வை எல் எஸ் ஹமீட்

அண்மையில் நடந்த அதிர்வு நிகழ்ச்சியில், குறித்த சுயேட்சை வேட்பாளர், இத்தேர்தலில் முதற்சுற்றில் யாரும் 50% மேல் பெறமாட்டார்கள். ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்களிப்பவர்களும் இரண்டாம் வாக்கைப் பாவிக்க மாட்டார்கள். ஜே வி பி யிற்கு வாக்களிப்பவர்கள்கூட, பெரிதாக இரண்டாம் வாக்கை அளிக்க மாட்டார்கள். எனவே, தனது இரண்டாம் வாக்கே வெற்றி வேட்பாளரைத் தீர்மானிக்கும்; என்ற கருத்தை முன்வைத்தார்.

 அப்போது நிகழ்ச்சியை நடாத்தியவர்களில் ஒருவர் ஒரு கேள்வியைத் தொடுத்திருந்தார். அதாவது:

வாக்குகள் 100
A 48
B  40
ஏனையோர் 12 அதில் உங்களுடைய வாக்குகள் 3

இப்பொழுது இரண்டாம் சுற்று எண்ணிக்கைக்கு செல்லவேண்டும். இரண்டாம் சுற்றில் உங்களது இரண்டாவது வாக்குகள் A யின் வெற்றியைத் தீர்மானிக்க அவசியமில்லை. B யிற்கு அளித்தாலும் அவர் வெற்றிபெற போதாது. எனவே, நீங்கள் எவ்வாறு ஜனாதிபதியைத் தீர்மானிப்பீர்கள்? என்ற கேள்வியை எழுப்பினார்.

அதற்கு வேட்பாளரின் பதில் பலவாறாகவெல்லாம் அமைந்திருந்தது. ஒன்று, முதல் சுற்றில் A,B இருவரும் தோற்று இரண்டாம் சுற்றில் அவர்களில் ஒருவரை நாம் வெல்லவைப்போம்; என்பதாகும்.

நிகழ்ச்சி நடத்துனர் மீண்டும் கணக்கைச் சொல்லி, A யின் வெற்றிக்கு உங்கள் வாக்கு தேவையில்லை; B உங்கள் வாக்கு கிடைத்தும் வெற்றிபெறமுடியாதே!, என்றபோது அது முதலாவது சுற்றில் பயன்படுமே; என்றார்.

இரண்டாவது வாக்கு முதற்சுற்றில் எவ்வாறு பயன்படும்?

அதன்பின், நாம் வெற்றிபெறும் வேட்பாளருக்கே ஆதரவு வழங்குவோம்; என்றார்.

அவர் வெற்றிபெறும் வேட்பாளர் என்றால் நீங்கள் எவ்வாறு ஜனாதிபதியைத் தீர்மானிப்பது?

நீங்கள் தீர்மானிப்பதாக இருந்தால் உங்களது இரண்டாம் வாக்கு கிடைக்காதபோது அவர் தோல்வியடையக்கூடிய வேட்பாளராக அல்லவா இருக்கவேண்டும்.

அதாவது முதலாம் சுற்று எண்ணிக்கையில் யார் இரண்டாவதாக வருவார்; என நீங்கள் கணிக்கின்றீர்களோ, அவருக்கு உங்கள் இரண்டாம் வாக்குகளை வழங்கி வெற்றிபெறச் செய்யவேண்டும்?

சுருங்கக்கூறின், நீங்கள்/ உங்களது சிவில் அமைப்பு யாருக்கு இரண்டாம் வாக்கை வழங்கச் சொல்கிறீர்களோ அவர் முதல் சுற்று எண்ணிக்கையில் இரண்டாம் இடத்திற்கே வருவார்; என பிரகடனப்படுத்துகிறீர்கள்; என்பது பொருளாகும்.

முதல் சுற்றில் 50% மேல் என்பது என்ன?
—————————————————-
அளிக்கப்படுகின்ற செல்லுபடியான வாக்குகள் 100 எனக் கொள்வோம்.

