை கிளப்புகிறார். அங்குள்ள பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் அது தொடர்பில் விசாரித்த போது அவ்வாறு சதோச வாகனம் பாவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர். வெறுமனே இவ்வாறான பொய் குற்றச் சாட்டுக்களை மீண்டும் மீண்டும் கூறி இந்த நாட்டில் இனவாத்தின் ஊடாக அரசியல் செய்யலாம் என்று நினைக்கின்றனர். இவர்கள் வெற்றியடையப் போவதில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

பாதுகாப்பு படை, பாதுகாப்பு கவுன்சில் விட்ட தவறினை கேட்பதற்கோ இந்த நாட்டின் பாதுகாப்பு முறைமை உடைந்து சுக்கு நூராகி நாட்டின் பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் அன்னிய சக்திகளான அமெரிக்கா போன்ற நாடுகள் இங்கு தளம் அமைக்க முற்படுகின்றன, இந்த நாட்டின் இறமையும் சுயாதீனமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது இவற்றுக்கு எதிராக போராடுவதற்கோ வக்கில்லாமல் இருக்கின்றனர்.

முஸ்லிம் சமூகத்தின் அத்தனை அமைச்சர்களும் ஆளுநர்களும் இராஜினாமா செய்துள்ள நிலையில், நாட்டின் அமைச்சரவையில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் இருக்கின்ற ஒரு சூழ்நிலையில், பெரும் விட்டுக்கொடுப்பைச் செய்த ஒரு சமூகத்தின் மீது மீண்டும் மீண்டும் அவர்கள் போலி விமர்சனம் செய்வது நிறுத்தப்பட வேண்டும். எங்களுக்கு வேறு, அவர்களுக்கு வேறு அவசர கால சட்டத்தை நிலை நாட்டுவதை பொலிசார் அனுமதிக்கக் கூடாது. நாங்கள் மிக வேதனையுடன் பேசுகின்றறோம், இந்த பிரச்சினை முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும், நாட்டில் வன்முறைக் கலாச்சாரத்தின் ஊடான அரசியல் நிறுத்தப்பட வேண்டும்.

இன்று பெரும் படை பலம் கொண்ட சிரியாவினால், ஈராக்கினால், அமெரிக்காவினால் கூட இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கர வாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் இருக்கின்ற ஒரு நிலையில் பயங்கரமான தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் இலங்கையில் ஆரம்பமான இந்த பயங்கரவாதத்தை வெறுமனே ஒரு மாதத்திற்குள் முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒழிந்திருந்த பயங்கரவாதிகள் கோடிக் கணக்கில் காசை எறிந்து தங்களை காட்டிக்கொடுக்க வேண்டாம் என்று கெஞ்சியபோதிலும் பணம் முக்கியமல்ல நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்று அப்பிரதேச மக்கள் அவர்களை காட்டிக் கொடுத்தா0ர்கள். அந்த சாய்ந்தமருது சம்பவத்துடன் அப்பயங்கரவாதம் இந்நாட்டில் ஒழிக்கப்பட்டு விட்டது. எஞ்சிய உறுப்பினர்களையும் கைதி செய்வதற்கு தகவல் கொடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

குண்டுப் பீதி நீங்கி தற்போது நாடு அமைதியாக இருக்கின்றது. எல்லோரும் சந்தோசமாக வழமைக்கு திரும்பி இருக்கின்றனர். இந்நிலையில் வெக்கமில்லாமல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்து கூக்குரல் விடுகின்றார்கள், இனவாதத்தின் ஊடாக அரசியல் செய்யலாம் என்று நினைக்கின்றார்கள். அவர்களுக்குச் சொல்கின்ற செய்தி, முஸ்லிம் பாராளுமன்ற தலைமைகளுடன் இந்த நாட்டில் 20 இலட்சம் முஸ்லிம்கள் ஒற்றுமைப் பட்டிருக்கின்றார்கள், இராஜினாமாவுக்காக ஒவ்வொரு அமைச்சரிடமும் எங்களுடைய தலைவரிடமும் சென்று பேசி ஒற்றுமைப்படுத்தியதில் முன்னின்றவன் என்றவகையில் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன் விளையாடாதீர்கள், நாங்கள் எமது சமூகத்திற்காக இந்தியத் தலைவரிடமோ அல்லது 40 அரபு நாடுகளில் எதனிடமாவதோ எங்களுக்கு நடந்த அநியாயத்திற்காக நாட்டை காட்டிக் கொடுத்து அவர்களை இவ்விடயத்தில் தலையிடுங்கள் என்று கூறவில்லை.

மாறாக இந்த நாட்டிலுள்ள பௌத்த மக்களுடைய மனங்களை வென்று இறைவனுடைய உதவியுடன் முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. அந்த நம்பிக்கையின் வெற்றிக்கான முதல் வெளிப்பாடுதான் மீண்டும் அமைச்சர்களாக வாருங்கள் என்ற மகாநாயக்க தேரர்களின் அழைப்பு அமைகின்றது. இது எமக்கு மிகப் பெரிய நம்பிக்கையை தந்திருக்கிறது.

இது தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்தோம், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பிற்காக எதிர்க் கட்சியில் உள்ள கூட்டமைப்பு, மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மலையக கட்சிகள் மற்றும் கண்ணியத்திற்குரிய மாகாநாயக்க தேரர்கள் எல்லோரையும் சந்திக்கும் மிகப் பெரிய ஒரு வேலைத்திட்டத்தை செய்திருக்கின்றோம். இந்த நாட்டிலுள்ள அரசியல் தலைமைகள் மற்றும் மதத் தலைவர்கள் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பையும் இந்த நாட்டின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக அவர்களை சந்திப்பதற்கு முடிவு செய்து தயாராகி இருக்கின்றோம்.

அமைச்சுப் பதவிகள் எமது கால் தூசிக்கு சமனானது. இதனை எமது பெருந்தலைவர் அஷ்ரப் அடிக்கடி சொல்லி இருக்கின்றார். அமைச்சுப் பதவிகளுக்காகவோ அதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்காகவோ நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. நாட்டை கட்டி எழுப்ப வேண்டும், நாட்டில் உள்ள மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த அரசியலில் இருந்து கொண்டிருக்கின்றோம். அதன் வெளிப்பாடாகவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையான இராஜினாமா அமைந்துள்ளது.

முஸ்லிம் சமூகம் எம்மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையினை நாங்கள் ஒருபோதும் வீனடிக்க மாட்டோம். முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தும்வரை எங்களது போராட்டம் தொடரும், இன்று அமைச்சுப் பதவிகளைத் துறந்திருக்கின்ற நாம் சமூக நலன்களை பாதுகாப்பதற்காக இதற்கு மேல் எதைச் செய்ய வேண்டுமோ அதனையும் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். முஸ்லிம் சமூகம் எந்த அடிப்படையிலும் கவலைப்படக் கூடாதென முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.