காலி கராப்பிட்டிய அரச வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமை புரிந்து வந்த ஒருவர் ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்பு வைத்தியசாலைக்கு வருகை தரும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாபைக் கூட கழற்றி விட்டு வருமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். சில ஏழைப் பெண்கள் இவனுடைய தொல்லைக்குப் பயந்து ஹிஜாபைக் கழற்றியும் உள்ளனர். இன்னும் சில ஏழைப் பெண்கள் வசதியற்ற நிலையிலும் பணம் செலுத்தி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இப்படியிருக்க, காலி முஸ்லிங்கள் மத்தியில் நன்கு அறிமுகமான ஒரு பெண் முஸ்லிம் சட்டத்தரணி ஒருவர் ஹிஜாபுடன் ஒரு தேவைக்காக குறித்த அரச வைத்தியசாலைக்குச் சென்ற நேரம், அச்சகோதரிக்கும் ஹிஜாபைக் கழற்றுமாறு குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் வற்புறுத்தவே,  உடனடியாக அந்த உத்தியோகத்தருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு குறித் ஊழியரை தற்காலிக இடைநிறுத்தம் செய்யும் வரைக்கும் சென்று வெற்றி- பெற்றார். (குறித்த ஊழியரின் கன்னத்தில் அறைந்ததாகவும் தகவல் - இது கடந்த ரமழான் மாத்தில் நடந்த சம்பவம்)

இது போலவே, ஹிஜாபுக்கெதிராக பல இடங்களில் நடந்த சம்பவங்களில் நமது படித்த பெண் ஆசிரியைகள், பெண் சட்டத்தரணிகள் தைரியமாக முன்னின்று வெற்றி பெற்றனர்.  எவ்வித குற்றமும் இழைக்காத நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல அப்பாவிகளை விடுதலை செய்வதில் முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் முன்னின்று உழைத்தனர்.

இதன் மூலம் தெரியவருவது, இனி எமது பெண்கள் ஏதாவது ஒரு துறையில் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும். வெறும் பொம்மைகளாக வீடுகளில் அடைபட்டுக் கிடந்து அபலைத்தனமாக இருக்கக் கூடாது. படிப்பறிவில்லாத, மொழியறிவு இல்லாத பெண்கள் தான் பேரினவாதிகளின் முன்னால் பயந்து நடுங்குகின்றார்கள். படித்த பெண்கள் தலைநிமிர்ந்து நிற்கின்றார்கள்.

வீட்டோடு அடங்கி இருக்கும் பெண்கள் தான் ஆயிஷாக்கள், ஹப்ஸாக்கள் என்று சில மரமண்டைகள் கட்டுரை எழுதுகின்றார்கள். ஆயிஷா நாயகி வீட்டில் அடைந்து கிடந்த பெண்மணி அல்ல, மாறாக, களத்தில் நின்று அநியாயங்களுக்கெதிராக போராடியவர்.

எனக்கென்றால், வீட்டில் அடைந்து கிடக்கும் பெண்களை விட களத்தில் அநியாயத்துக்கு எதிராகப் போராடும் எமது முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் ஆயிஷா நாயகிகளாக மிளிர்கின்றார்கள்.

இனியும் பெண்கள் உலகக் கல்வி கற்கக் கூடாது என்ற "நுஸ்ரானியத்து" விசக் கருத்துக்களை சமூகத்தில் பரப்பும் அடிமுட்டாள்களை ஓரங்கட்டுவோம்.

(ரஸ்மி மொஹமட் - காலி)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.