முதல் சுற்று எண்ணிக்கையில்
A 51 வாக்குகள்
B 30 வாக்குகள்
ஏனையோர் 19 வாக்குகள் எனக்கொள்வோம்.

முதல் சுற்றில் 50% மேல் எடுத்தாலும் இரண்டாம் சுற்று எண்ணத்தான் வேண்டும்; என சட்டம் சொல்கிறது; என கற்பனை செய்வோம்.

இப்பொழுது இரண்டாம் சுற்றில் ஏனைய 19 பேரும் தமது இரண்டாம் வாக்கை B யிற்கே அளிக்கிறார்கள்; எனக்கொள்வோம். இப்பொழுது B யின் கூட்டுத்தொகை என்ன? 49 ஆகும். இப்பொழுதும் A தான் வெற்றியாளர்.

இப்படிப்பார்ப்போம்
எஞ்சிய 19 பேரில் 10 பேர் தமது இரண்டாம் வாக்கை B யிற்கு அளிக்கின்றனர். ஏனைய 9 பேரும் A, B தவிர்ந்த ஏனையோருக்கு தமது இரண்டாம் வாக்கை அளிக்கின்றனர்.

இப்பொழுது அந்த 9 பேரும் தமது மூன்றாம் வாக்கை B யிற்கே அளிக்கின்றனர். இப்பொழுது Bயின் கூட்டுத்தொகை என்ன? இப்பொழுதும் 49 தான். எனவே, வெற்றியாளர் இப்பொழுதும் A தான்.

உண்மையில் அந்த 19பேரும் B யிற்கே இரண்டாம் வாக்கை வழங்குவார்கள்; என்று கூறமுடியாது. அவ்வாறு வழங்கினாலும்கூட அவரால் 49 ஐத் தாண்டமுடியாது.

எனவே, சிந்தித்துப் பாருங்கள். முதல் சுற்றில் ஒருவர் 50% மேல் பெற்றுவிட்டால் இரண்டாம் சுற்று எண்ணுவதில் ஏதாவது பிரயோசனம் உண்டா? இல்லை. காலநேரம்தான் வீணாகும். எனவேதான் முதல் சுற்றில் ஒருவர் 50% ஐத் தாண்டினால் அவர்தான் வெற்றியாளர். தாண்டாவிட்டால் இரண்டாம் சுற்று எண்ணவேண்டும்; என்று சட்டம் கூறுகின்றது.

சிலர் இதனைப் புரிந்துகொள்ளாமல் முதல் சுற்றில் 50% இற்குமேல் என்பது “ கட்டாயம்”. அவ்வாறு பெறாவிட்டால் அவர்கள் முதல் சுற்றில் தோல்வியடைகிறார்கள். அதன்பின் இரண்டாம் சுற்றில், இரண்டாம் மூன்றாம் வாக்குகள் மூலம்தான் வெற்றிபெறுகிறார்கள்; என்று கற்பனை செய்துகொண்டு பகிரங்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கூறுகிறார்கள்.

இன்னும் சில சகோதரர்கள் இரண்டாம் சுற்றில் 50% இல் மேல் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் கேட்கின்றார்கள்.

எனவே, புரிந்துகொள்ளுங்கள், எந்தவொரு சுற்றிலும் “50% இற்குமேல்” என்பது கட்டாயம் இல்லை. அது வெறும் எண்கணிதம் மாத்திரமே!

தேர்தல் விஞ்ஞாபனம்
—————————-
தேர்தல் விஞ்ஞாபனம் என்பது ‘ தான் தெரிவுசெய்யப்பட்டால் செய்வதற்கு உத்தரவாதமளிக்கின்ற வேலைத்திட்டங்களும் அவற்றிற்கு வழிகாட்டுகின்ற கொள்கைத் திட்டங்களுமாகும்.

நீங்கள் ஜனாதிபதியைத் தீர்மானிக்கின்ற வேட்பாளர்தானே! உங்களுக்கேன் விஞ்ஞாபனம்? என்ற கேள்வியை நடுவர் தொடுத்தபோது அநுர, மகேஷ் சேனாநாயக்கா போன்றவர்களும் வெளியிட்டுத்தானே இருக்கிறார்கள்; என்பது அவரின் பதிலாக இருந்தது.

