புத்தாண்டில் ஏனைய சமூகத்துடன் நல்லிணக்கம் பேணி வாழ்வோம்
- மத்திய கொழும்பு அமைப்பாளர் ஏ.எல்.எம். உவைஸ்

( ஐ. ஏ. காதிர் கான் )

   ஹிஜ்ரி 1440 இஸ்லாமியப் புத்தாண்டு மறைந்து, ஹிஜ்ரி 1441 புத்தாண்டு உதித்துள்ள இச்சந்தர்ப்பத்தில்  முஸ்லிம்களின் விடியலுக்காக, இன்றைய நன் நாளில் இரு கரமேந்தி  இறைவனிடம் இறைஞ்சுவோமாக என, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும், மத்திய கொழும்பு (ஸ்ரீல.பொ.பெ.) அமைப்பாளருமான அல் ஹாஜ் ஏ.எல்.எம். உவைஸ், அவரது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

   அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
   முஸ்லிம்கள் பழைய ஹிஜ்ரி ஆண்டில், இக்கட்டான பல தடைகளையும் தாண்டி, புதிய ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளார்கள். பல சவால்களுக்கும் முகம் கொடுத்த நாம், அல்லாஹ்வின் அருளால் புதிய ஆண்டில் வீற்றிருக்கின்றோம்.

   பிறந்துள்ள ஹிஜ்ரி ஆண்டில் நாம் மிகப் பொறுப்புடனும் பொருமையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இது இன்றைய காலத்தின் அவசியத் தேவையாக உள்ளது.

   இஸ்லாமிய வருட ஆரம்பத்தில் நாம் மாற வேண்டும். நம்மைச் சூழ உள்ளவர்களை மாற்ற வேண்டும் என்ற சிந்தனை நம்மிடையே வரவேண்டும்.

   இந்த வாழ்வை ஒழுங்குபடுத்த இரண்டு விடயங்களை நாம் அவசியம் உணர வேண்டும். ஒன்று, தீயவைகளைத் திட்டமிட்டு விட்டு விடுதல். இரண்டு, நல்லவைகளை ஒழுங்குபடுத்தி செய்ய முயற்சித்தல். இதற்கான சிறந்த காலமே, மலர்ந்துள்ள புத்தாண்டாகும்.

   ஆன்மீகம், தஃவா, அறிவு, பொருளாதாரம், பண்பாடு, உடல் ஆரோக்கியம், தொழில், அரசியல், குடும்ப விவகாரம், சமூக உறவுகள் போன்றவற்றில் நம்மை நாமே சென்ற வருடத்தோடு ஒப்பிட்டு சுய விசாரணை செய்து கொள்வதோடு, இப்புதிய வருடத்துக்காக நமது வாழ்வைத் திட்டமிட்டு ஒழுங்குபடுத்திக் கொள்ள  முயற்சிக்க வேண்டும்.

    மலர்ந்துள்ள இஸ்லாமியப் புத்தாண்டை ஆழமாகத் திட்டமிட்டு அழகாகப் பயன்படுத்த முயற்சிப்போம். ஏனையோருக்கும் எப்பொழுதும் முன்மாதிரியாகத் திகழ்வோம்.

   ஹிஜ்ரி 1440 ஆம் ஆண்டில் நமது சமூகத்தினர் சிலரால் நாட்டில் நிகழ்ந்த அசம்பாவித செயலுக்கு மனம் வருந்தி அல்லாஹ்விடம் வருந்தி மன்னிப்புக் கோரி, ஹிஜ்ரி 1441 ஆம் ஆண்டை மன மகிழ்வோடு வரவேற்று, நமது நாட்டில் சமாதானத்தையும், சுபீட்சத்தையும் நிலைநாட்ட ஒன்றுபடுவோம்.

அத்துடன், இந்நாட்டில் இன நல்லுறவு மென்மேலும் வலுப்பெறவும், எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இரு கரமேந்திப் பிரார்த்திப்போம்.

   இலங்கை நாட்டில் வதியும் முஸ்லிம்களாகிய நாமும் எமது தனித்துவமும், இஸ்லாமிய - குர்ஆன் கோட்பாடு, நபி வழிகளையும் விட்டு விடாது ஏனைய  சமூகத்துடன் சகஜமான முறையில் நல்லிணக்கம் பேணி வாழ்வதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

   எனவே, முஹர்ரம் எமது புது வருட ஆரம்பம் என்பதைக் கருத்திற்கொள்வோம். எமது வாழ்வில் இடம்பெறும் பிழைகளை, மார்க்க ரீதியாகச் சிந்தித்துச் சீர் திருத்தம் கண்டு, மார்க்கத்துக்கு முரணாகாத வாழ்வைப் பின்பற்றிச் செயற்பட திட சங்கற்பம் பூணுவோம். எமது உலக வாழ்வின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நேரிய வழிகளைப் பேணவும், 1441 இஸ்லாமியப் புத்தாண்டில்  சிந்திப்போம்! செயற்படுவோம்!!

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.