மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசனத் திட்டங்களை நிர்மாணித்தவர்களை பாராட்டும் நிகழ்வில் திங்களன்று (08) உரையாற்றிய ஜனாதிபதி, பராக்கிரம சமுத்திரத்தைத் திருத்தியமைத்த முஸ்லிம் பொறியியலாளரின் தியாகத்தைக் குறிப்பிட்டு உரையாற்றினார்.

பராக்கிய சமுத்திரம் பராக்கிரமபாகு மன்னனால் மூன்று குளங்களை இணைத்துக் கட்டப்பட்டது. 1930 களில் டீ.எஸ். சேனாநாயக்க இந்தக் குளத்தைத் திருத்தியமைப்பதற்குத் தீர்மானித்து, அந்தப் பொறுப்பை நீர்ப்பாசனப் பொறியியலாளரான இஸ்மாயில் எனும் முஸ்லிம் பொறியியலாளரிடம் ஒப்படைத்தார். இந்தத் தகவல் பொலன்னறுவ நீர்ப்பாசன அலுவலகத்தின் பதிவுப் புத்தகத்தில் உள்ளது.

உடைந்திருந்த பராக்கிரம சமுத்திரத்தை மீளவும் திருத்தியமைக்க முடியும் என பொறியியலாளர் இஸ்மாயில் டீ.எஸ். சேனாநாயக்கவுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து அந்தப் பணியைத் தொடர்வதற்கு அவர் அனுமதியளித்தார். இந்தப் பணியின் இறுதிக் கட்ட வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது பொறியியலாளர் இஸ்மாயிலுடை குழந்தை கடுமையான சுகவீனமுற்றிருப்பதாக கொழும்பிலிருந்து தந்தி வந்திருந்தது. உடனடியாகப் புறப்பட்டு வருமாறு அவருடைய மனைவி அதில் குறிப்பிட்டிருந்தார்.

உடனடியாகச் செல்வதற்கு அவருடைய மனம் விரும்பியபோதும் அவர் வேலையின் முக்கியத்துவத்தைக் கருதி அவ்விடத்திலிருந்து செல்வதைத் தவிர்த்துக் கொண்டார். அவரது சக ஊழியர்கள் வேலையை தாங்கள் கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் சென்று வாருங்கள் என்று கூறியபோதும், இன்னும் இரண்டு வாரங்களில் பெய்யப் போகும் மழையினால் எங்களது பணி பாதிக்கப்பட முடியும். எனவே, வேலையை முடித்து விட்டே செல்கிறேன் என்று முடிவெடுத்து தனது பணியைத் தொடர்ந்தார்.

இரண்டு வாரங்களின் பின்னர் மீண்டும் வீட்டிலிருந்து தந்தி வருந்திருந்தது. குழந்தை இறந்து விட்டதாகவும், உடனே வீடு வரும் படியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் தனது பணியை முடித்து விட்டு குழந்தையின் இறுதிக் கிரியைக்காகத்தான் கொழும்புக்குப் போய்ச் சேர்ந்தார்.

1950களுக்குப் பின்னர் இருந்துதான் சிங்கள-தமிழ்-முஸ்லிம் பிரச்சினைகள் உருவாகி, அபிவிருத்திப் பணிகள் வீழ்ச்சியடையும் அளவுக்கு இன, மத அடிப்படையில் அரசியல் கட்சிகள் உருவாகி நாங்கள் வீழ்ச்சியடையும் நிலைக்கு வந்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

Meelparvai.net

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.