தேர்தல் முறையில்தான் அவருக்குத் தெளிவில்லை; குழப்பம் என்றுவிட்டுவிடுவோம். அவர் நீண்ட அனுபவமுள்ள அநுபவசாலி. தான் அரசியல் துறையில் உயர்கல்வி கற்றிருப்பதாக கூறுகின்ற ஒருவர். ஒரு சராசரி மனிதன்கூட கூறமுடியாத பதிலை எவ்வாறு கூறினார்.

அவர்கள் தம்மை வெற்றியடையச் செய்யுங்கள். இவற்றையெல்லாம் செய்வோம்; என்று விஞ்ஞாபனம் வெளியிட்டிருக்கின்றார்கள். இவரும் என்னையும் ஜனாதிபதியாக்குங்கள், நான் இவற்றைச் செய்கிறேன்; என்றா விஞ்ஞாபனம் வெளியிட்டிருக்கின்றார்? அவர்களை ஒப்பிட்டு இவர் ஏன் அந்தப் பதிலைக் கூறினார்?

இவரது விஞ்ஞாபனத்தை அடுத்தவேட்பாளரிடம் கொடுத்து அவர்கள் அமுல் படுத்த வேண்டுமாம். ஆனால் அவை கோரிக்கைகளும் இல்லையாம். demand உம் இல்லை. request ம் இல்லை என்கின்றார்.

சமூகத்தின் சார்பில் போட்டியிடுகிறேன்; எனக்கூறிக்கொண்டு இவ்வாறு சொல்வது தன்னையும் தான் சார்ந்த சமூகத்தையும் கேலிக்குரியதாக்காதா?

இந்த விஞ்ஞாபனம் வெளியிடல் முஸ்லிம்களுக்கு கிடைத்த பொன்னான சந்தர்ப்பம் என்பதுபோல் கூறுகிறார். தமிழ்க்கட்சிகளின் 13 அம்ச கோரிக்கைகளுக்கு தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களில் கிடைத்த விளம்பரத்தில் 100 இல் ஒரு பங்கு விளம்பரமாவது கிடைத்ததா? ஐந்து லட்சம் முஸ்லிம் குடும்பங்களுக்கு அனுப்பி அவர்கள் என்ன செய்வது.

இதைவிட இவற்றை முஸ்லிம்களின் கோரிக்கையாக முன்வைத்து நேரடியாக ஒரு வேட்பாளருக்கு ஏன் ஆதரவு வழங்கமுடியாது? ஏன் வேட்பாளர் வேடம்?

தயவு இந்த சமூதாயத்தை எத்தனைபேர் எத்தனை பக்கம் ஏமாற்றுகிறீர்கள். பாவம் இந்த சமுதாயம்.

அரசியல்வாதிகளின் சுயநலத்திற்கு நான் எதிரானவன் அல்ல. அரசியல்வாதி சுயநலமே இல்லாத பொதுநலவாதியாக இருக்கவேண்டுமென்ற வரட்டுத் தத்துவம் நான் பேசுவதில்லை. ஏனெனில் அது நடைமுறைச் சாத்தியமல்ல.

இது கலீபா உமர் ( ரலி) அவர்களின் காலமல்ல. இங்கு அரசியலில் யாரும் அவ்வாறு இல்லை. அவ்வாறு யாராவது இருக்க முற்பட்டால் அவர்களுக்கு இந்த அரசியலோ, இந்த சமூகமோ இடம் கொடுக்காது. ஆனால் உங்கள் சுயநலம் பொது நலத்தை மேவாததாக இருக்கட்டும்.

சமூகத்திற்கு தீங்கு இல்லாதவரையில் எதை வேண்டுமானாலும் அனுபவித்துக்கொண்டு செல்லுங்கள்.

இந்தத்தேர்தல் இந்த சமூகத்திற்கு இக்கட்டான ஒருதேர்தல். இதைப் புரியாமல் வேதாந்தம் பேசிக்கொண்டு ஒரு கூட்டம் அலைகிறது. அதற்குள் நீங்களும் குளிர்காயாதீர்கள்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.